அஜித்தின் ஃபேவரைட் கேமராமேன்!‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என்று அஜித்தோடு ஹாட்ரிக் அடித்திருப்பவர் இயக்குநர் சிவா மட்டுமல்ல. ஒளிப்பதிவாளர் வெற்றியும்தான். ‘விவேகம்’ ஒர்க்குக்காக ஹாலிவுட் ரேஞ்சில் பாராட்டுகளை அள்ளிக் கொண்டிருப்பவரை ‘வண்ணத்திரை’க்காக சந்தித்தோம்.
“வெற்றியோட வெற்றிப் பயணம் பத்தி சொல்லுங்க!”

“சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் நாதகவுண்டன் பாளையம். அப்பா விவசாய சங்கத் தலைவர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். எனக்கு சின்ன வயதிலேயே ஒளிப்பதிவுத் துறை மீது ஆர்வம் அதிகம். அந்தக் காலகட்டங்களில் ‘ஏ பிலிம் பை ஆபாவாணன்’,  ‘ஆர்.கே.செல்வமணி’  என்றும் ‘ஏ பிலிம் பை பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள்’ என்றும் டைட்டில் கார்டில் போடும்போது எனக்குள் இருந்த சினிமா ஆர்வம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.

ஏன்னா, மற்ற படங்களுக்கும் பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களின் படங்களுக்கும் டெக்னிக்கல் ரீதியாக நிறைய வித்தியாசம் இருக்கும். சினிமாவுக்குள் நுழையணும்னா இப்படியும் ஒரு வழி இருக்குன்னு அந்தப் படங்களைப் பார்த்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். வீட்ல என்னுடைய விருப்பத்தை சொன்னேன். டிஎப்டி என்பது முறைப்படியான கல்வி என்பதால் வீட்டில் அனுமதித்தார்கள். இன்ஸ்டிடியூட்டிலிருந்து வெளியே வந்ததும் ஒளிப்பதிவாளர் சரவணன் சாரிடம் உதவியாளராக சேர்ந்தேன். அவரிடம் ‘வல்லரசு’, ‘சங்கமம்’, ‘வாஞ்சிநாதன்’, ‘ஆஹா’ உள்பட ஆறேழு படங்கள் வேலை பார்த்தேன்.”

“முதல் படம்?”
“நானும் இயக்குநர் கதிரும் உதவியாளராக இருக்கும்போதே நண்பர்கள். அந்த அடிப்படையில் கதிர்  இயக்கிய ‘தெனாவட்டு’ படத்தில் ஒளிப்பதிவாளராக என்னுடைய பயணத்தை ஆரம்பித்தேன். அதன் பிறகு ‘காஞ்சனா’, ‘வேங்கை’, ‘மாசிலாமணி’, தெலுங்கில் சில படங்களில் வேலை பார்த்தேன்.”

“இயக்குநர் சிவா?”
“நானும் சிவாவும் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவுத் துறையில் ஒரே செட். அவரும் ஒளிப்பதிவாளராக பதினைந்து படங்கள் பண்ணியிருக்கிறார். ஒரு கட்டத்தில் சிவாவுக்கு தெலுங்கில் கோபிசந்த் நடித்த ‘செளரியம்’ படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது சிவா ஒரே சமயத்தில் டைரக்‌ஷனும் கேமராவும் பண்ண விரும்பவில்லை.

அந்த சமயத்தில் அவருடைய படத்தில் கேமராமேனாக ஒர்க் பண்ண அழைத்தார். அந்தப் படம் பெரிய ஹிட் அடித்தது. அதன் பிறகு சிவாவுடன் மட்டுமே  ‘சிறுத்தை’ தவிர ஆறு படங்கள் சேர்ந்து பணியாற்றியுள்ளேன்.”
“அஜித்தோட ஃபேவரைட் ஆயிருக்கீங்களே?”

“நண்பர் சிவா ‘வீரம்’ படம் பண்ணும்போது அந்த டீம்ல என்னையும் இணைத்துக் கொண்டார். அதுதான் என் சினிமா கேரியரில் பெரிய ப்ரேக்காக நினைக்கிறேன். ஏன்னா, அதற்கு முன்னாடி நான் பண்ணிய படங்கள் அனைத்துமே மீடியம் பட்ஜெட் படங்கள். அஜித் படங்கள் பண்ணும் போது சிவா என்னையும் இணைத்துக் கொண்டது சந்தோஷமா இருந்தது.

அஜித் சாரும் என்னை உடனே ஏற்றுக் கொண்டார். அந்தப் படத்தில் என்னுடைய ஒர்க் அஜித் சாருக்குப்  பிடித்திருந்தது. அதன் மூலம் ‘வேதாளம்’  படத்தில் வாய்ப்பு கிடைத்தது.”“மீண்டும் அஜித்துடன் ‘விவேகம்’ படத்தில் வேலை செய்த அனுபவம் எப்படி இருந்தது?”

“ஒளிப்பதிவைப் பொறுத்தவரை ‘விவேகம்’ படத்தில்தான் எனக்கு  அதிகமாக  பாராட்டு கிடைத்தது. அதுக்குக் காரணம் ஜானர் முற்றிலும் வேறுவிதமாக இருந்தது. ஹாலிவுட் ஸ்டைலில் படம் பண்ணணும் என்று முடிவானதும் அதற்கான வேலைகளில் கடுமையாக என்னை ஈடுப்படுத்திக் கொண்டேன். லைட்டிங், பிரேமிங் புதுசா இருக்கணும் என்று தெளிவாக இருந்தேன். அதற்கு நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கு.

