ரிச்சி



தத்துவ மசாலா!

உலகில் இருக்கும் ஒவ்வொருவரும்  யாரோ ஒருவருக்காகக் காத்திருக்கிறார்கள். அந்தக் காத்திருத்தல்தான் உலகை இயக்குகிறது.யார் யாருக்காகக் காத்திருக்கிறார்கள், யாருடைய காத்திருப்பிற்குப் பலன் கிடைத்தது, யாருக்குப் பொய்த்துப்போகிறது என்பதை ஃபிளாஷ்பேக் பீரியட் திரைப்படமாகச் சொல்கிறது ரிச்சி. ‘உள்ளிடவரு  கண்டன்டே’ என்கிற சூப்பர்ஹிட் கன்னடப் படத்தின் ரீமேக் இது.

கருப்புச் சட்டை, தாடி, போலீஸ் பெல்ட், துப்பாக்கி என  கம்பீரமாக வருகிறார் நிவின் பாலி. ‘நேரம்’ படத்தில் பார்த்த அமுல்பேபியா இவர் என்று மலைக்குமளவுக்கு மிரட்டியிருக்கிறார். எனினும், மலையாளம் கலந்த தமிழில் பேசுவதுதான் நம்மை பதம் பார்க்கிறது. ரஜினி, கமல் மற்றும் மம்முட்டி பாடல்களுக்கு அவர் போடும் குத்தாட்டம் ரகளை ரகம். 

துடிப்பான பத்திரிகையாளராக  ஷ்ரத்தா கவர்கிறார். முக்கியமான வேடத்தில் நட்டி, அமைதியாக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறார். அவரது ஜோடியாக வரும் லட்சுமி பரிதாபப்பட வைக்கிறார். சர்ச் ஃபாதராக பிரகாஷ்ராஜுக்கு அருமையான வேடம். குமரவேல், ‘ஆடுகளம்’ முருகதாஸ், துளசி, விஷாலின் அப்பா ஜி.கே.ரெட்டி, ரிச்சியின் நண்பனாக வரும் ரகு, மதுரைவாசியாக வரும் ‘டெமோகரஸி’ என படத்தில் ஏகத்துக்கும் அழுத்தமான வேடங்கள்.

பிரகாஷ்ராஜை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம். சில காட்சிகளே வந்தாலும் குமரவேல் வழக்கம்போல் அசத்தல் நடிப்பை அள்ளித் தெளித்திருக்கிறார். கடலில் எது கிடைத்தாலும் தனக்குப் பாதி வேண்டும் என தாடிவைத்த டீசன்ட் வில்லனாக வரும்  ஜி.கே.ரெட்டி ரசிக்க வைக்கிறார்.

‘எந்தக் கதைக்கும் ஆரம்பமோ முடிவோ இல்ல. நாம எங்க நிப்பாட்டுறோமோ அங்கதான் முடிவுனு நெனச்சுக்குறோம்’ - இப்படி வருகிறது  க்ளைமாக்ஸ் டயலாக். படமும் அப்படித்தான்.ஒளிப்பதிவாளர்  பாண்டிகுமார் , எடிட்டர் அதுல் விஜய் ஆகியோரின் பணி சிறப்பாக இருக்கிறது. அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் குறையொன்றுமில்லை.

கெளதம் ராமச்சந்திரன் டைரக்‌ஷனில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், தமிழ் ரசிகர்கள் மலையாள ‘பிரேமம்’ படத்தை  கொண்டாடித் தீர்த்ததைப் போல இதையும் கொண்டாடியிருப்பார்கள். ரொம்ப நம்பிக்கை வைத்து வெற்றி வாய்ப்பை மயிரிழையில் இழந்திருக்கிறார் நிவின் பாலி.