சினிமா எடுப்பது எப்படி? பாடம் நடத்துகிறார் இயக்குநர் ஹரி



ஹரி படங்கள்னாலே ஸ்பீடு, வேகம்.. படுவேகம் என எல்லாமே ஃபாஸ்ட்தான். ‘சாமி-2’ பட வேலைகளில் பிஸியாக இருக்கும் ஹரியிடம் “உங்க எனர்ஜி சீக்ரெட் என்ன?’’ எனக் கேட்டால் சிரிக்கிறார்.

‘வேர்க்கடலையும் முந்திரிப்பருப்பும்’’ என்று ஜோக் அடிக்கிறார். தொடர்ந்து ‘சினிமா எடுப்பது எப்படி?’ என்று ‘வண்ணத்திரை’ வாசகர்களுக்காக அவரே பாடமும் நடத்தத் தொடங்கினார். அவரது பேச்சில் குறுக்கிடாமல், அவர் என்ன சொன்னாரோ அதை அப்படியே உங்களுக்கு சொல்கிறோம்.

‘‘ஏதோ ஒரு இடத்துல ஸ்பீடா எடுத்துட்டோம். அது ஆடியன்ஸுக்கு பிடிச்சுப் போச்சு. ஷூட்டிங் போனால், ‘உங்க படம் ஸ்பீடா இருந்துச்சு....’னு பாராட்ட ஆரம்பிச்சிட்டாங்க. இந்த ஸ்பீடு கரெக்ட்டா? நாம எட்ஜ்ல இருக்கோமா? இல்லை இதுக்கு மேல ஸ்பீடா போனால் சரிப்பட்டு வருமா? யோசிச்சிருக்கேன்.

ஆனா, ஆடியன்ஸ் அந்த ஸ்பீடை ரசிக்க ஆரம்பிச்ச பிறகு இன்னும் ஸ்பீடு கொடுக்கணும்னு ரெடியாகிட்டேன். ஒரு படத்துக்காக ரெண்டு வருஷம் வேலை பார்க்குறோம். அது ரிலீஸ் ஆகிற முதல் ஷோல கிடைக்கற பாராட்டுதான் தொடர்ந்து இப்படி வேகமான ஸ்கிரிப்ட்டை யோசிக்க வைக்குது.

‘என் படங்கள் ரொம்ப ஸ்பீடு... ஸ்பீடு’னு சொல்லிட்டாங்க. ஸோ, இனிமே ஸ்பீடு கட்டாயம் இருந்தாகணும். கமர்ஷியல் படம்னு இஷ்டத்துக்கு எதுவும் எடுத்துடக்கூடாதுங்கறதுல கவனமா இருப்பேன். சென்ஸிபிளா சொல்லணும். அதாவது லாஜிக் பொருந்தற மாதிரிதான் யோசிப்பேன்.

ஒரு படத்துல எடிட்டிங் ஃபாஸ்ட்டா இருந்தாலே அது ஸ்பீடா வந்திடும். ராத்திரியும் பகலுமா கண்ணு முழிச்சு ஒர்க் பண்ணுவோம். ஒரு மணி நேர இடைவெளி கிடைச்சா. ஓரமா கிடக்கிற ஒரு பெஞ்சில தூங்கி எழுந்திரிச்சிட்டு மறுபடியும் வேலையை கவனிக்க போயிடுவேன். ‘ஆடியன்ஸை யோசிக்க விடாமல் படத்தைக் கொண்டு போகணும். அவங்க யோசிக்க ஆரம்பிச்சா குறையை கண்டுபிடிக்க ஆரம்பிச்சிடுவாங்க’னு எடிட்டர் விஜயன்சார் சொல்லுவார். அது நிஜந்தான். ‘நாலு சீன் நச்சுனு இருந்தா போதும்.

மீதி பேலன்ஸ் பண்ணிடலாம்’பார். அவர்கிட்ட இருந்துதான் நிறைய ஷாட் எடுக்க கத்துக்கிட்டேன். வேற வேற மெட்டீரியல்ஸ் எடுத்து வைச்சா, ஒரு கன்டென்ட்டை மூணு சீனா உடைக்கறது கூட ஈஸியாகிடும். நமக்கு ஷாட்ஸ் அதிகம் தேவை. ஹீரோவும் வில்லனும் மீட் பண்ணினாங்கன்னானு ஒரு சீன் இருந்தால்.

