காதலியோடு கடலைபோட பஞ்சாயத்து கூட்டும் நாயகன்!



“இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சாருக்கு என் மீது நம்பிக்கை அதிகம். இவ்வளவுக்கும் அவரிடம் நான் உதவி இயக்குநராக வேலை பார்த்ததில்லை. எனக்கும் அவருக்கும் ஒரு சக உதவி இயக்குநராகத்தான் பழக்கம் ஆரம்பித்தது.

நாங்கள் நெருங்கிப் பழகிய பிறகுதான் அவருக்கு நானும் கள்ளக்குறிச்சிக்காரன் என்று தெரிந்தது. ஊர்க்காரன் என்ற பாசத்தையும் கடந்து என் மீதுள்ள நம்பிக்கையில் முதன் முறையாக அவருடைய பெயரை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார்.

அதன் அடிப்படையில்தான் ஏ.ஆர்.முருகதாஸ் வழங்கும் ‘குரு உச்சத்துல இருக்காரு’ என்று விளம்பரம் கொடுத்துவருகிறோம்” என்று பெருமிதத்துடன் பேச ஆரம்பித்தார் இயக்குநர் பா.தண்டபாணி.

“படத்தோட ‘டைட்டில்’ அசத்தலா இருக்கே?”“இப்படி ஒரு டைட்டில் வைத்ததால்தான் எனக்கு இந்தப் பட வாய்ப்பே கிடைத்தது. தயாரிப்பாளர் கதை கேட்பதற்கு முன்பு என்ன டைட்டில் என்று கேட்டார். டைட்டிலை சொன்னதும் பாசிட்டிவ்வான டைட்டில், நாம் படம் பண்ணலாம் என்று சொல்லிவிட்டுதான் கதை கேட்க ஆரம்பித்தார்.

இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம். மற்றபடி தமிழ் சினிமாவை புரட்டிப் போடும் சினிமா, இந்திய சினிமாவில் சொல்லப்படாத கதை, ஹாலிவுட்டுக்கு டப் கொடுத்திருக்கிறோம் என்றெல்லாம் பில்டப் கொடுக்க விரும்பவில்லை. ஜாலியான காமெடி கதையில் இந்தக் காலகட்டத்துக்கு தேவையான மெசேஜ் சொல்லியிருக்கிறேன்.

நாயகன் காதலிக்கும் பெண்ணின் தந்தை ஊர் பஞ்சாயத்து தலைவர். நாயகன் தன் காதலியைப் பார்க்க தோணும்போதெல்லாம் ஒரு சின்ன விஷயத்தைப் பெரியதாக்கி பஞ்சாயத்தைக் கூட்டிவிடுவான். அந்த சாக்கில் காதலியிடம் கடலை போடுவான். ஒரு கட்டத்தில் காதலனின் பொறுப்பின்மையைக் கண்டிக்கிறார் காதலி. அதன்பிறகு அந்தக் காதலன் எப்படி பொறுப்புள்ளவனாக மாறுகிறான் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறேன்.” “ஹீரோ?”

“புதுமுகம் குரு ஜீவா. விஸ்காம் ஸ்டூடண்ட். ஆடிஷன் மூலம் கிடைச்சார். சினிமாவுக்காக ஃபைட், டான்ஸ், கூத்துப்பட்டறை என்று பக்காவா டிரெயினாகி வந்ததால் படப்பிடிப்பை சுலபமாக நடத்த முடிந்தது. வேட்டி, சட்டை, புல்லட் என்று மல்லுவேட்டி மைனர் மாதிரி கிராமத்து இளைஞன் ரோலில் அழகாக உட்கார்ந்து கொண்டார். சுருக்கமாக சொல்வதாக இருந்தால் சத்யராஜ், பார்த்திபன் மாதிரி அதிரிபுதிரியான ரோலில் வெளுத்து வாங்கியிருக்கிறார். முதல் படம் மாதிரியே தெரியாதளவுக்கு கேரக்டரை மெருகேற்றி நடித்தார்.”
“ஹீரோயின்?”

“ஆரா. ஏற்கனவே ‘பைசா’ படத்தில் நடித்திருக்கிறார். ஹீரோவுக்கு ஈக்குவலான ஒரு ரோல் பண்ணியிருக்கிறார். ரொம்ப போல்டான கேரக்டர். அழகும் நடிப்பும் கலந்த அற்புதமான நடிகை. என் ஹீரோயின் என்பதற்காக சொல்லவில்லை. படம் பார்க்கும்போது அவருடைய மிகை இல்லாத நடிப்பை உங்களுக்கே பாராட்டத் தோன்றும்.

என் அனுபவத்தில் சொல்வதாக இருந்தால் குட்டி திவ்யாவாக கலக்கியிருக்கிறார். குருஜீவா, ஆரா இருவருக்குமான கெமிஸ்ட்ரி பிரமாதமா ஒர்க் அவுட்டாகியிருக்கு. படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர்களும் ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்கு என்று சொன்னார்கள். நைட் ஷூட்டிங் நடந்தபோது ஒர்க் பண்ண டெக்னீஷியன்களும் கதை நல்லா இருந்ததால் ஆர்வத்துடன் வேலை பார்த்தார்கள்.”

