மறக்கமுடியாத மயிலு!



பிலிமாயணம் 11

கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதியோடு ‘16 வயதினிலே’வுக்கு 40 வயது முடிவடைந்து விட்டது. அந்தப் படம் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய சாதனைகளை வெல்லுவதற்கு இன்று வரை ஒரு படம்கூட இல்லை. என்னுடைய ரசனையில் தமிழில் இதுவரை வெளிவந்த படங்களில் அதுதான் நம்பர் ஒன். இந்தச் சாதனையை பாரதிராஜாவால்கூட முறியடிக்க முடியவில்லை.

கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்த பாரதிராஜா, சென்னை ஸ்டூடியோக்களுக்குள் தனி ராஜ்யம் நடத்திக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை கிராமத்து வயல்வெளிக்கு அழைத்துச் சென்ற சினிமாவின் பொற்காலம் அது. சினிமாவில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் ஓர் இளைஞனின் புரட்சியைக் கண்டு பிரமித்து நின்ற நேரம்.

மீடியாக்கள் பாராட்டியது. ‘இதுவல்லவோ படம்’ என்று விமர்சகர்கள் கொண்டாடினார்கள். மக்கள் சாரைசாரையாக தியேட்டருக்கு படை எடுத்தார்கள். ஆனால், இதைெயல்லாம் தாண்டி ‘16 வயதினிலே’ படம் கிராமங்களில் வேறு விதமான அதிர்வலைகளை ஏற்படுத்தியதை உலகம் அவ்வளவாக அறிந்திருக்காது.

நடுத்தர வயதுக்காரர்கள் எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும் கொண்டாடிக் கொண்டிருந்த காலத்தில் அன்றைய பதின்ம வயது பருவத்தினரை கவர்ந்து கொண்டிருந்தார்கள் ரஜினியும், கமலும். இருவரும் இணைந்து நடித்த படங்களுக்கு இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக படைெயடுத்தார்கள். கமல் ரசிகர்கள், ரஜினி வெறியர்கள் பெருகினார்கள். ஓலைக் கொட்டாய் போட்டு ரசிகர் மன்றம் அமைத்து அதில் ‘ஏ4’ ைசசுக்கு ரஜினி, கமல் படத்தை வைத்து ஆராதிக்கத் தொடங்கினார்கள். இதெல்லாம் ‘16 வயதினிலே’ காலத்து நிலை.

படம் திருநெல்வேலியில் ரிலீசானது. எங்கள் ஊர் ரஜினி ரசிகர்களும், கமல் ரசிகர்களும் பஸ்பிடித்து. திருநெல்வேலிக்கு படம் பார்க்கச் சென்றார்கள். நான் அப்போது பன்னிரெண்டு வயது சிறுவன். தீவிர கமல் ரசிகன். இப்போது இந்த வயதுக்காரர்களுக்கு எப்படி விஜய்யை பிடிக்கிறதோ அப்படி அந்தக் காலத்தில் கமல் எனக்கு பிடித்திருந்தார். “எங்க தலைவர் மாதிரி உங்க ஆளுக்கு டான்ஸ் ஆடத் தெரியுமா?” என்று நான் கேட்பதும், “எங்க தலைவர் மாதிரி உங்க ஆளுக்கு சண்டை போடத் தெரியுமா?” என்று அவர்களும் மோதிக் கொண்டிருந்த சூழல்.

திருநெல்வேலி தியேட்டரில் படம் தொடங்கியது. படத்தின் டைட்டிலில் நடிகர்களின் பெயருக்கு பதிலாக சப்பாணி, மயிலு, பரட்டை, குருவம்மா என்று கேரக்டர்களின் பெயர்கள் ஓடத் தொடங்கியது. மெனக்கெட்டு படம் பார்க்கப் போன ரசிகர்களுக்கு முதல் அதிர்ச்சி. “டேய் ஸ்டைல் மன்னன்  பேரு எங்கடா?” என்று ரஜினி ரசிகர்களும், “டேய் காதல் இளவரசன் பெயர் எங்கடா?” என்று கமல் ரசிகர்களும் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள் (அப்போது சூப்பர் ஸ்டார், உலக நாயகன் பட்டங்கள் வரவில்லை). படம் அவர்களுக்குள் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. உற்சாகமின்றி இருந்தார்கள். கமல் ரசிகர்கள் நினைத்து வந்த நடனம் இல்லை. ரஜினி ரசிகர்கள் நினைத்து வந்த சண்டை இல்லை.

