சமைக்கிறார் சந்தானம்!



யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல், நேரடியாக ‘சர்வர் சுந்தரம்’ படத்தை இயக்கி இருக்கிறார், ஆனந்த் பால்கி. ஹீரோ சந்தானம். ராதாரவி, பசுபதி, சண்முகராஜன் போன்ற அனுபவ நடிகர்களுடன் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை முடித்துவிட்டு ரிலீசுக்குக் காத்திருக்கும் அவரிடம் பேசினோம்.

“பழைய படங்களோட டைட்டிலையே திரும்பத் திரும்ப வைக்கிற அளவுக்கு அவ்வளவு கற்பனை வறட்சியா நம்ம ஆளுங்களுக்கு?”

“ஹலோ. ஹலோ. உங்க அறச்சீற்றத்தை கொஞ்சம் நிறுத்துங்க. நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவன். சமையல் உலகின் அத்தனை விஷயங்களும் எனக்குத் தெரியும். கூடுதலாக சினிமா மேலேயும் ஆசை.

என்னோட சமையல் உலகத்தை மையமாக வைத்து ஒரு கதை எழுதினேன். அதை என் நண்பர்களிடம் சொன்னபோது, விழுந்து விழுந்து சிரித்தார்கள். பிறகு அவர்கள்தான் ‘இதை சினிமா படமாக இயக்கலாம்’ என்று தைரியம் கொடுத்தார்கள்.

சினிமா என்றால் அதில் என்டர்டெயின்மென்ட் நிறைய இருக்க வேண்டும் அல்லவா? அதனால், என் நண்பன் வெங்கடேஷ் பட், ஜேக்கப் மாதிரியான உலகப் புகழ்பெற்ற செஃப்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு திரைக்கதை அமைத்தேன்.

ஹீரோ ஜாலியான ஆள் என்பதால், அதற்கு சந்தானம்தான் சரியான சாய்ஸ் என்று முடிவு செய்து, அவரிடம் கதை சொன்னேன். உடனே ஓக்கே சொல்லி விட்டார். மடமடன்னு படத்தை முடிச்சிட்டு இப்போ ரிலீஸுக்கு நாங்களும் ரசிகர்கள் மாதிரி ஆவலா காத்துக்கிட்டிருக்கோம்.”

“ஹீரோயின் வைபவி சாண்டில்யாவை மராட்டியத்தில் இருந்து அழைத்து வந்திருக்கிறீர்களே? நம்மூர்லே பொண்ணுங்களுக்கு பஞ்சமா?”
“ஆஹா. இன்னிக்கு உங்க போதைக்கு நான்தான் பிரியாணியா? கலைஞர்களுக்கு ஏதுங்க மொழி, மாநிலம், நாடு பாகுபாடெல்லாம்? எங்க படத்தில் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது.

முகபாவங்கள் அதிகம் வேண்டும். இதற்கு ஒரு டான்சராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். அப்போது வைபவியை ஒரு கோ-ஆர்டினேட்டர் மூலம் கண்டுபிடித்தோம். அடிப்படையில் அவர் ஒரு கதக் டான்சர் என்பதால், கதைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று ஹீரோயினாகத் தேர்வு செய்தோம். இதில் அவர் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார்.”“இயக்குநர் கே.பாலசந்தரின் ‘சர்வர் சுந்தரம்’ படத்துக்கும், உங்கள் ‘சர்வர் சுந்தரம்’ படத்துக்கும் என்ன ஒற்றுமை?”

“நான் இப்போதான் முதல் படமே இயக்கியிருக்கேன். சிகரம் எங்கே? நான் எங்கே? தயவுசெய்து அப்படி ஒப்பிடாதீர்கள். படத்தோட டைட்டில் ஒன்றைத் தவிர அந்தப் படத்துக்கும், இந்தப் படத்துக்கும் வேறெந்த ஒற்றுமையும் இல்லை.

சமையலே பிடிக்காத ஒருவன், அதே சமையல் மூலம் உலகப் புகழ் மிகுந்தவனாக எப்படி மாறுகிறான் என்பதுதான் இந்தப் படத்தோட கதை. சமையல் சம்பந்தப்பட்ட கதை என்பதால், அந்த டைட்டில் பொருத்தமாக அமைந்திருக்கிறது. நாங்க அதன் உரிமையைக் கேட்டு வாங்கித்தான் வெச்சிருக்கோம்.”

“உங்க படத்திலே துணை நடிகர்களாக ஏராளமான நிஜ சமையல் கலைஞர்களே பணியாற்றியதாக சொல்கிறார்களே?”

“படப்பிடிப்பு முழுவதுமே பதினைந்து சமையல் கலைஞர்கள் உடனிருந்தார்கள். எங்க படத்துலே ஸ்க்ரீன்லே தெரிகிற எல்லா உணவுமே திறமையான கலைஞர்களால் சுவையாக சமைக்கப்பட்டவைதான்.

அவங்க சமைக்கிறதை அப்பவே படமாக்கி, ஷாட் ஓக்கே ஆனதுமே எல்லாருமா சேர்ந்து சாப்பிட்டுருவோம். படம் முழுக்க அறுபது வகையான உணவு வருது. எங்க யூனிட்டே நல்லா திம்முன்னு சாப்பிட்டுட்டு ஏப்பம் விடுற அளவுக்கு செம கட்டு. படத்தோட பட்ஜெட்டுலே உணவுக்கே கணிசமா செலவாயிடிச்சி.”“பாலைவனத்தில் படப்பிடிப்பு நடத்தினீங்களாமே?”

“கதை கிராமத்தில் தொடங்குகிறது. பிறகு சென்னைக்கு வந்து, கோவாவுக்குச் சென்று, துபாயில் முடிவடைகிறது. துபாய் பாலைவனத்தில் கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கினோம். அங்கும் சமைக்க வேண்டும். 115 டிகிரி வெயில்.

குடிப்பதற்குத் தண்ணீர் கிடையாது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அங்கு சமைத்து, சண்டை போட்டு கிளைமாக்சைப் படமாக்கினோம். சந்தானம் சார் இதில் காமெடி ஹீரோ மட்டுமல்ல, சீரியசான ஹீரோவும் கூட. 5 நிமிட சென்டிமென்ட் காட்சியில் ஆடியன்சை அழவைத்து விடுவார்.”

- மீரான்