தப்பு தண்டா



தப்பை சரியா பண்ணா தப்பேயில்லை!

தேர்தலில் நிற்கும் அரசியல்வாதி மைம் கோபி, வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக அனுப்பும் கோடிக்கணக்கான பணத்தை டெக்னிக்கலாக அடிக்கிறார் ஹீரோ சத்யமூர்த்தி. அவரை போலீஸ் பிடித்து பணத்தை கேட்கும்போது, கொள்ளையடித்தது தான் அல்ல என்று சாதிக்கிறார். விசாரித்துப் பார்த்ததில் அவர் அப்பாவி என்பது நிரூபிக்கப்படுகிறது. அப்படியெனில் அந்தப் பணத்தை யார் கொள்ளையடித்தார்கள் என்கிற சஸ்பென்ஸ்தான் ‘தப்பு தண்டா’.

ஹீரோ சத்தியமூர்த்தி புதுமுகமாக இருந்தாலும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்துகிறார். மைம் கோபியின் நடிப்பு சிறப்பு. ஜான் விஜய் கும்பல் அடிக்கும் காமெடி அவ்வளவாக எடுபடவில்லை. போலீஸ் அதிகாரியாக வரும் அஜய்கோஷின் உருட்டலும், மிரட்டலும் பிரமாதம்.
ராஜா சேதுபதி தயவு தாட்சண்யமின்றி தன்னுடைய எடிட்டிங் கத்திரியை பயன்படுத்தியிருக்கலாம்.

முதல் பாதி அயர்ச்சி ஊட்டுகிறது. நரேன் பாலகுமாரின் இசை, திரில்லருக்கான இலக்கணத்தோடு அமைந்திருக்கிறது. வினோத் பாரதியின் ஒளிப்பதிவு ஓக்கே.லோ பட்ஜெட்டில் ஒரு ‘மங்காத்தா’ எடுக்க முயற்சித்த இயக்குநர் கண்டன், தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கைக்குரிய வரவுதான்.