ஹீரோ வந்தார். மீட் பண்ணினார்னு இருந்தா என்ன சுவாரஸியம் இருக்கும்? ஹீரோ வந்து வில்லனை மீட் பண்ற வரை சின்னச் சின்ன ட்ராவல், ட்விஸ்ட் எல்லாம் இருக்கணும்னு விஜயன் சார் சொல்லுவார். இன்வெஸ்டிகேஷன் எடுத்தால் ஆடியன்ஸை கன்வின்ஸ் பண்ற மாதிரி இருக்கணும்.

அவங்க காதுல பூ சுத்துற மாதிரி யோசிக்கமாட்டேன். நாம போற ஸ்பீடுல ஆடியன்ஸுக்கு எதுவும் புரியாமல் போயிடக்கூடாதுங்கறதுலேயும் கவனமா இருப்பேன். You respect for the audience muchனு சொல்றவங்க, take it for convenienceஸா எதுவும் பண்ணலைன்னும் பாராட்டியிருக்காங்க. இன்னிக்கு இருக்கற ஆடியன்ஸ் ரொம்ப புத்திசாலியா இருக்காங்க. எல்லாத்தையும் நெட்ல தட்டிப் பார்க்கறாங்க. யதார்த்தமா எடுத்தால்தான் தப்பிக்க முடியும்.

சரியான ப்ளானிங் வேணும். அதான் ஸ்பீடுக்கான முதல் காரணம். ஸ்டோரி டிஸ்கஷன்ல இருந்தே, இதான்... இதான்னு சல்லடையில போட்டு அலசி அலசி சீன் பிடிப்போம். டிஸ்கஷன் முடிஞ்சதும் அந்த கதைக்கான லொகேஷன் தேடுவோம். ஒரு லொகேஷன் ஓகே பண்ணிட்டேன்னா... நாலஞ்சு நாளா அந்த லொகேஷனைச் சுத்தி வந்துடுவேன்.

அந்த ஊர் மக்களோட பேசுறது, அங்கே உள்ள சந்து பொந்துகள் எல்லாம் நடந்தே போய் பார்ப்பேன். தேவையான லொகேஷன்கள்ல அன்னிக்கு காலையில வாக்கிங் போறது மாதிரி அங்கேயே போய் பார்த்துடுவேன். நாம நம்ம வீட்டுக்குள்ளேயே புழங்கிட்டிருந்தால், நமக்கு வீடு மைண்ட்ல ஏறிடுமே. அந்த மாதிரி அந்த லொகேஷன்கள்ல புழங்கி புழங்கி மைண்ட்ல அந்த இடங்களை எல்லாம் ஏத்திக்குவேன்.

ஆர்ட்டிஸ்ட்களை கிளம்பிவரச் சொல்லிட்டு, ஏழெட்டு கேமராக்களையும் வச்சுக்கிட்டு எல்லாரையும் காக்க வச்சிட்டு லொகேஷன்கள்ல போய் யோசிக்கறதே கிடையாது. லொகேஷன்களை மைண்ட்ல ஏத்திக்கிட்டேன்னா... சீன் தானா கண்ணு முன்னால ஓடும். ஷூட்டிங் அன்னிக்கு ஒரு லொகேஷன் இல்லைன்னா...

அதே மாதிரி நாலு லொகேஷன்கள் மைண்ட்ல வச்சிருப்பேன். ‘ஏய்... அந்தக் கல்யாண மண்டபத்துக்குப் பின்னாடி போ.. அந்த இடம் இருக்கும்..’, ‘அந்த கிணறுக்கு அடுத்து போ.. அந்த இடம் செட் ஆகும்’னு லேப்டாப், பேப்பர்னு எதையும் பார்க்காமலேயே சொல்லிடுவேன். வொர்க்ல ஸ்பீடு வேணும். படத்துல ஸ்பீடு வர்றது அது தனிக்கதை..

ஷூட்டிங்னாலே என்னைப் பொறுத்தவரை அது war fieldதான்.ஒரு ட்ரெயின் வரப்போகுதுனா... உடனே அதை எடுத்தாகணும்... அந்த சீன் கோப்ரால வரலைன்னா... உடனே 5டியில ட்ரை பண்ணச் சொல்லிடுவேன். அதுவுமே சரிவரலைன்னா.. மொபைல் கேமரால ஷூட் பண்ணி வைங்கப்பான்னு சொல்லிடுவேன்.

