தல படத்தில் கபிலன்!



வைரமுத்துவின் வாரிசு. கவிதைத் தொகுப்புகள், திரைப்படப் பாடல்கள், சிறுகதை மற்றும் நாவல் என்று பல தளங்களில் இயங்கினாலும் தன் தலையில் எந்த கிரீடத்தையும் வைத்துக் கொள்ளாத எளியவர் கபிலன் வைரமுத்து.‘கவண்’ படத்தின் திரைக்கதை ஆசிரியரான இவர் அஜீத் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளார். அதைப் பற்றி அவரிடம் கேட்டோம்.

‘‘இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியதோடு மட்டுமில்லாமல் இந்தப்படத்தின் கதை விவாதத்திலும், திரைக்கதை எழுதுவதிலும் பங்கேற்கும்படியான வாய்ப்பு கிடைத்தது. சினிமாவின் உயிர் நாடி அதன் திரைக்கதை என்பதை நம்புபவன் நான். பாடலாசிரியராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் திறம்பட நான் பணிபுரிய இயக்குனர் சிவா என் மீது முழு நம்பிக்கை வைத்து வேண்டிய சுதந்திரத்தை தந்தார்.

அதனால் தி பெஸ்ட் என்னால் கொடுக்க முடிந்தது. அவரின் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் அவரை மேலும் பல உயரங்களுக்கு நிச்சயம் கொண்டு போகும். இந்தப்படத்தின் மூலமாக அஜீத் சாரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவருடன் பழகியது ஒரு நல்ல புத்தகத்தை படித்த உணர்வைத் தந்தது. அவரது தொலைநோக்குப் பார்வை, தொழில் பக்தி, உணவுப் பழக்க வழக்கம், கடுமையான உடல் பயிற்சி, ரசிகர்கள் மீது வைத்திருக்கும் அன்பு, தயாள குணம்  ஆகியவை அவர் மேல் நான் வைத்திருந்த மரியாதையை மேலும் பெரிதாக்கியது.

அக்‌ஷரா ஹாசன் தந்தைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் இந்தப் படத்தில் தன் திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். சினிமா நாலெட்ஜ் உள்ளவர். சினிமாவைப் பற்றி அவரிடம் பேசிக்கொண்டே இருக்கலாம்.

பல்கேரியா மற்றும் செர்பியாவின் கடும் குளிரிலும் உறையும் பனியிலும் இந்தப் படக் குழுவினர் கடுமையாக உழைத்தனர். சமீபத்தில் படத்தின் சில காட்சிகளைப் பார்க்க நேர்ந்தது. நான் எதிர்பார்த்ததை விட காட்சி அமைப்புகள் அருமையாக அமைந்துள்ளன. ரசிகர்களுடன் இணைந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி திரை அரங்குகளில் பார்க்க உற்சாகத்துடன் தயாராக உள்ளேன்” என்கிறார் கபிலன் வைரமுத்து.

- சுரேஷ்ராஜா