சினிமா ஆசையில் சென்னைக்கு வரும் கிராமத்துப் பெண்கள்!



பிலிமாயணம் 18

இந்தக் காலத்தில் பல வழிகளில் பெண்கள் சினிமாவுக்கு நடிக்க வருகிறார்கள். நடிப்பது என்று முடிவு செய்துவிட்ட பிறகு நடனம் கற்கிறார்கள், நடனம் ஆடுகிறார்கள், அப்படியே நாடகத்தில் நடிக்கிறார்கள், அதன் வழியாக சினிமாவுக்கு வருகிறார்கள். (உதாரணம் ஆண்ட்ரியா). இன்னும் சிலர் மாடலிங் துறையில் நுழைகிறார்கள், ஷோக்களில் கேட் வாக் பண்ணுகிறார்கள், விளம்பரப் படங்களில் நடிக்கிறார்கள், அப்படியே சினிமாவுக்கு வருகிறார்கள் (உதாரணம்: தமன்னா).

 சிலர் விஸ்காம் படிக்கிறார்கள், கூத்துப்பட்டறையில் நடிப்பு கற்கிறார்கள், நாடகத்தில் நடிக்கிறார்கள், அப்படியே சினிமாவுக்கு வருகிறார்கள் (உதாரணம் ரித்விகா). சிலர் பிரபலங்களின் வாரிசாக இருப்பார்கள், அந்த வழியாக நடிக்க வருவார்கள் (உதாரணம் ஸ்ருதிஹாசன்).

குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் ஹீரோயி னாவது ஒரு வகை (உதாரணம்: ஸ்ரீதேவி). இன்னும் சிலர் இயக்குனர்களின் பார்வையில் பட்டு திடீரென நடிகை ஆவார்கள் (உதாரணம்: ‘என்னுயிர் தோழன்’ ரமா). இப்படி சினிமாவுக்குள் வர ஏராளமான வழிகள் இன்றைக்கு இருக்கின்றன. அன்றைக்கு எப்படி இருந்தது?

கருப்பு வெள்ளை காலத்தில் பாடத் தெரிந்தால் நடிகை ஆகலாம், அதன் பிறகு பாடலுடன் ஆடவும் தெரிந்தால் நடிகை ஆகலாம். அதற்குப் பிறகு பாட, ஆடத் தெரிந்திருந்தாலும் கூடுதலாக அழகாக இருந்தால் நடிகை ஆகலாம். 80களில் என்ன நிலைமை? கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் அழகாக பிறந்திருந்தால் போதும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சினிமாவோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய குடும்பத்துப் பெண்கள் அரிதாக நடிக்க வருவார்கள்.

எண்பதுகளில் படம் இயக்கும் ஆசையில், நடிக்கும் ஆசையில், பாடல் எழுதும் ஆசையில் மஞ்சள் பையோடு சென்னைக்கு வந்தவர்கள் நிறைய ேபர். சினிமாவில் சாதனை செய்துவிட்டு தற்போது ஓய்வில் இருக்கும் யாரிடம் கேட்டாலும் ஒரு மஞ்சள் பை, திருட்டு ரெயில் கதை இருக்கும். ஆண்களைப் போல பெண்களும் சினிமாவில் நடிக்கும் ஆசையில் மஞ்சள் பையோடு கிளம்பி சென்னை வந்திருக்கிறார்களா? இந்தக் கேள்விக்கான பதில் எங்கள் ஊரில் இருந்தது.

அப்போது எங்கள் ஊரில் ஒரு பெண் எப்போதும் பஞ்சாயத்து முன் நிறுத்தப்படுவார். அவர் மீதான குற்றச்சாட்டே அவர் அடிக்கடி சினிமாவுக்கு போகிறார் என்பதுதான். இதற்காக கணவர் விவாகரத்து வரைக்கும் வந்தார். அடிக்கடி சினிமா பார்க்கும் பெண்கள் கெட்டுப்போவார்கள் என்பது அவர் வைத்த வாதம். சினிமா பார்ப்பதற்காக அந்தப் பெண் கணவனே வேண்டாம் என்று சொன்ன கதை தனி.

எங்கள் ஊரில் ஒரு லாரி டிரைவருக்கு இரண்டு மகள்கள். இருவருமே வயதுக்கு வந்த இளம் பெண்கள். அவர்களை சினிமா எப்படி ஆக்கிரமித்தது என்று தெரியவில்லை. நிறைய சினிமா பார்்ப்பதுதான் அவர்கள் வேலை. இதற்காக அடிக்கடி கிராமத்திலிருந்து கிளம்பி செங்கோட்டை, தென்காசி பகுதியிலேயே சுற்றித் திரிவார்கள். கையில் காசு இருக்கிற வரையில் சினிமா பார்ப்பார்கள். காசு தீர்ந்ததும் ஊருக்கு வந்து விடுவார்கள்.

இதனால் அந்த இரண்டு பெண்களைப் பற்றியும் ஊரில் தவறான அபிப்ராயங்கள் இருந்தன. ஆனால் அதைப்பற்றி அவர்கள் கண்டு கொள்வதில்லை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஆசையாக இருந்திருக்கிறது.

சினிமா தியேட்டரில் படம் ஓட்டும் ஆபரேட்டரோ, மானேஜரோ, டிக்கெட் கிழிப்பவரோ நினைத்தால் சினிமாவில் நடிக்கலாம் என்று கருதியிருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் ஓசியில் படம் பார்க்கலாம் என்பது அவர்களுக்கு பின்னர்தான் புரிந்திருக்கிறது.

சென்னைக்கு சென்றால்தான் சினிமாவில் நடிக்க முடியும் என்று புரிந்தபிறகு ஒருநாள் மஞ்சள் பையோடு இரண்டு பெண்களும் சென்னை புறப்பட்டுவிட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி யாருக்கும் தெரியாது.

அதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதில் ஒருவரை திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் சந்தித்தேன். அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர்தான் கடந்து வந்த பாதை பற்றி எதையும் கூறவில்லை. இப்போது துபாயில் வேலை செய்கிறேன் என்றார்.

என்ன வேலை என்று கேட்டேன். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு “டூரிஸ்ட் விசாவில் சென்று நட்சத்திர ஓட்டலில் காபரே ஆடுகிறேன்” என்றார். அவரது சகோதரி பற்றிக் கேட்டேன். “அவள் சென்னையில்தான் இருக்கிறாள்.

சின்னச் சின்னக் கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கிறாள். ஒரு நாளைக்கு ஷூட்டிங் போனால் 500 ரூபா கிடைக்கும். அவளும் இரண்டு குழந்தையோடும், குடிகாரக் கணவனோடும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள்” என்றார். சென்னையில் 50 வயதைக் கடந்த பெரும்பாலான ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்கு பின்னாலும் இப்படி ஒரு கதை இருக்கும்.

(பிலிம் ஓட்டுவோம்)