‘அதுல வருமா?’னு கேட்பாங்க... ‘கொஞ்சம் ஷேக் இல்லாம எடுத்தால் அதையும் படத்துல யூஸ் பண்ணிக்கலாம்னு ப்ரியன் சார் சொல்லிடுவார். இதுதான் ஸ்பீடு. இப்படித்தான் எடுப்பேன்னு அங்கேயே முக்கிக்கிட்டு சேரை போட்டு உட்கார்ந்திட்டே இருக்கறது கிடையாது. ஷூட்டிங் ஸ்பாட்டுல சேர் இருந்தாலே எனக்குப் பிடிக்காது.

சேரை பார்த்தாலே அது எகிறி பறந்திடும். ஸ்டூல் தான் யூஸ் பண்ணுவேன். ஹீரோக்கள் சின்ன பிரேக்ல ரெஸ்ட் எடுக்கணும்னா கூட அந்த ஸ்டூல்லதான் உட்கார்ந்திருப்பாங்க. எங்க யூனிட்டுல சூர்யா சார் ஸ்டூலுக்கு பழகிட்டார். டைமுக்குள்ள நிறைய ஷாட்ஸ் எடுத்திடணும். இல்லைன்னா ஸ்பாட்டுல ஃபைட் தான் நடக்கும். ஒரு சீன் நல்லா வரணும்ங்கறதுக்காக விரும்பி போடுற சண்டை அது. காலையிலேயே பரபரப்பு. அதனால் தான் சாயங்காலம் ரொம்ப சென்ஸிபிளா இருக்கும்.

நாம காலையில பரபரப்பு ஆகலைன்னா ஈவ்னிங்ல தேவையில்லாம நம்ம பிபி எகிறும். ‘வேலை நடந்தாகணும்.. மறுநாளும் இதே சீனை இதே லொகேஷன்ல எடுக்கக்கூடான்னு ஓடிக்கிட்டிருப்போம்.

காலையில பிபி.யை ஹை லெவல்ல வச்சா... ஈவ்னிங் பி.பி. ஏறவே தேவையில்லை அது அதே லெவல்லதான் இருக்கும். கதை ரெடியானதும், ஸ்கிரிப்ட் ஃபுல்லா செட் ஆனாலும் அதன் பிறகு கிரியேஷனுக்கான வேலை குறைவுதான். கதையையும், டயலாக்கையும் மொதல்லேயே கரெக்ட் பண்ணிட்டோம்னா...

அதன்பிறகு இயக்கம்கறது மேஸ்திரி ஒர்க் மாதிரிதான். ஸ்பாட்டுல கிரியேட்டிவிட்டியை கிளறிவிடமாட்டேன். சின்னச் சின்ன மெட்டர்மென்ட்ஸ்தான். புதுசா ஏதாவது யோசிக்கறது கிடையாது. சீன் கான்செப்ட்லேயோ டயலாக்லேயோ சின்ன மாற்றங்கள் தேவையா இருந்தால்தான் ஒர்க் பண்ணுவேன். நிறைய ஷாட்ஸ் எடுத்து துண்டு துண்டா வெட்டினா... கட் பண்ணும் போதுதான் ஸ்பீடு தெரியும்.

பொதுவா, ஸ்கிரிப்ட், சீன்கள் யோசிக்கும்போது ரியல் லைஃப்ல பொருந்துற மாதிரிதான் கன்டென்ட் யோசிப்பேன். ஒரு ஹீரோவுக்கும் இயக்குநருக்கும் எப்படி ஒரு புரிதல் தேவையோ... அதே மாதிரி ஒளிப்பதிவாளருக்கும் இயக்குநருக்கும் இடையேயான உறவு ரொம்ப முக்கியம். ஒரு சீனுக்கு சில சமயங்கள்ல ஆப்ஷன் ஆஃப் ஷாட்ஸ் நிறைய தேவைப்படும்.

கோப்ரா, ஃபைவ்டி, சோனின்னு மினிமம் அஞ்சு கேமரா கன்பாஃர்மா இருக்கும். சில டைம்ல இதுக்கு மேலேயும் கேமராக்கள் தேவைப்படும். இந்த வேகத்துக்கு ஈடுகொடுக்கற மாதிரி கேமராமேன் வேணும். இத்தனை கேமரா இருந்தாலும், குவாலிட்டி கொடுத்தாகணும், கதையையும் திருப்திப் படுத்தணும். என்னையும் திருப்திப் படுத்தணும்.