‘வேதாளம்’ படம் முடிந்ததும் அஜித் படம்  பண்ணப்போகிறோம் என்று முடிவாகிவிட்டது. சிவா ‘நாட்’ ரெடியானதும் என்னிடம் ஷேர் பண்ணுவார். ஜேம்ஸ் பாண்ட் டைப்ல க்ரைம் த்ரில்லர் சப்ஜெக்ட் பண்ணலாம் என்றார். அவர் சொன்ன அந்த லைன் இன்ட்ரஸ்ட்டிங்காக இருந்தது. அதுக்குக் காரணம் தமிழில் அப்படி ஒரு படம் வெளிவரவில்லை. அஜித் சார் லுக்கும் ஹாலிவுட் ஸ்டைலுக்கு பொருத்தமாக இருந்ததால் நல்லா இருக்கும் என்று நினைத்தோம். ‘விவேகம்’ படத்தின் கதை கேட்கும் போதே நல்லா இருந்தது.

கதை ரெடியானதும் இந்தியாவிலேயே ஏதாவது ஃபாரீன் செட் போட்டு எடுத்துக்கலாம் என்று டிஸ்கஸ் பண்ணினோம். ஆனால் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து முழுப் படமும் வெளிநாட்டில் எடுத்துக்கலாம் என்றார்கள். தமிழில் இதுவரை பார்க்காத லொகேஷனாக இருக்க வேண்டும் என்று முடிவு பண்ணி சில ஏஜென்சிகளை தொடர்பு கொண்டோம். கிழக்கு ஐரோப்பாவில் அவ்வளவாக இந்திய சினிமா எடுக்கவில்லை என்று சொன்னார்கள்.

பல்கேரியா, ஆஸ்திரியா, செர்பியா லொகேஷன்களை முதன்முறையாகப் பார்க்கும் போதே புதுசா இருந்தது. அந்த நாடுகளைப் பொறுத்தவரை என்ன ஸ்பெஷல்னா எல்லா நாடுகளுக்கும் சாலை வழியாக ஐந்து மணி நேரம் பயணம் செய்தால் இன்னொரு நாட்டுக்கு போய் விட முடியும். விசா நடைமுறையும் எளிதாக இருந்தது.

பல்கேரியாவில் நிறைய ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பு நடப்பதால் எக்யூப்மென்ட்ஸும் சிரமம் இல்லாமல் கிடைத்தது. இப்படி எல்லாமே சாதகமாக இருந்தது. கன்ட்ரோல் ரூம் ஆபீஸ் மட்டும்தான் செட். மற்றபடி முழுப் படத்தையும் ஃபாரீன்ல எடுத்தோம். ஒவ்வொரு நாட்டில் பண்ணும்போதும் லோக்கல் டெக்னீஷியன்கள் எங்களோடு இணைந்து பணியாற்றியதோடு தமிழ்ப் படத்தில் வேலை செய்வதை பெருமையாக எண்ணினார்கள்.”

“உங்க ஒளிப்பதிவை பார்த்துட்டு அஜித் என்ன சொன்னார்?”“ஒளிப்பதிவாளராக இந்தப் படத்தில் எனக்கு பெயர் கிடைக்கும் என்று ஆரம்பத்தில் இருந்தே  சொல்லிக்கொண்டே இருந்தார் அஜித் சார். முதலில் பாடல் காட்சியை படமாக்கினோம். அவருக்குப் பிடித்திருந்தது. எந்தக் காட்சி எடுத்தாலும் ஒவ்வொரு கட்டத்திலும் என்னை உற்சாகப்படுத்துவார்.

அவருக்கு போட்டோகிராபி நாலெட்ஜ் இருப்பதால் என்னுடைய லைட்டிங் பேட்டர்ன் பார்த்துவிட்டு வெகுவாகப் பாராட்டுவார். இதற்கு முன் ‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களிலும் பாராட்டினார். அது பொதுவான பாராட்டு. ஆனால் இந்தப் படத்தில் என்னுடைய ஒர்க் பார்த்துவிட்டு மனம் திறந்து பாராட்டினார். கேமராமேனாக பெரிய பெயர் கிடைக்கும் என்றார்.

இப்போது இருக்கும் மாஸ் ஹீரோக்களில் அஜித் சாரும் ஒருவர். அவருடன் வேலை பார்க்க வேண்டும் என்று எல்லா டெக்னீஷியன்களுக்கும் ஆசை இருக்கும். கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருடன் ஒரு போட்டோவாவது எடுக்க முடியாதா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் அஜித் படம் பண்ண முடியுமா என்று ஏங்கியிருக்கிறேன். ஆனால் இப்போது தொடர்ச்சியாக மூன்று படம் பண்ணியதே பெரும் பாக்கியம்.” “இளம் ஒளிப்பதிவாளர்களை கவனிக்கிறீர்களா?”

“சமீபத்தில் ‘மாநகரம்’ பார்த்தேன். சூப்பர்! வேலை பளுவால் நிறைய படங்கள் பார்க்கமுடியவில்லை. ‘8 தோட்டாக்கள்’, ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘குரங்கு பொம்மை’ என்று ஒவ்வொரு படத்திலும் திறமை பளிச்சிடுகிறது. ஒளிப்பதிவைப் பொறுத்தவரை இங்கு அனைவரும் ஸ்ட்ராங்காக இருக்கிறார்கள். அவருடைய ஒர்க் சரியில்லை, இவருடைய ஒர்க் சரியில்லை என்று சொல்ல முடியாது. எல்லாருடைய ஒர்க்கும் நல்லா இருக்கு. அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.”

- சுரேஷ்ராஜா