பிரச்சினையாகும் லாரி சவாரி!



‘சாட்டை’ மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அன்பழகன்.  ‘சாட்டை’ படத்தில் கல்வித்துறை மீது கடுமையான விமர்சனங்களை வைத்தவர். இயக்குநர் பிரபுசாலமனின் சிஷ்யரான இவர், இப்போது ‘ரூபாய்’ என்ற தனது இரண்டாவது படத்தையும் சமுதாய சிந்தனையுடன் இயக்கியுள்ளதாகச் சொல்கிறார். ரிலீஸுக்கு முன்பே படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.“டிரைலரைப் பார்த்தால் ஃபேமிலி சென்டிமென்ட் மாதிரி தெரியுதே?”

“என்னுடைய முதல் படத்தைப் போலவே, இப்படத்தின் கதையும் தலைப்பில்தான் இருக்கிறது. பயணப் பின்னணியில் நடக்கும் கதைதான் இது. தேனியில் இருக்கும் இரண்டு நண்பர்கள், சென்னையில் இருக்கும் அப்பா-மகள் பற்றிய கதை.  லவ், சென்டிமென்ட், சஸ்பென்ஸ், அத்துடன் ரூபாயைப் பற்றிய ஒரு சின்ன விஷயமும் படத்தில் இருக்கிறது.”

“கதை?”
“கயல் சந்திரனும், கிஷோர் ரவிச்சந்திரனும் நண்பர்கள். அவர்களுக்கு இருக்கும் ஒரே சொத்து லாரி. மூணு மாசமா லாரிக்கான தவணை கட்டலை. மூணு நாளைக்குள் பணம் கட்டலைன்னா லாரி பறிமுதல் செய்யப்படும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அந்த சமயத்தில் சென்னைக்கு ஒரு சவாரி கிடைக்கிறது.

அந்த சவாரி ஓட்டினால் ஒரு மாத தவணை செலுத்தி வண்டியை தக்க வைத்துக்கொள்ள முடியும். சென்னையில் சவாரி முடித்து திரும்பும் போது பிரச்சனையில் சிக்குகிறார்கள். அது என்ன பிரச்சனை? அந்த பிரச்சனையிலிருந்து மீள்கிறார்களா, இல்லையா என்பதுதான் கதை.”
“எதற்காக ‘கயல்’ சந்திரனை நாயகனாகத் தேர்வு செய்தீர்கள்?”

“இது ஒரு ஹீரோவுக்கான கதை கிடையாது. இந்தப் படத்தின் கதைக்கு உண்மையிலேயே ஒரு புதுமுகம் போதும். ‘கயல்’ படம் ஷூட்டிங் நடக்கும்போது ‘கயல்’ சந்திரனை மீட் பண்ணினேன். அப்போதே அவர் என்னுடைய கதைக்குப் பொருத்தமா இருப்பார் என்று தோன்றியது. அதன்பிறகு வேறு ஹீரோக்களிடம் கதை சொல்லவில்லை. என்னுடைய குருநாதரும் ஆசி கூறி அனுப்பி வைத்தார். 

இந்தப் படத்துக்காக ‘கயல்’ சந்திரனும், கிஷோர் ரவிச்சந்திரனும் நிஜமாகவே கனரக வாகனமான லாரியை ஓட்ட பயிற்சி எடுத்துக்கொண்டார்கள். கோயம்பேடு லாரி ரிரைவர்களுடன் தங்கி அவர்களின் மேனரிசங்களை உள்வாங்கி நடித்திருக்கிறார்கள்.”

“ஹீரோயின்?”
 “நெக்ஸ்ட் டோர் கேர்ள் என்கிற மாதிரி இதில் ‘கயல்’ ஆனந்திக்கு ரொம்ப சிம்பிளான கேரக்டர். அதே சமயம் ரொம்ப ஹானஸ்ட்டான ரோல். படத்துல அவருக்கு மேக்கப் கிடையாது. இந்தப் படத்தின் பெரும்  பகுதியை ஜன நெரிசல் மிகுந்த இடத்தில் எடுத்தோம். அந்த இடத்தில் கேரவன் நிறுத்தக் கூட இடம் இருக்காது. இன்றைய மார்க்கெட் நிலவரப்படி கேரவன் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார் ஆனந்தி. ஆனால் அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்தப் படம் அவருடைய கேரியரில் முக்கியமான படமா வரும்.”
“மீண்டும் சின்னி ஜெயந்த்?”

“ரொம்ப காலமாக ஹீரோ ஃப்ரெண்டா வந்துகொண்டிருந்தவருக்கு இதில் அப்பாவா புரொமோஷன் கொடுத்திருக்கிறேன். தள்ளுவண்டியில் இட்லி வியாபாரம் பண்ணுபவரா வர்றார். பழுத்த அனுபவசாலியின் நடிப்பு எப்படி இருக்கும்னு அவருடன் வேலை செய்தபோது புரிந்துகொள்ள முடிந்தது.  முக்கியமான கதாபாத்திரத்தில் ஹரீஷ் உத்தமன் வர்றார். அவருடைய டயலாக்கை ஒரு அரைப் பக்கத்துல எழுதிடலாம். ஆனால் எக்ஸ்பிரஷன்ல மிரட்டியிருப்பார்.”

“பாடல்கள் பெரிய வரவேற்பு பெற்றுள்ளதே?”
“இந்தப் படத்தோட கதை ஒரு பலம்னா, இன்னொரு பலமா இசையமைப்பாளர் இமானை சொல்லலாம். முத்து முத்தா நான்கு பாடல்கள். அனைத்துப் பாடல்களையும் யுகபாரதி எழுதியிருக்கிறார்.