சாயங்காலம் ஆறு மணிக்கு பேக்கப் ஆகிட்டா வயல்ல நாள் பூராவும் ஏர் ஓட்டிட்டு உழுது களைச்சது மாதிரிதான். மொட்டை தார்ரோட்டுல ஒரு சேஸிங் எடுத்த அன்னிக்கு எங்க மூஞ்சை எங்களாலேயே பார்க்க முடியாது. ஃபிலிம் இருக்கற காலங்கள்ல ஃபுட்டேஜ் பார்த்து பார்த்து எடுத்தோம்.

இப்போ டிஜிட்டல்னால ஒரு படத்துக்கு டோட்டல் ஃபுட்டேஜை கணக்கிட்டா பல லட்சம் ஃபுட்டேஜ்களைத் தாண்டிடும். சேஸிங்கும், ஃபைட்டிங்கும் ஒரு படத்துல நிறைய இருந்தா அப்படித்தான் வேலை பார்க்க வேண்டியிருக்கும்.

நாளுக்கு பத்தாயிரம் அடி எடிட்டிங்ல ஒர்க் பண்ண வேண்டிவரும். தேவையில்லாம ஒரு ஷாட் கூட நான் வைக்க மாட்டேன். சில சீன்களை பிரமாண்டமா எடுக்கும்போது செட்ல மேல ஃபுல் டைமும் ஒரு கேமரா தொங்கிகிட்டே இருக்கும். லொகேஷன்களுக்கும் மெனக்கெடணும். தூத்துக்குடி, திருநெல்வேலி ஏரியால எல்லாம் ஒவ்வொரு தெருவும் அத்துப்படி ஆகிடுச்சு.

பெரிய படங்கள் பண்றப்போ கரெக்ட்டான பிளானிங் வேணும். ஏர்போர்ட்ல சாயங்காலம் 6 மணி வரை ஷூட்டிங்னா... அதுக்குள்ல முடிச்சிட்டு அந்த இடத்தைவிட்டு நகரணும். நாம நினைச்ச ஆட்கள் வரலைனாலும் சமாளிக்கற பக்குவம் தெரியணும். ‘உங்க படத்துல இவ்வளவு ஆர்ட்டிஸ்ட்கள் வச்சு எப்படி ஈஸியா எடுக்கறீங்க?’னு ஆச்சரியப்படுவாங்க.

சுகர் ஃபாக்டரியில லோடு இறங்குற மாதிரி ஆர்ட்டிஸ்ட்கள் வந்துக்கிட்டே இருப்பாங்க. எல்லாரையும் சமாளிக்கணும். ஹீரோல இருந்து எல்லா ஆர்ட்டிஸ்ட்களும் டைமுக்கு சாப்பிட்டாங்களா?னு கவனிப்பேன். அதுல ஒரு சுயநலம்தான். புரியுதா உங்களுக்கு? நான் எவ்வளவு வேலை வாங்குறேனோ அந்த அளவுக்கு கரெக்ட்டா அவங்கள பாத்துக்குவேன்.

வொர்க்கர், ஆர்ட்டிஸ்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்னு யாரா இருந்தாலும் ஒரு ஷாட் நல்லா பண்ணினா.. ‘ஏய் கிளாப் பண்ணுங்க’னு கைதட்டச் சொல்லுவேன். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ரோட்டுல ஓடுறது, ஜம்ப் பண்றது சரியா பண்ணினாங்கன்னா... கூப்பிட்டு பாராட்டுவேன். பாராட்டுறது ஒரு சுயநலம்தான். கைதட்டி பாராட்டும்போது அடுத்த ஷாட்டுக்கு அவங்க தயாரா இருப்பாங்க.

டைமுக்கு சாப்பிட்டாங்கன்னா... ரெண்டு மணிக்கு அடுத்த ஷாட்டுக்கு கரெக்ட்டா வந்து நிப்பாங்க. ‘எல்லாரும் சாப்பிட்டாங்களா?’னு செக் பண்றது கூட இயக்குநரோட டியூட்டில தான் வருது. ஷாட் வைக்கும்போது, ‘அந்த டீம் சாப்பிடப் போகுது’னு சொன்னா... கோபமாகிடும். பன்னிரெண்டே முக்காலுக்கு அந்த டீமைத் துரத்து...

