விமலுக்கும் எனக்கும் சண்டை!



இயக்குநர் பூபதி பாண்டியன்  உண்மையை உடைக்கிறார்..

‘தேவதையை கண்டேன்’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘மலைக்கோட்டை’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் இயக்கியுள்ள படம் ‘மன்னர் வகையறா’. விமல் ஹீரோவாக நடிக்கிறார். கடைசியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விஷாலை வைத்து ‘பட்டத்து யானை’ இயக்கிவிட்டு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு களத்துக்கு வந்திருக்கிறார் பூபதி பாண்டியன்.

“எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தான் இந்தப் படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் நாங்கள் இணைய முடியவில்லை. அதன்பின் தான் விமல் இந்தப் படத்தை தானே தயாரிக்க முன்வந்தார்.

எனக்கு ஒரு ராசி இருக்கிறது. என் டைரக்‌ஷனில் நடித்த ஹீரோக்கள் தனுஷ், விஷால் ஆகியோர் வெற்றிகரமான தயாரிப்பாளர்களாக மாறிவிட்டார்கள். அந்தவகையில் விமலும் வெற்றிகரமான தயாரிப்பாளராக இதில் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இது என்னுடைய பாணியிலான காமெடிப் படம். மற்றபடி கதைன்னு சொல்வதற்கு எதுவும் இல்லை. ஒரு கமர்ஷியல் படத்தில் இருக்கவேண்டிய காதல், காமெடி, சென்டிமென்ட், அடிதடின்னு எல்லாம் கலந்த கலவையாக இருக்கும்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுலதான் ஒரு விஷயத்தை கவனித்தேன். நிறைய நடிகர்களுக்கு சரியா வேட்டி கட்டவே தெரியலை. அந்த அளவுக்கு நம்ம பண்பாட்டை கொஞ்சம் கொஞ்சமா தொலைச்சுட்டு வர்றோம். அந்த வகையில் பண்பாட்டை ஞாபகப்படுத்துமளவுக்கு சில காட்சிகள் இருக்கும்.

விமல், ஜாலியான மனிதர். அவர் சீரியஸாகி நான் பார்த்ததே இல்லை. அப்படிப்பட்டவர் ஒரு பாடல் காட்சியின்போது கொஞ்சம் டென்ஷனாகிவிட்டார். சின்னதாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரண்டு நாட்கள் இருவரும் பேசாமல் இருந்தோம். ஆனால் பின்னர்தான் பேசாமல் இருந்ததை விட பேசியே இருக்கலாம் என சொல்லும் வகையில் தனித்தனியாக எங்கள் உதவியாளர்களிடம் புலம்பிக் கொண்டு இருந்தோம்.

விமல் இந்தப் படத்திற்காக இரண்டு வருடங்கள் வேறு எந்தப் படங்களையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தது நிச்சயம் வீண்போகாது. வட்டியும் முதலுமாக 2018ல் அவர் நடிப்பில் ஆறு படங்கள் தயாராக இருக்கின்றன.

ஆனந்தி முதன்முறையாக காமெடி ட்ரை பண்ணியிருக்கிறார். ரோபோ சங்கரை இமிடேட் பண்ணி டான்ஸ் ஆடும் காட்சி ரசிகர்களிடையே ஒர்க் அவுட் ஆகும் என நம்புகிறேன். இடைவேளைக்குப்பின் இடம்பெற்றுள்ள சரண்யா, நீலிமா காமெடி மிக முக்கியமாக பேசப்படும்.

ஒளிப்பதிவு சூரஜ் நல்லுசாமி. எழில் சார் படங்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர். ‘அவள் அப்படித்தான்’ படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் நல்லுசாமியின் மகன். காமெடி படத்தை கலர்ஃபுல்லாக காண்பிக்க உதவி இருக்கிறார்.

என்னுடைய படங்களில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். பிஜாய் ஜாக்ஸின் இசை கலக்கலாக வந்துள்ளது. கோபி, நான் இயக்கிய ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின்போது எடிட்டிங் உதவியாளராக இருந்தார். இப்போது என் படத்துக்கே அவர் எடிட்டிங் செய்வது மகிழ்ச்சி.

 செலவு கூடுகிறதே என்று வருத்தப்படாமல் தயாரிப்பாளர் சிங்காரவேலன் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்தப் படம் இன்னொரு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ போல் செம ரகளையா வந்திருக்கு’’ என்று உற்சாகமாக சொல்கிறார் பூபதி பாண்டியன்.

- சுரேஷ்ராஜா