ஹீரோயின், ஃபைனான்ஸியர் டார்ச்சர்!



தலையில் துண்டு போட்டுக் கொண்ட தயாரிப்பாளர்!

மோசடி இல்லாத துறை இந்த உலகத்தில் இல்லை என்று சொல்லலாம். சினிமா மட்டும் விதிவிலக்கா என்ன?நாசர், மகேந்திரன் லீட் ரோலில் நடிக்கும் படம் ‘திட்டிவாசல்’.2015 மிஸ் இந்தியாவான ஈஷா அகர்வால் நாயகியாக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மு.பிரதாப் முரளி இயக்கியுளார். கே-3 சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீநிவாஸ்ராவ் தயாரித்துள்ளார்.ஹீரோயின் கொடுத்த டார்ச்சரால் தமிழ் சினிமாவை விட்டு ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் இதன் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாஸ்ராவ். நடந்தது என்ன? என்பதை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘‘நான் கன்னடத்திலும், தெலுங்கிலும் சில படங்களைத் தயாரித்திருக்கிறேன். தமிழ்ப்படங்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. அதன் காரணமாகவே தமிழ் சினிமாவில் படம் தயாரிக்க ஆசைப்பட்டேன். காசு, பணத்துக்காக படம் எடுப்பதாக இருந்தால் தெலுங்கிலேயே எடுத்து கல்லா கட்டியிருப்பேன். தரமான படம் எடுக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அந்த சமயத்தில் பிரதாப் முரளி ஒரு கதை சொன்னார். அது எனக்குப் பிடித்திருந்தது. அதுதான் ‘திட்டிவாசல்’.

 இது காடும் காடு சார்ந்த நல்ல கதை என்பதால் நாசர் நடித்தார். ஆரம்பத்தில் மேக்னா நாயுடுவை இதில் நடிக்க ஒப்பந்தம் செய்தோம். காட்டுப் பகுதியில் கதை நடக்கிறது என்பதை எல்லாம் சொல்லித்தான் ஒப்பந்தம் போட்டோம். எல்லாம் தெரிந்துதான் அவரும் ஒப்புக் கொண்டார். லொகேஷனிலிருந்து சற்றுத்தள்ளி இருக்கும் விருந்தினர் விடுதியில்தான் தங்கவேண்டியிருக்கும் என்பதை தெரிந்துதான் அவரும் நடிக்க ஒப்புக் கொண்டார்.

ஆனால்-படப்பிடிப்பு நடக்கும் தாளூர் என்கிற இடத்திற்குப் போனபின் எனக்கு ஸ்டார் ஓட்டல் வேண்டும் என்று படம் ஆரம்பித்த முதல் நாளே பிரச்னை பண்ணினார். கூடவே அடியாளை அழைத்து வந்து மிரட்டினார்.

ஏழு நாட்கள் நாசர் காம்பினேஷனில் காட்சிகளை எடுக்க வேண்டும். ஆனால் முடியவில்லை. படப்பிடிப்பு நின்றதால் பல கஷ்டங்கள், பல நஷ்டங்கள் ஏற்பட்டன. எனவே அவரை மாற்றி விட்டோம். இதனால் எங்கள் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அவர் ‘மஞ்சள்’ என்ற ஒரே ஒரு தமிழ்ப் படத்தில்தான் நடித்திருக்கிறார்.

அதற்குள் இவ்வளவு ஆர்ப்பாட்டம். எங்கள் படத்தில் நடிக்கவுமில்லை. முன்பணத்தையும் திருப்பித்தரவில்லை. இப்படி இருக்கும் நடிகைகளுக்கு யாரும் வாய்ப்பே தரக்கூடாது. அதன் பிறகு கமிட்டானவர்தான் ஈஷா அகர்வால். ஹீரோயின் பிரச்னையிலிருந்து தப்பித்தோம் என்ற நிலையில் இருந்த போது பண விவகாரத்தில் இன்னொரு பிரச்னை ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் ஐம்பது லட்சரூபாய் இருந்தால் படத்தை முடித்துவிடலாம் என்று ஸ்டேஜுக்கு வந்துவிட்டோம். இயக்குநர் பிரதாப் முரளி மூலம் சம்சுதீன் என்பவர் அறிமுகம் ஆனார். அவர் தனது ‘ரசூல் மார்க்கெட்டிங்’ என்கிற நிறுவனத்தின் மூலம் பணம் வாங்கிக் கொடுப்பதாக கூறினார்.

கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் போன்ற ஜாம்பவான்கள் நடித்த படங்களுக்கு பைனான்ஸ் வாங்கிக் கொடுத்திருப்பதாகக் கூறி நம்ப வைத்தார். ஐம்பது லட்ச ரூபாய்க்கு பிராசசிங் கட்டணம் ஐந்து லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் தரவேண்டும் என்று வாங்கிக் கொண்டார்.

எனக்கு அவர் மீது மனதின் ஒரு மூலையில் சந்தேகம் துளிர்த்தாலும் எங்கள் இயக்குநர் பிரதாப் முரளி அவரை நூறு சதவிகிதம் முழுதாக நம்பினார்.ஆனால் இதுவரை அவரிடமிருந்து எந்த விஷயமும் நகரவில்லை. ஒருவாரம், இரு வாரம் என பல மாதங்கள் கடந்தும் எங்களுக்கு பைனான்ஸ் கிடைக்கவில்லை.

வேறு வகையில் பணத்தைப் புரட்டி படப்பிடிப்பை முடித்தேன். என்னிடம் வாங்கிய ஐந்து லட்சத்து அறுபதாயிரம் ரூபாயும் ரிட்டர்ன் கிடைக்கவில்லை. இப்போது அந்த மோசடி ஆளை சட்டத்துக்கு முன் நிறுத்துவதற்காக சட்டபூர்வமான நடவடிக்கையில் இறங்க இருக்கிறோம்.

எனக்குள்ள கவலை எல்லாம் அந்த மோசடி ஆள் சம்சுதீன் என்பவர் இன்னும் எத்தனை பேரை ஏமாற்றி இருக்கிறாரோ என்பதுதான். அவரிடம் ஏமாந்த கடைசி ஆளாக நான் மட்டுமே இருக்க வேண்டும். அந்த மோசடி ஆளிடம், அவர் போன்ற ஆட்களிடம் யாரும் இனிமேலும் ஏமாறக்கூடாது என்ற ஆதங்கத்தில்தான் இந்த விஷயத்தை மீடியாவில் பகிர்ந்துகொள்கிறேன்’’ என்கிறார் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாஸ்ராவ்.

- எஸ்