நெக்ஸ்ட் டீமை இப்பவே சாப்பிடச் சொல்லு... அவரை மட்டும் வச்சுக்கோ... இப்படி சைடுல இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துக்கிட்டே வேலை நடக்கும். மில்ட்ரி ட்ரெயினிங் நாம எடுத்துக்கிறதுதானே..! காலையில எழுந்திரிக்கும்போது வர்ற கடுப்பு எந்தத் தொழிலிலும் கிடையாது. காலையில நான் மட்டுமா வேலைக்குப் போறேன்? இந்தத் தொழில் நம்மள சந்தோஷமா எழுப்பி விடுது.

அதே மாதிரி ஸ்பாட்டுல ஒருத்தரை திட்டினேன்னா... பேக்கப் ஆகும் போது, கூப்பிட்டு ‘சாரி’ கேட்டுடுவேன். பர்சனலா யாரையும் திட்டினதில்ல. எல்லாமே இன்புட் நல்லா வரணுங்கறதுக்காகத்தானே.. டைரக்டரும் அதனால்தான் கோபப்பட்டார்னு அவங்களும் புரிஞ்சுப்பாங்க. என்கிட்ட இருக்கற ஒரு பழக்கம் - இந்தப் படத்துக்கு இதுதான் பட்ஜெட்... இத்தனை நாட்கள்லதான் படத்தை முடிக்கணும்னு பிளான் பண்ணிட்டா... அதை மட்டும் நான் மாத்தினது இல்லை.

150 பேர் வந்தால் தானே வேலை நடக்கும்? அத்தனை பேரையும் பார்த்தால்தான் ஷூட்டிங் ஃபீலே எனக்கு வரும். க்ரௌடு இல்லைனா ‘என்னப்பா இன்னிக்கி சண்டேவா?’னு அசிஸ்டென்ட்ஸ்கிட்ட கேட்டு கலாய்ப்பேன்.

ஒரு படம் ஓடும்போதுதானே அதுல நடிச்சவங்க ‘அது நான் நடிச்ச படம்ப்பா’னு பெருமைப்பட முடியும்? லைட்மேன் வரை இதுவரை ஒரே யூனிட்ல ஒர்க் பண்றது பலம். ஒருஷாட் முடிஞ்சதும், ‘அடுத்து அங்கே தான்’னு நான் சொல்லாமலேயே லைட்மேன்கள் ஒயரை சுத்த ஆரம்பிச்சிடுவாங்க.

நானும் மைக்ல ‘இன்னும் ரெண்டு ஷாட் தான் இருக்கு... தேவையில்லாததை ஏத்த ஆரம்பிச்சிடு’னு வார்னிங் கொடுத்திடுவேன். ‘ஷிஃப்ட்’னு சொன்னதும்... ஷிஃப்ட் ஆகிடணும். இல்லைன்னா.. கிளம்பாத வண்டி எல்லாம் டமால் டுமீல்தான். ஆர்ட்டிஸ்ட்கள் ஷாட் முடிஞ்சதும்..

அடுத்து ஷாட் இல்லைன்னா ஸ்பாட்டுல என் கண்ணு முன்னாடி நிக்கக்கூடாது. வெட்டிப் பேச்சு பேச விட மாட்டேன். ‘ஷாட் முடிஞ்சதா?’ உடனே வெளியே அனுப்பிடுவேன். இல்லைன்னா இந்த டீம் ஷாட்டை நாம எடுத்தோமா? இல்லையா?னு குழம்பிடுவோம். குழப்பத்துக்கு இடமே கூடாது. தெளிவா இருக்கணும்னா கண்டிப்பு தேவை.

நூறு சதவிகிதம் கதையை சரியா பண்ணிட்டா போதும். மத்த எதுக்கும் நாம பயப்படத் தேவையில்லை. கதையை நம்பணும். எல்லாமே புரொட்யூஸர்கிட்ட சொல்லப்பட்டதா இருக்கணும். எக்ஸ்ட்ரா செலவு இருந்தால் கேட்டுட்டு பண்ணணும். தயாரிப்பாளர்கள்கிட்டேயும் நல்ல புரிதல் வேணும். தயாரிப்பாளர்கள் நல்லா இருந்தால்தான் சினிமா நல்லா இருக்கும். நாம நல்லா இருக்கமுடியும்.”

- மை.பாரதிராஜா