குப்பை மேட்டில் நடித்தேன், கோபுரத்தில் அமர்ந்தேன்!



‘அட்டு’ பிரபாகர் பரவசம்

சமீபத்தில் ரிலீசான படம் ‘அட்டு’, சின்ன படமாக இருந்தாலும் அனைத்துத் தரப்பினரின் அப்ளாஸையும் அள்ளியிருக்கிறது. ஹீரோவின் நண்பராக நடித்து ‘பளிச்’சென்று தெரிந்த பிரபாகருக்கு பாராட்டுகள் குவிகிறது.

“தெலுங்கில் சில படங்கள் பண்ணியிருக்கேன். ராம்கோபால் வர்மா படத்துலே கூட நடிச்சிருக்கேன். இருந்தாலும் தமிழில் நடிக்கலையேன்னு ஏங்கிக்கிட்டு இருந்தேன். அந்த ஏக்கத்தை போக்கிய படம்தான் ‘அட்டு’. டைரக்டர் ரத்தன்லிங்கா இந்த கதையை சொன்னதுமே எனக்கான கேரக்டர் இதுதான்னு முடிவெடுத்துட்டேன்.

குப்பை மேட்டில்தான் பெரும்பாலான படப்பிடிப்பு. காலையில் ஆறு மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிப்பாங்க. முடியுறதுக்கு நைட்டு பதினொண்ணு ஆயிடும். படப்பிடிப்பு முடிஞ்சதுமே ஆபீசுக்கு வந்து, அடுத்த நாள் ஷூட்டிங்குக்கு என்னென்ன ஏற்பாடுன்னு பேசுவோம்.

குப்பைமேடுன்னா வெறும் குப்பை இல்லை. 150 வருஷமா கொட்டப்பட்ட குப்பைகள். ஒரு பக்கம் நெருப்பு புகைஞ்சுக்கிட்டே இருக்கும். காலை வெச்சோம்னா கருகிடும். இரும்புக் கம்பி, பாட்டில் துண்டு, ஓடுன்னு கன்னாபின்னான்னு இருக்கும். எச்சரிக்கையா இல்லைன்னா செத்தோம்.

மூச்சுப் பிரச்சினை, இருமல், தும்மல்னு எங்க படப்பிடிப்புக் குழுவுக்கு ஏகத்துக்கும் சிரமம். ஒருநாள் தயாரிப்பாளர் ஸ்பாட்டுக்கு வந்து எங்களைப் பார்த்து கதறிட்டாரு. அதுக்கப்புறம் எங்க உழைப்பை புரிஞ்சுக்கிட்டு நல்ல ஊதியம் கொடுத்தார்.

மூணு ஆண்டு கஷ்டப்பட்டு எடுத்த படம் ‘அட்டு’. என்னோட எட்டு ஆண்டு போராட்டத்துக்கு கிடைச்ச வெகுமதி. இப்போ கிடைக்கிற பாராட்டுகளை நெனைச்சா, எல்லா கஷ்டமும் குப்பை எரிஞ்சு ஒண்ணுமில்லாமே போனமாதிரி ஆயிடிச்சி. இப்போ அதர்வாவோட ‘ஒத்தைக்கு ஒத்தை’ படத்தில் நடிக்கிறேன்” என்று உற்சாகமாகச் சொல்லும் பிரபாகர் வேறு யாருமல்ல, நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான நடிகர் மனின் தம்பி.

- சுரா