காவல் தெய்வம் மூணு பேரு!



பட்டையக் கெளப்புது பிரபுதேவா பாட்டு!!

ஜிப்ரான், அனிரூத் வரிசையில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து வருகிறார் அம்ரீஷ். அடுத்து பிரபுதேவா நாயகனாக நடிக்கும் ‘யங் மங் சங்’ படத்துக்கு அசத்தலாக இசையமைத்திருக்கிறாராம். லட்சுமி மேனன் அதிரடி தோற்றத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். தவிர்த்து தங்கர்பச்சானுக்கு அசத்தல் வேடமாம்.

சித்ரா லட்சுமணன், கே.ராஜன், ஆர்.ஜே.பாலாஜி, ‘பாகுபலி’ பிரபாகர், ‘கும்கி’ அஸ்வின் என்று நட்சத்திரப் பட்டாளம் இறைக்கப்பட்டிருக்கும் படம் இது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.எஸ்.அர்ஜுன். இவர் ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ போன்ற படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.

பிரபுதேவா முதன்முறையாக பாடல் எழுதியிருக்கும் படமும் இதுதான். ‘அய்யனாரா வந்துட்டாங்க, இங்க பாரு, காவல் தெய்வமா மூணு பேரு’ என்கிற அந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடிக்கும் என்கிறார்கள். இந்தப் பாடலை சங்கர் மகாதேவன் பாடியிருக்கிறார். மும்பையில் ரிக்கார்டிங் நடந்தது.

பாடலைப் பாடி முடித்ததுமே பிரபுதேவாவுக்கு போன் போட்டு பாராட்டித் தள்ளிவிட்டாராம் சங்கர் மகாதேவன். இந்தப் பாட்டு நிச்சயம் எல்லா இடத்திலும் ஒலிக்கும், வாழ்த்துக்கள் என்று பிரபு தேவாவை வாழ்த்தியதோடு இல்லாமல் இசையமைப்பாளர் அம்ரீஷையும் ஏகத்துக்கும் பாராட்டிவிட்டார்.

படத்தின் பாடல்கள் வெளியாவதற்கு முன்பே இண்டஸ்ட்ரி யில் ஹிட் ஆகியிருப்பதால் குஷியாக இருக்கிறார் அம்ரீஷ்.“நான் முதலில் இசையமைச்ச ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துல எல்லா பாடல்களும் அதிரிபுதிரியாக இருந்தது என்று சொன்னார்கள். அந்தப் படத்துடன் ஒப்பிட்டுப் பேசமுடியாதளவுக்கு இந்தப் படத்தில் பாடல்கள் வெரைட்டியாக வந்திருக்கு” என்று ஆரம்பித்தார்.

“பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு தொடர்ச்சியா இசையமைக்கிறதைப் பத்தி என்ன ஃபீல் பண்றீங்க?”“பெரிய நடிகர்களுக்கு பாடல்களை உருவாக்குவது சவாலான விஷயம். ஏன்னா, பாடல்களை கண்டிப்பா ஹிட்டாக்க வேண்டும் என்ற ரெஸ்பான்ஸிபிலிட்டி இருக்கும். அறிமுக நடிகர்களுக்கு இசையமைக்கும்போது இந்த டென்ஷன் இல்லாம வேலை பார்க்கலாம். எல்லா விதமான பாடல்களும் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.”

“பிரபுதேவா?”
“சின்ன வயசுலேயே சினிமாவில் நிறைய சாதிச்சவர். படங்களில் கலகலப்பான பிரபுதேவாவை ரசிகர்கள் பார்த்திருப்பாங்க. நிஜத்தில் ரொம்பவே அமைதியானவர். அவருடன் இணைந்ததன் மூலம் சினிமாவைப் பற்றிய டெக்னிக்கல் அம்சங்களை அதிகமாக கற்றுக்கொள்ள முடிந்தது.”
“இந்தப் படம் பத்தி என்ன நினைக்கிறீங்க?”

“இயக்குநர் எம்.எஸ்.அர்ஜுன் ரொம்பவும் உத்வேகம் கொண்ட ஓர் இயக்குநர். நட்சத்திரப் பட்டாளம் நிறைந்திருக்கும் இந்தப் படத்தில் அவரவர் திறமையை மிகச் சரியாக பயன்படுத்தியிருக்கிறார். புதுசா இசையமைக்க வந்திருக்கும் ஒரு புதுமுகத்தைப் போல்தான் ஆர்வத்தோடு இந்தப் படத்துக்கு இசையமைத்து வருகிறேன். இந்தப் படத்தில் என்னுடைய இசை பிரம்மாண்டமாக வரக் காரணம் என்னுடைய தயாரிப்பாளர்கள் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன். அவர்களுக்கு என் நன்றி.’’

- சுரேஷ்ராஜா