சித்தூர் சிறுக்கிக்கு GST லேது!



“இந்த ‘அருவா சண்ட’ படத்தின் ஹீரோ ராஜா என்னுடைய நீண்ட கால நண்பர். இது காதலும் கபடியும் கலந்த கதை. அடிப்படையில் நானும் ராஜாவும் கபடி வீரர்கள். கபடி விளையாட்டில் இந்தியா உலகளவில் முதலிடத்தில் இருக்கிறது. நம்மூர் இளைஞர்கள் கபடி விளையாட்டில் சிறப்பாக விளையாடினாலும் உலக அரங்கிற்கு செல்லும் அளவுக்கு அவர்களுக்கு  முறையான வழிகாட்டுதல் இல்லை.

அதை நிவர்த்தி செய்யும் அளவுக்கு கபடி வீரர் ராஜாவுக்காக ஒரு கதை பண்ணினேன். அதுதான் ‘அருவா சண்ட’. இதோட ஃபர்ஸ்ட் லுக்கை சத்யராஜ் சார் ரிலீஸ் பண்ணியபோது படத்துக்கு எக்கச்சக்க ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

இது நிஜமாகவே வித்தியாசமான ஜானர் படம். நிஜ சம்பவங்களின் பின்னணியில் ஒரு தரமான கமர்ஷியல் படம்...’’ உற்சாகமாகப் பேசுகிறார் ஆதிராஜன். ‘சிலந்தி’, கன்னடத்தில் ‘ரணதந்திரா’ படங்களை இயக்கியவர்.  “மறுபடியும் ரத்தம், அடிதடின்னு ரணகளமா ஒரு படமா?”

“படத்துல நிச்சயமா ரத்தம் இருக்கும். ‘அருவா சண்ட’ என்ற  டைட்டிலை வைத்து விட்டு ரத்தம் இல்லாமல் படம் பண்ண முடியாது. நாம் அல்ட்ரா மாடர்ன் உலகத்தில் இருக்கிறோம். குக்கிராமம் வரை செல்போனின் ஆதிக்கம். ஆனா, இன்னும் ஜாதியை ஒழிக்க முடியலை. அது மட்டும் நீர்த்துப் போகாமல் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது.

ஏன்னா, அது நம் மக்களுடைய ரத்தத்தில் ஊறிப்போன விஷயமாக இருக்கிறது இங்கு காதல் விஷயத்தில் ஜாதி முதன்மையாக பார்க்கப்படுகிறது. விரட்டி விரட்டி கெளரவக் கொலைகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. ஏன் இந்தக் கொலைகள், காதலர் தரப்பு என்ன சொல்கிறது, கூடப்பிறந்தவளையே / மகளையேகூட கொலை செய்யத் துடிப்பவர்களின் நியாயம் என்ன என்று எல்லாத்தையும் அலசும் படமாக இதை எடுத்திருக்கேன்.”

“படத்தோட ஒரு வரிக் கதை?”

“இரண்டு சமூகத்தைச் சேர்ந்த பையனும் பொண்ணும் சந்திக்கிற பிரச்சனைகள்தான் படத்தின் ஒன் லைனர் ஸ்டோரி. ஆனால் ஜாதிப் பிரச்சனையை மையமாக சொல்லாமல் கபடி விளையாட்டு கலந்த கமர்ஷியல் பார்முலாவில் படம் இருக்கும்.”
“ஹீரோ?”

“ராஜா. திருநெல்வேலிக்காரர். நிஜ கபடி விளையாட்டு வீரர். மாவட்ட அளவில் பல போட்டிகளில் கோப்பை வாங்கியவர். இது புதுமுகத்துக்கான கதையாக இருந்ததால் ராஜா பொருத்தமாக இருந்தார். கூத்துப் பட்டறையில் நடிப்பு, தீனா மாஸ்டரிடம் நடனம், தளபதி தினேஷிடம் சண்டைப் பயிற்சி என சினிமாவுக்கான அடிப்படை பயிற்சிகளை முடித்த பிறகுதான் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.”

“மாளவிகா மேனன்?”

“ஏற்கனவே ‘விழா’, ‘வெத்துவெட்டு’ன்னு தமிழில் சில படங்களில் ஹீரோயினாக பண்ணியிருக்கிறார். தவிர, தெலுங்கு, மலையாள மொழிகளிலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஹீரோவுடைய கேரக்டர் எவ்வளவு வலுவானதோ அதே  அளவுக்கு மாளவிகாவுக்கும் வலுவான கேரக்டர். இந்தப் படத்துக்குப் பிறகு மாளவிகாவுக்கு ஸ்டெடி மார்க்கெட் க்ரியேட் ஆகும்.”

“மற்ற நடிகர்கள்?”

“ஹீரோவின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் செங்கல் சூளை தொழிலாளியா வர்றாங்க. சரண்யா மேடத்தைச் சந்தித்து கதை சொன்னபோதே சமீபகாலங்களில் இப்படியொரு வலுவான ரோல் நான் பண்ணியதில்லை என்று சொன்னதோடு உடனே நடிக்க சம்மதித்தார். இந்தப் படத்துக்காக அவருக்கு இன்னொரு முறை தேசிய விருது கிடைக்கலாம். கதாபாத்திரமாகவே வாழ்ந்துகாட்டியிருக்கிறார்.

