பவர் பாண்டி



ராஜ்கிரண் ராஜ்ஜியம்!

சினிமா சண்டைக் கலைஞர் பவர் பாண்டியன்  வாழ்க்கையில் நடக்கும் பாசப் போராட்டமே கதை. அந்தக் கதாபாத்திரத்துக்கு ஒரு நல்ல தையல் கலைஞன் அளவெடுத்து தைத்த சட்டையைப் போல பொருந்துகிறார் ராஜ்கிரண்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு ஒரு சண்டைக்காட்சியில் நடித்ததற்காக பெருமைப்படுவது, சமூக விரோதிகள் மீது கோபம் கொள்வது, பேரக்குழந்தைகளுடன் பாசம் பொழிவது, மனைவியை நினைத்து ஏங்குவது, முன்னாள் காதலியை சந்தித்து குழந்தையாய் மாறுவது என அத்தனை மட்டத்திலும் உயர்மட்ட நடிப்பை இயல்பாக வழங்கியிருக்கிறார் ராஜ்கிரண்.

மது அருந்தக்கூடாது என்று பக்கத்து வீட்டு இளைஞனுக்கு அறிவுரை வழங்கிவிட்டு, ஒரு கட்டத்தில் அவனிடமே பீர் வாங்கிக் குடிப்பது காமெடி கலந்த மனித எதார்த்தம்.  அடக்கி வைத்திருந்த கோபத்தை மகனிடம் கொட்டித் தீர்க்கும்போது தன்மானம் தெறிக்கிறது.

‘இன்னும் உன் மனசுல நான் இருக்கேனா?’ என முன்னாள் காதலிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, பதில் வராததால், வீட்டுக்கே போய் நியாயம் கேட்கும் காட்சி அழகிய கவிதை.  நம்பிக்கையோடு தேசிய விருதுக்கு காத்திருக்கலாம் ராஜ்கிரண்!

ராஜ்கிரணின் முன்னாள் காதலியாக வரும் ரேவதி, வழக்கம்போல நடிப்பில் பின்னுகிறார். ராஜ்கிரணைச் சந்திக்கும் காட்சியில்  வசனம் இல்லாமல், முகபாவனையாலேயே ஆயிரம் அர்த்தங்களை புரியவைக்கிறார்.

மகளின் கேலி வார்த்தைக்குப்பின் ஒரு நடன நடை நடக்கிறாரே, அடேங்கப்பா!
இளம்வயது ராஜ்கிரணாக வருகிறார் தனுஷ். ஆரம்பமே அமர்க்களம். கபடிப்போட்டியில் ஜெயிப்பது, நாயகியிடம் வம்பு இழுத்தவர்களைப் புரட்டி எடுப்பது என அசத்தல் ஹீரோயிசம். காதலில் உருகுவதும், காதலியின் பிரிவு கண்டு கதறுவதும் சிறப்பான நடிப்பு.தனுஷின் காதலியாக வரும் மடோனா செபாஸ்டியன் நியாயமான காதலியாக உருகவைக்கிறார்.

பிரசன்னாவுக்கு இது ஒரு குறிப்பிடத்தகுந்த படம். கோடிக்கணக்கான மகன்களின் இயல்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அப்பாவின் மீது கோபப்பட்டாலும், பாசம் அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது.

ஆட்டோ பிடிக்க அவஸ்தைப்படும் அப்பாவை, அலுவலக வேலை நேரத்தில், காரில் வீட்டுக்கு அழைத்துச் செல்வது  ஒரு உதாரணம். பிரச்னை இல்லாத மனைவியாக, மருமகளாக வந்துபோகிறார் சாயாசிங்.முறை மாமன் மீது ஒருதலைக்காதல் கொள்ளும் கதாபாத்திரத்தில் வித்யுலேகா ராமன் கலகலப்பூட்டுகிறார்.

பக்கத்துவீட்டு இளைஞனாக வரும் ரின்சனுக்கு நல்ல கதாபாத்திரம். மகளின் காதலை சாமர்த்தியமாக எதிர்க்கும் அப்பாவாக ‘ஆடுகளம்’ நரேன். சண்டை இழுப்பதற்காக  சென்ட்ராயன். குழந்தை நட்சத்திரங்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இயக்குநராகவே வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன். நாயகனாக அலப்பறை கொடுக்கும் ரோபோ சங்கருடன் அவர் சம்பந்தப்பட்ட காட்சியும் கிச்சு கிச்சு. இயக்குநர் பாலாஜி மோகன் கவுரவ வேடத்தில் வருகிறார்.

மெச்சூரிட்டி நிறைந்த மகள் கதாபாத்திரத்தில் திவ்யதர்ஷினி மனம் கவர்கிறார். கிராமம், நகரம், தேசிய நெடுஞ்சாலை என வேல்ராஜின் கேமராவுக்குள் சிக்கிய அத்தனையும் சிறப்பு பெறுகின்றன.

தனுஷ், செல்வராகவன், ராஜுமுருகன் பாடல்களுக்கு ஷான் ரோல்டன்  இசையமைத்திருக்கிறார். இரண்டு பாடல்களை தனுஷ் பாடியிருக்கிறார்.
படத்தின் சிறப்புகளில் சிறப்பு சண்டைக் காட்சிகள்.

சில்வாவின் காட்சி அமைப்புகளில் வேக விறுவிறுப்பு. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கிறார் தனுஷ். பல குடும்பங்களில் நடக்கும் பாசப்போராட்டத்தைப்  பக்குவமாகவும் பொறுப்போடும் சொல்லியிருக்கிறார். படத்தில் ‘தட்டித் தூக்கிட்டோம்ல’ என்றொரு வசனம் வரும். தனுஷ் அப்படியே சொல்லிக் கொள்ளலாம்.