முளைப்பாரி திருவிழாவை ‘டூக்கும்...டூக்கும்’ என்ற பாடலில் டீட்டெயிலா சொல்லியுள்ளோம். வழக்கமா ஒரு படத்துக்கு முளைப்பாரி தேவைப்பட்டால் ஆர்ட் டைரக்டர்கிட்ட சொல்லி ரெடி பண்ணுவாங்க. நாங்க ஆர்ட் டைரக்டரிடம் சொல்லாமல் அந்தப் பாடலை ஷூட் பண்ணிய கிராம மக்களிடம் சொல்லி முளைப்பாரி வைத்தோம். உள்ளூர் மக்களும் எங்களுக்காக ஆர்வத்தோட முளைப்பாரி வைத்து எடுத்து வந்தார்கள். திருவிழா காலங்களில் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஆன்மிகப் பாடலை போல் ‘டூக்கும்.... டூக்கும்’ பாடலும் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் பாடலாக மாறும்.

பின்னணி இசையும் சூப்பரா வந்திருக்கு. இளையராஜா ஒளிப்பதிவு. ரவிவர்மனின் உதவியாளர். பிலிம் இன்ஸ்டிடியூட்டில் என்னுடைய ஜூனியர். இந்தப் படத்துல அறிமுகம் செய்திருக்கிறேன். இந்தப் படத்தை சென்னையில் 70 சதவீதம் எடுத்தோம். அந்த வகையில் சென்னையை முழுசாப் பார்க்கலாம். தேனி, மூணாறு போன்ற இடங்களில் 30 சதவீதம் படப்பிடிப்பு நடைபெற்றது. இரண்டு மாறுபட்ட கோணங்களில் அருமையாக படமாக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு பெரிய இடத்துக்கு வருவார்.  

ஆர்ட் டைரக்டர் ஏ.பழனிவேல். கதைக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். எடிட்டர் நிர்மல். ‘சாட்டை’ படத்தில் அறிமுகப்படுத்தினேன். ‘சாட்டை’ படத்தில் எடிட்டருக்கான ஸ்கோப் குறைவாக இருந்திருக்கும். இந்தப் படத்தில் எடிட்டருக்கான ஸ்பேஸ் நிறைய இருக்கும். ஏன்னா, எடிட்டிங்கிற்கான மெட்டீரியல் அதிகம். ஃபைட் மாஸ்டர் மிராக்கிள் மைக்கேல். நடனம் நோபல். ‘காட் பிக்சர்ஸ்’ பிரபுசாலமன் சாருடன் ஆர்.பி.கே என்டர்டெயின்மென்ட் ஆர்.ரவிச்சந்திரன் இணைந்து தயாரித்திருக்கிறார்.”

“சினிமா, சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறீர்களா?”
“கண்டிப்பாக சினிமாவால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதுக்காக புரட்சி வெடிக்கும் என்று சொல்ல முடியாது. சில படங்களைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது நமக்குள் ஒரு தாக்கம் இருக்கும். நம்மை அறியாமல் இதயம் கனக்கும்.

அந்தக் கனத்தை இந்தப் படம் கொடுக்கும். என்னுடைய படங்களில் மக்களைவிட்டு வெளியே போய் அந்நியமான விஷயத்தை தொடமாட்டேன். படம் பார்க்கும் ரசிகர்கள் படத்துக்குள் தன்னை உணர வேண்டும். படத்துல வர்ற கேரக்டரை எங்கேயோ ஒரு இடத்தில் சந்தித்து இருக்கணும். அந்தப் பொறுப்போடுதான் கதையைத் தொடுவேன். அது இதில் இருக்கும்.”

“மேடையில் புரட்சிகரமாகப் பேசும் இயக்குநர்கள், அந்த சிந்தனைகளை தங்கள் படைப்புகளில் காட்டுவதில்லையே?”“சமீபத்தில் கேரளாவில் சக்கைப் போடு போட்ட ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தை ஞாபகம் வைத்து கேட்கிறீர்கள். தமிழில் அப்படி யாருமே இல்லை என்று சொல்ல முடியாது. மேடையில் முழங்கும் அதே புரட்சிகரமான கருத்துக்களை ஜனநாதன் போன்ற இயக்குநர்கள் தொடர்ந்து தங்களுடைய படங்களில் பரப்புரை செய்கிறார்கள்.

சிலர் அப்படி இல்லாமல் இருக்க காரணம், இயக்குநருக்கான சுதந்திரம். ஏன்னா ஒரு கதையை இயக்குநர் மட்டுமே முடிவு செய்துவிடுவதில்லை. அதில் நடிக்கும் ஹீரோ, தயாரிப்பாளர் அடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு பிடிக்கணும். அதன் பிறகு சென்சார் போர்டுக்கு பிடிக்கணும். இன்னும் ப்ளூ கிராஸ் மாதிரி நிறைய அமைப்புகளுக்கு பிடிக்கணும்.

சதுரங்க விளையாட்டில் இருக்கிற காய்கள் மாதிரிதான் இயக்குநர்களின் நிலைப்பாடு இருக்கிறது. அதையும்தாண்டி சிலர் பண்ணுகிறார்கள். எனக்குத் தெரிந்தவரை தமிழில் வெரைட்டியான படங்கள் வந்துகொண்டிருக்கிறது. நம்மிடம் திறமைசாலிகளும் இருக்கிறார்கள், அரைத்த மாவை அரைக்கிறவர்களும் இருக்கிறார்கள்.”

- சுரேஷ்ராஜா