கமல்ஹாசன் ஒருமாதிரியாகச் சாய்ந்து சாய்ந்து நடந்து வரும்போதே கமல் ரசிகன் சோர்ந்து போனான். அவர் கோவணத்துடன் நின்ற காட்சியைக் காண சக்தியில்லாமல் பீடி குடிக்க வெளியில் எழுந்து சென்றான். ரஜினிக்கு கமல் எண்ணெய் தேய்த்து விடும் காட்சியில் “தலைவா இது உனக்கு தேவையா?” என்று கத்தி கத்தி ெதாண்டை வறண்டு போனான். பரட்டையாய் வந்து ரஜினி லந்து பண்ணும்போது சிரித்து ரசித்த ரஜினி ரசிகன்,  ரஜினி கன்னத்தில் தேவி காறித் துப்பும்போது தலைகவிழ்ந்து போனான்.

கமல் ரஜினியை கன்னத்தில் அறையும் காட்சியையும், கமல் ரஜினியை கல்லை தூக்கிப்போட்டுக் கொல்லும் காட்சியையும் அவனால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. “எவனோ தேனிக்காரனாண்டா, தலைவரை இப்படி அசிங்கப்படுத்தியிருக்கான். ஏதாவது ஷூட்டிங்னு குற்றாலம் பக்கம் வராமலா போயிடுவான், வரட்டும் பார்த்துக்கலாம்” என்று பாரதிராஜா மீது கொலை வெறியோடுதான் வீட்டுக்குத் திரும்பினார்கள். இந்தக் களேபரத்திலும் அவனை கொஞ்சமேனும் படத்தில் உட்கார வைத்தது மயிலுதான். “எலே நம்ம ஊரு சிறுக்கிங்களும் இருக்காளுகளே.

சுத்துப்பத்துல ஒருத்திகூட மயிலுமாதிரி இல்லியடே” என்பான் ஒருத்தன். “எலே அது கிலோ கணக்குல பவுடர் பூசியிருப்பாடே” என்பான் இன்னொருத்தன்.படம் பத்து நாளைக்குக் கூட தேறாது; அடுத்த மாதமே தென்காசி தியேட்டருக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் படம் சக்கை போடு போட்டு ஆறேழு மாசத்துக்குப் பிறகுதான் தென்காசிக்கு வந்தது.

ஒரு வருஷத்துக்குப் பிறகுதான் செங்கோட்டைக்கு வந்தது. திருநெல்வேலியில் திட்டித் தீர்த்த படத்தை தென்காசி, செங்கோட்டையி–்ல் திரும்பத் திரும்ப பார்த்தார்கள். “இது எப்படி இருக்கு?” என்று தலையைக் கோதிவிட்டுக் கொண்டார்கள் ரஜினி ரசிகர்கள். “எங்க தலைவர் மாதிரி நடிக்க முடியுமா?” என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டு திரிந்தார்கள் கமல் ரசிகர்கள்.

இந்த இரண்டிலும் இல்லாதவர்கள் மயிலு படத்தை மடியில் வைத்துக் கொண்டு திரிந்தார்கள். ஒரு இளைஞர் சமுதாயத்தின் ரசிப்புத் தரத்தை ஒரே படத்தில் உயர்த்திய இந்த இடத்தில்தான் பாரதிராஜா ஜெயித்தார்.

சமீபத்தில் தனது “மாம்’ படத்தின் புரமோசனுக்காக சென்னை வந்திருந்த ஸ்ரீதேவியை அவர் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் சந்தித்தேன். 40 வருடத்துக்கு முன்பு தமிழுலகத்தைக் கட்டிப்போட்ட மயிலுவின் தோற்றத்தை காலம் கலைத்துப் போட்டிருந்தது.

ஆனாலும் அந்த குயில் குரல் மட்டும் மாறாமல் அப்படியே இருந்தது. அவருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பும்போது “மயிலு இப்பவும் எங்க மனசுல இருக்காரா?”  என்று கேட்டேன். சட்டென்று குளமானது அவர் கண்கள். “மயிலா உங்க மனசுல இப்பவும் இருக்கேனே... அதுவே இந்த ஜென்மத்துக்கும் போதும்” என்றார்.

(பிலிம் ஓட்டுவோம்)

பைம்பொழில் மீரான்