பாகுபலி ராஜமவுலியிடம் வேலை பார்த்த பழனி!



‘பாகுபலி’ ராஜமவுலியின் அசிஸ்டென்ட் என்பதாலேயே பழனிக்கு பெரிய மவுசு. பழனி இயக்கியிருக்கும் ‘விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல்’ படத்துக்கு திடீர் மார்க்கெட் ஏற்பட்டிருப்பதற்கு ‘பாகுபலி’யும் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

நாக அன்வேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் ஹீரோயின் ஹீபா பட்டேல். வி.பிரபாகர் வசனம் எழுதியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் பழனி. அவரிடம் பேசினோம்.“நீங்க அக்கட தேசத்திலிருந்து இங்கே வந்திருக்கீங்களா?”

“இல்லைங்க சார். நான் சேலத்தில் பழுத்த மாம்பழம். சினிமா ஆசையிலே மெட்ராசுக்கு வந்தேன். இங்கே வாய்ப்புகள் சரியா அமையாததாலே ஆந்திராவுக்கு போய் முயற்சிகளைத் தொடர்ந்தேன். என்னோட அதிர்ஷ்டம் ராஜமவுலி சார் கிட்டே வேலை பார்க்கிற வாய்ப்பு கிடைச்சது. அவருக்கு என் மீது பிரியம் ரொம்பவும் அதிகம். என்னை ரொம்ப நல்லா கவனிச்சிக்கிட்டாரு. சின்னச் சின்ன விஷயங்களைக்கூட சிரத்தையெடுத்து கத்துக் கொடுப்பாரு.”

“ஒரு தமிழர், தெலுங்குப் படங்களில் போய் அசிஸ்டென்டா வேலை பார்த்தது சிரமமா இல்லையா?”“சினிமாவுக்கு மொழி ஒண்ணும் பெரிய தடை இல்லை. ஹாலிவுட்டில் விட்டாலும் நாம போய் பக்காவா ஒர்க் பண்ணிடுவோம். இந்தியா முழுக்கவே இப்போ எல்லா இண்டஸ்ட்ரியிலும் தமிழ் ஆட்கள்தான் சினிமாவின் தொழில்நுட்ப வேலைகளில் கலக்கிக்கிட்டு இருக்காங்க. எனக்கு என்ன சிரமமா இருந்ததுன்னா, கல்யாணம் ஆகியும் பல வருடங்களுக்கு நான் ஹைதராபாத்தில் பேச்சுலர் லைஃபே வாழவேண்டியதாயிடிச்சி.

என்னோட மனைவி இங்கே சொந்த ஊரிலே இருப்பாங்க. நாங்க பிரிஞ்சி இருந்ததுதான் சிரமமா இருந்ததே தவிர, வேலையிலே பெருசா சிரமம் கிடையாது.”“இந்தப் பட வாய்ப்பு?”“இது தெலுங்கு, தமிழ் இருமொழிகளிலும் தயாராகும் படம். தயாரிப்பாளர் தெலுங்கு இண்டஸ்ட்ரியில் ஃபேமஸ் ஆனவர்.

இந்தப் படத்தை அவர் ஆரம்பிச்சப்போ நிறையபேர் தயாரிப்பாளர் கிருஷ்ணா சாரிடம் போய், ‘எதுக்கு ஒரு தமிழ் ஆளை டைரக்டரா போடுறீங்க, நம்ம ஆளையே போடக்கூடாதா?’ன்னு கேட்டாங்க. கிருஷ்ணா சார்தான் பிடிவாதமா, ‘நான் திறமையைத்தான் பார்ப்பேன். எங்கிருந்து வந்தாங்கன்னு பார்க்க மாட்டேன்’னு உறுதியா நின்னு என்னை டைரக்டர் ஆக்கியிருக்கிறார். அவரோட மகன்தான் ஹீரோ நாகா. அவரிடமும் கொஞ்சம் பேசுங்களேன்.”

சட்டென்று, நாகாவின் பக்கமாக நம்மை திருப்பிவிட்டார்.“உங்க முதல் படமே தமிழிலும் வெளியாகுது...”“எங்க ஃபேமிலிக்கே தமிழ் சினிமாவோட கனெக்‌ஷன் இருக்கு. என்னோட அப்பா, தமிழில் பெரும் வெற்றி பெற்ற ‘செந்தூரப்பூவே’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தவர். அவர் ஹிட் ஆன எல்லா தமிழ்ப் படத்தையும் பார்த்துவிடுவார்.

என் அம்மா ஒரு படி மேலே. டிவியில் நான் ஏதாவது தெலுங்குப் படம் பார்த்துக்கிட்டு இருந்தால் கூட, ரிமோட்டை பிடுங்கி ஏதாவது தமிழ்ப்படம் வைப்பார். நடிப்பை கத்துக்கணும்னா, சினிமாவை புரிஞ்சுக்கணும்னா தமிழ்ப் படம் பாரு என்று அடிக்கடி அம்மா சொல்லுவாங்க. அப்பா, அம்மா இருவரும் இதுபோல சொல்லிச் சொல்லியே எனக்கு தமிழ் சினிமா மீது காதல் வந்துவிட்டது. இப்போ தமிழிலும் ஹீரோவா அறிமுகமாவது ரொம்ப சந்தோஷம்.”

- எஸ்