கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஹீரோவாக களமிறங்கும் படம்!



கிரிக்கெட் வீரர் சச்சின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘சச்சின்’ படம் வெளிவந்து சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கும் வேளையில், கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஹீரோவாக களமிறங்கியிருக்கும் படம் ‘டீம்-5’. இந்தப் படத்தை முன்னணி இயக்குநர்களிடம் சினிமா பயின்ற சுரேஷ் கோவிந்த் இயக்குகிறார். போஸ்ட் புரொடக்‌ஷனில் பிஸியாக இருந்த அவர் தயாரிப்பாளர் ராஜ் ஜக்கரியாவிடம் பேசுங்கள் என்று அறிமுகம் செய்து வைத்தார்.
“டீம் - 5 படத்தைப் பற்றி சொல்லுங்களேன்?”

“ரெட் கார்பெட் பிலிம்ஸுக்கு இது ஐந்தாவது படம். ஏற்கனவே ‘கடவுள் பாதி மிருகம் பாதி’, ‘அன்வர்’ போன்ற படங்களை தயாரித்துள்ளோம். பைக் ஸ்டண்டை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பைக் ஸ்டண்ட் ஒரு தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கு விருதுகளும், பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்த விஷயம் மக்களுக்கு பெரிதாக போய்ச் சேரவில்லை. இந்தப் படம் மூலம் மக்களுக்கு அந்த விளையாட்டை தெரியப்படுத்துவதே நோக்கம்.”

“கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்?”
“கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் என்னுடைய குடும்ப நண்பர். அவரிடம் நடிக்க அழைத்த போது ஆரம்பத்தில் மறுத்தார். கதையைக் கேட்ட பிறகு உங்கள் முடிவை சொல்லுங்கள் என்றோம். இரண்டு மணி நேரம் பொறுமையாக கதை கேட்டார். அதன் பிறகு ஒரு நடிகனுக்குரிய நடனம், சண்டை, நடிப்பு என்று அனைத்து பயிற்சிகளையும் முறைப்படி எடுத்துக்கொண்டார். பைக் டீமின் லீடராக வர்றார். பைக் ரேஸ் என்றால் ஸ்டண்ட்டுக்கு முக்கியத்துவம் இருக்கும். அந்த வகையில் ரிஸ்க் எடுத்து பைக் ரேஸ் காட்சிகளில் நடித்திருக்கிறார்.”
“நிக்கி கல்ராணி?”

“தென்னிந்தியாவின் மோஸ்ட் வாண்டட் ஆர்டிஸ்ட். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று எல்லா மொழியிலும் இப்போது நிக்கிதான் பெஸ்ட் ஆர்டிஸ்ட்னு பேர் வாங்கியிருக்காங்க. சினிமாவை புரபஷனா பார்க்கிறவங்க கம்மி. ஆனால் நிக்கி பக்கா புரபஷனல் ஆர்டிஸ்ட்டாதான் செட்டுக்கு வருவார்.

பங்ச்சுவாலிட்டி போன்ற விஷயங்களில் முதலிடத்தில் இருப்பார். நிக்கியை டைரக்டர் ஆர்டிஸ்ட் என்று சொல்லலாம். இதில் எக்ஸிகியூட்டிவ் கேரக்டர்ல வர்றார். இன்னொரு நாயகியாக பேர்லி மேரி நடிக்கிறாங்க. கேரள மக்கள் அனைவருக்கும் டிவி மூலம் பரிச்சயமானவர். இந்தப் படத்தின் மூலம் சினிமா பிரவேசம் செய்துள்ளார். இவர்களோடு பிரபல மராட்டிய நடிகர்  தேஷ் பாண்டே முக்கியமான கேரக்டர்ல வர்றார்.”
“படத்துல என்ன மெசேஜ்?”

“இப்போதுள்ள இளைய தலைமுறை பாக்கியசாலிகள். 80களில் வீட்டுக்கு ஒரு பிள்ளையாக இருந்தாலும் கேட்டது கிடைக்காது. ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. பிள்ளைகளுக்கு தேவைகளுக்கு மீறி சலுகைகள் கிடைக்கிறது. அப்பா மாநகரப் பேருந்தில் போனாலும் பிள்ளைக்கு ட்யூக், யமகா என்று காஸ்ட்லி பைக் வாங்கித் தருகிறார்கள்.

பிள்ளைகளின் மனம் நோகக்கூடாது என்று நினைக்கும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து அவர்களைப் பாதுகாப்பாக வளர்க்க வேண்டிய அவசியத்தைச் சொல்லியுள்ளோம்.”“உங்க டீம் பற்றி சொல்லுங்களேன்?”

“மல்லுவுட்டில் இப்போது இசையமைப்பாளர் கோபி சுந்தர் காட்லதான் அடை மழை. நான்கு பாடல்கள் பிரமாதமா கொடுத்திருக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர்களிடம் வேலை பார்த்த சஜீத் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். ஆஸ்திரேலியா, சென்னை, கேரளா, கோவா உள்பட ஏராளமான லொகேஷன்களில் படப்பிடிப்பு நடந்தது.

கதையின் மூட் கெடாதளவுக்கு மிக அற்புதமாக படமாக்கியிருக்கிறார். பைக் ரேஸை வைத்து ஹாலிவுட்ல  படங்கள் வந்திருக்கு. ஆனால் இந்த மாதிரியான படம் நம்முடைய ஆடியன்ஸுக்கு புதுசா இருக்கும். தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு த்ரில்லிங்கான செம விருந்து காத்திருக்கு.”

- சுரேஷ்ராஜா