இனிக்கும் மருந்து!



வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகளை  இறக்குமதி செய்து நம் தலையில் கட்டி உயிருக்கு உலைவைக்கும் மருந்துலக மோசடிகளை அம்பலப்படுத்த வருகிறது ‘ஒளடதம்’ படம்.  இந்த அழகு தமிழ் டைட்டிலுக்கு ‘மருந்து’ என்று பொருள்.

தகவல் தொழில்நுட்பம் முடித்துவிட்டு சம்பாதித்த பணத்தில் இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார் நேதாஜி பிரபு. கதை, தயாரிப்பு மற்றும் நாயகன் என முக்கிய பொறுப்பும் இவருடையதே. ஜோடி சமைரா. வீ.தஷி இசையமைப்பில் உருவாகும் இந்தப்படத்தை கீழக்கரை அஜ்மல்கான் தனது ரீபா நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்.

“மருந்துகளில் கலப்படம் செய்வது ஒருவகை, மருந்துக்கலவைக்கான அளவுமுறைகளிலேயே முறைகேடு செய்வது இன்னொருவகை. அந்த அநியாயத்தைச் சுட்டிக்காட்டுகிறது எங்களின் படம். மிகவும் கடின முயற்சி எடுத்து, ஒரிஜினல் மருந்துக் கம்பெனியில் படமாக்கியுள்ளோம். இந்தப்படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் மருந்து குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படும்.

‘காம்பினேஷன் என்ன? எக்ஸ்பயரி என்ன? கம்பெனி என்ன?’ என்றெல்லாம் படம் பார்த்துவிட்டு நோயாளிகள் கேட்கும் கேள்விகளைக் கண்டு மருந்துக் கடைக்காரர்கள் அசந்துபோவார்கள். போலி கலவையில் மருந்து தயாரிப்பவர்கள் மனசாட்சிக்கு பயந்து திருந்துவார்கள்’’ என்று நம்பிக்கையோடு பேசுகிறார் நேதாஜி பிரபு.

- நெல்பா