ஃபேஸ்புக் மைனர் என்ற கேரக்டர்ல கஞ்சா கருப்பு வர்றார். காமெடி சரவெடியா தெறிக்கும். செளந்தரராஜா பவர்ஃபுல் கேரக்டர் பண்றார். ஒரு சண்டைக்காட்சியில் நிஜமாகவே ஹீரோவை வெட்டினார். டம்மி கத்தி என்பதால் ஹீரோ லேசான காயத்தோடு தப்பினார். அப்புறம், முதலுதவி செய்து ஹீரோவைக் காப்பாற்றினோம். ‘ஆடுகளம்’ நரேன், ‘காதல்’ சுகுமார், நெல்லை சிவா, பயில்வான் ரங்கநாதன்...  படத்துல ஸ்டார் காஸ்டிங் அதிகம்.” 

“டெக்னீஷியன்ஸ் பற்றி...?”

“தரண் இசையில் ஐந்து பாடல்கள் கலக்கலாக வந்திருக்கு. அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவும் - தேவாவும் இணைந்தால் சூப்பர் பாடல்கள் ரெடி. வஸந்த் - தேவா இணைந்தால் ஒரு மேஜிக் நடக்கும். அது மாதிரி இதில் எனக்கும் தரணுக்குக்குமிடையே கெமிஸ்ட்ரி பிரமாதமா ஒர்க் அவுட்டாகியிருக்கு. ரம்யா நம்பீசன் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். ‘இவ சித்தூர் சிறுக்கி செக்ஸான சிறுக்கி, இது சத்தான சரக்கு... சர்வீஸும் இருக்கு... ஜி.எஸ்.டி இல்ல உனக்கு’ என்ற அயிட்டம் பாடலுக்கு மும்பையிலிருந்து சுப்ரா கோஸ் என்ற க்ளாமர் குயினை இறக்குமதி பண்ணியிருக்கோம்.

சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். நம்மூர்க்காரர்தான். ஆனால் கன்னடத்துல ஏராளமான படங்கள் பண்ணியிருக்கிறார். மலை உச்சியில் எடுக்கப்பட்ட பாடல் மற்றும் கபடி மேட்ச் காட்சிகளை சவாலாக எடுத்து பண்ணியிருக்கிறார். சாபு ஜோசப் எடிட்டிங். நான் இயக்கிய ‘சிலந்தி’ யில் அசிஸ்டென்ட் எடிட்டர்.

இப்போது கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் எடிட்டர். ‘வல்லினம்’ படத்துக்காக நேஷனல் அவார்ட் வாங்கியவர். சண்டைக் காட்சிகளை தளபதி தினேஷ் கதைக்கு ஏத்தமாதிரி கச்சிதமாக கம்போஸிங் பண்ணிக் கொடுத்தார். ஒயிட் ஸ்கிரீன் புரொடக்‌ஷன்ஸ் அதிக பொருட் செலவில் தயாரித்திருக்கிறது.” “உங்களைப் பற்றி?”

“சொந்த ஊர் மதுரை. தியாகராஜர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே கவிதை, கட்டுரை போட்டிகளில் ஆர்வம் அதிகம்.  மதுரை ஆல் இந்தியா ரேடியோவில் நான் எழுதிய கவிதை, பாடல்கள் ஒளிபரப்பாகியுள்ளன. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் பி.காம். இயக்குநர் சசிகுமாரும் இதே கல்லூரிதான்.

படிக்கும்போது சினிமா இயக்குநராக வரவேண்டும் என்பதுதான் லட்சியமாக இருந்தது. அந்த சமயத்தில் நான் எழுதிய கவிதைகள் நூறு முறையாவது பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும்.  எம்.ஏ., எம்.பில் ஜர்னலிஸம் முடித்தபிறகு பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக சேருவதற்கு முயற்சி செய்தேன். தூரத்திலிருந்து அவர்களை வேடிக்கை பார்க்க மட்டும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த சமயத்தில் பிரபல மாலை நாளிதழில் நிருபராக சேர்ந்தேன். அதன் மூலம் சினிமா தொடர்புகள், ஷூட்டிங் அனுபவங்கள் கிடைத்தது. பிரபல இயக்குநர்களின் கதை விவாத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புகளும் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக பத்திரிகைத் துறையிலிருந்து சினிமாவுக்கு இடம் பெயர்ந்து ‘சிலந்தி’ படத்தை இயக்கினேன்.

அப்போது சினிமாவை பிலிமில் ஷூட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். டிஜிட்டல் சினிமாவைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காலகட்டம் அது. டிஜிட்டல் சினிமாவுக்கு சேட்டிலைட் பிசினஸ் உள்பட எந்த வருமான உத்தரவாதமும் இருக்காது. ஆனால் அந்த சமயத்தில் துணிச்சலாக டிஜிட்டலில் ‘சிலந்தி’ படத்தை எடுத்தேன்.

தயாரிப்பாளருக்கும் நல்ல லாபம் கிடைத்தது. இன்று பிலிம் இல்லை. தென்னிந்தியாவில் அனைத்து லேப்களும் தங்கள் பணிகளை நிறுத்திக் கொண்டன. ஆனால் டிஜிட்டல் டிரெண்டிங்ல இருக்கிறது. அதன் முதல் விதை ‘சிலந்தி’ என்று நினைக்கும் போது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.”

- சுரேஷ்ராஜா