துப்பாக்கி ஏந்துகிறார் சல்மான்!



சல்மான்கான் நடித்துள்ள ‘டைகர் ஜிந்தா ஹை’ 2017 ம் ஆண்டின் மிகப் பெரிய ஆக்‌ஷன் படமாக வெளிவரவுள்ளது. இதன் நாயகி கேத்ரீனா கைஃப்.

படத்தின் இயக்குனர் அலி அபாஸ் படத்தைப் பற்றி கூறும்போது, ‘‘படத்தின் டைகர் கதாபாத்திரத்தை, ஆபத்தான மற்றும் கனரக ஆயுதங்களை ஏந்தி சண்டையிடும் கதாபாத்திரமாக வடிவமைத்தோம். அந்த கதாபாத்திரத்துக்கு சல்மான்கான் பொருத்தமாக இருந்தார்.

படத்தில் சல்மான் வைத்திருக்கும் எந்திரத் துப்பாக்கியின் பெயர் MG 42. இதை வைத்து சல்மான் எதிரிகளைத் துவம்சம் செய்யும் காட்சிதான் படத்தில் மிக முக்கியமான காட்சியாக உள்ளது. இதுபோன்ற கனரக ஆயுதங்களைக் கொண்டு உருவாக்கப்படும் காட்சிகளைப் படமாக்குவது அவ்வளவு சுலபமல்ல.

MG 42 துப்பாக்கி நவீன தொழில் நுட்பத்தில் உருவான கனரக எந்திரத் துப்பாக்கியாகும். துப்பாக்கியின் எடை மட்டும் இருபது முதல் முப்பது கிலோ இருக்கும். இதனுடன் தோட்டாக்களைக் கொண்ட மேகஸீன்களை இணைக்கும்போது இது ஒரு ஆபத்தான அழிவின் ஆயுதமாகவே மாறிவிடும்.

படத்தின் ஹைலைட்டாக இருக்கும் இந்தக் காட்சிக்காக, சல்மான் 5000 குண்டுகளை சுட்டுள்ளார். இந்தக் காட்சிகள். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின் முக்கிய தருணமாய் இந்தக் காட்சி இருந்தது. ஏன்னா, இந்தக் காட்சிகளை வெப்பமான இடத்தில் படமாக்கினோம். கனரக துப்பாக்கியும் விரைவிலேயே சூடாகிவிடும் என்பதால் நாங்கள் ஒரே மாதிரியான இரண்டு துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ஒரு சவாலான சூழ்நிலையில்  படமாக்கினோம்.

சல்மான் இந்தப் படத்துக்காகவே உடலை மெருகேற்றி வைத்திருந்தார். ‘டைகர் ஜிந்தா ஹை’ போன்ற பலமான திரைக்கதைக்கு சரியான ஆயுதமாய் MG 42  இருந்தது. ஆஸ்திரேலியா, கிரீஸ், மொராக்கோ, அபுதாபி மற்றும் இந்தியா உள்பட ஐந்து நாடுகளில் படமாக்கியுள்ளோம். படத்தை பெரிய அளவில் உருவாக்குவதற்காக நாங்கள் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு காரணங்களுக்காக பயணம் செய்தோம்.

படத்தின் காட்சிகளுக்கு தேவைக்கேற்ற நிலப்பரப்பினைத் தேர்வு செய்தோம். ஆஸ்திரேலியாவின் பனிபொழியும் மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தினோம். குதிரை சவாரியில் நடக்கும் கடினமான சண்டைக் காட்சி மொராக்கோவில் படமாக்கப்பட்டது. அந்நாட்டு நிலப்பரப்பின் அமைப்பு படத்தின் காட்சிக்கு தேவையான விஷுவல்ஸைத் தந்தது.

ஹாலிவுட் படங்களான ‘ட்ராய்’ மற்றும் ‘மம்மி ரிட்டர்ன்ஸ்’ போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட பழக்கப்பட்ட குதிரைகளும் கிடைத்தன. பாடலுக்கு கிரீஸ் நாட்டின் எழில்மிகு இடங்கள் பொருத்தமாயிருந்தது. அபுதாபி ஒரு பாலைவன நிலப்பரப்பைக் கொடுத்தது. அபுதாபி அரசு எங்களுக்கு பெரும் ஆதரவைக் கொடுத்தது, புரொடக்‌ஷன்,  இராணுவம் மற்றும் விமானப்படை போன்ற உதவிகள் அபுதாபி அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு கிடைத்தது.

டில்லியில் வடக்கு மற்றும் தெற்கு பகுதியிலும் இரண்டு காட்சிகளைப் படமாக்கினோம். ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு தனித்துவமும், முக்கியத்துவமும் உள்ளது மற்றும் கதையின் திருப்புமுனையும் அதில் அடங்கியுள்ளது.

இரண்டு அதிபுத்திசாலி உளவாளிகளின் ஆபத்தான பயணம்தான் படத்தின் கதை. ஹீரோவும் ஹீரோயினும் ஐந்து நாடுகளுக்குச் சென்று, அங்கு இருக்கும் சமூக விரோதிகளை எதிர்த்து சட்டத்தின் முன் நிறுத்துவதுதான் படத்தோட ஒன் லைனர். இந்தப் படம் சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் உலகத்தரம் வாய்ந்த ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக  இருக்கும்’’ என்கிறார் அலி அபாஸ்.

- எஸ்