“படத்துல நட்சத்திர பட்டாளம் அதிகமா இருக்கே?”
“நல்ல விஷயம்தானே? ‘நாடோடிகள்’ கோபால் ஊர்த் தலைவராக வர்றார். வாடகை வசூலிக்கும் வீட்டு உரிமையாளராக இமான் அண்ணாச்சி காமெடியில் கலக்கியிருக்கிறார். ஆர்.பாண்டியராஜன் ஹீரோ நண்பராக வர்றார். எம்.எஸ்.பாஸ்கர், ரஞ்சனி, மனோ, நமோ நாராயணன், தளபதி தினேஷ், கிரேன் மனோகர் ஆகியோர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும்.”

“இசை?”
“இந்தப் படத்துக்கு தாஜ்நூர் இசைதான் பொருத்தமாக இருக்கும் என்று ஸ்கிப்ரிட் ரெடியானதும் முடிவு பண்ணிவிட்டேன். அவரும் என்னுடைய ரசனையைப் புரிந்தவராக பாடல்கள் கொடுத்தார். எல்லா பாடல்களும் கதையோடு கலந்திருக்கும். பாடல்களை பா.விஜய், சினேகன், மீனாட்சிசுந்தரம்  எழுதியிருக்கிறார்கள். பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் சேர்த்து ஐம்பது நாள்கள் இரவு பகலாக மெனக்கெடலுடன் வேலை பார்த்தார்.

என்னுடைய பார்வையில் இந்தப் படத்தை நூர் சார் கதைக்காக ஒப்புக் கொண்டாரே தவிர பணத்துக்காக அல்ல. ஒளிப்பதிவாளர் தளபதி கிருஷி. உதவி இயக்குநராக இருந்த சமயத்திலிருந்து என்னுடைய நண்பர். ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனின் உதவியாளர். அவருடைய அனுபவத்தால் இந்தப் படத்தை வேகமாகப் படமாக்க முடிந்தது.

தயாரிப்பாளர் எம்.தனசண்முகமணி பற்றி நிறைய சொல்ல வேண்டும். ஒரு ரசிகராகத்தான் இந்தப் படத்தை தயாரித்தார். கதை சொன்ன இரண்டரை மணி நேரமும் சிரித்துக் கொண்டுதான் கதை கேட்டார். நான் கேட்ட வசதிகளை நோ சொல்லாமல் செய்துகொடுத்ததால் ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடித்தோம். எல்லா உதவி இயக்குநருக்கும் இப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைத்தால் ஜெயிக்க முடியும்.”
“படப்பிடிப்பில் யானை அச்சுறுத்தல் இருந்ததாமே?”

“இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைபெற்றது. ஒரு முக்கிய காட்சியை படமாக்கும்போது, மெயின் ரோட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் அருகில் உள்ள அருவியில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்தோம்.

லொக்கேஷன் பார்க்கும்போது அருவியில் வந்த தண்ணீர் படப்பிடிப்பின் போது வராததால், எழுபது லாரிகளில் தண்ணீர் வர வைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தினோம்.
அந்த அருவியில் நீர் வருவதைக்  கண்டு, அங்குள்ள யானை ஒன்று தாகத்தை தீர்க்க அந்தப்பகுதிக்கு வந்தது.

யானையைப் பார்த்ததும் யூனிட்டில் உள்ளவர்கள் மிரண்டு ஓடினார்கள். ஆனால், அந்த யானை எங்களை தொந்தரவு செய்யாமல் நீரை குடித்து விட்டு சென்றது. அதன் பின் பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தினாலும் உயிர் பயத்துடன் தான் படப்பிடிப்பில் கலந்துகொண்டோம்.”
“உங்களைப் பற்றி?”

“சொந்த ஊர் கள்ளக்குறிச்சி. பத்தாம் கிளாஸ் பாஸ். அதுக்கப்புறம் படிப்பு எனக்கு வரலையா, படிப்பு எனக்குப் பிடிக்கலையா என்று தெரியாத நிலையிலேயே  நல்ல சினிமா எடுக்கணும் என்ற ஆர்வத்தில் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்துவிட்டேன். வீட்ல யாரும் பெரிதாக எதிர்ப்பு காட்டலை.

மாதவன் நடித்த தெலுங்குப் படம், ‘தம்பிக்கோட்டை’, ‘மதில் மேல் பூனை’, ‘காதல் காலம்’, ‘தகடு தகடு’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ உள்பட ஏராளமான படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். பதினைந்து வருட உழைப்புக்கு பலனாக இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னுடைய இந்த வளர்ச்சியைப் பார்க்க என் பெற்றோர் இன்று இல்லை. ஆனால் அவர்களுக்கு புகழ் சேர்க்கும் படமாகவும் தயாரிப்பாளருக்கு பணம் சேர்க்கும் படமாகவும் இந்தப் படம் இருக்கும்.”

- சுரேஷ்ராஜா