ஆசியாவுக்கே பெருமை சேர்க்கும் ‘டிக் டிக் டிக்’



இந்தியாவின் முதல் விண்வெளிப்படம் என்கிற கோதாவில் ‘டிக் டிக் டிக்’கோடு களமிறங்குகிறார் ஜெயம் ரவி. ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டும் சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில் ‘மிருதன்’ வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார். படத்தின் துல்லியமான தரத்துக்காக மெனக்கெட்டுக் கொண்டிருக்கும் சக்தி செளந்தரராஜனை சந்தித்தோம்.

“விண்வெளி தொடர்பான சப்ஜெக்டுன்னா ஸ்க்ரிப்ட் சிரமம் இல்லையா?”

“உண்மைதான். கிட்டத்தட்ட ஒன்பது மாசம் இதோட ஸ்கிரிப்ட் வேலைகளுக்கே நேரம் எடுத்துக்கிட்டோம். இஸ்ரோ விஞ்ஞானி ஒருத்தர்கிட்ட  எங்க சந்தேகங்கள் எல்லாம் கேட்டு சரி பண்ணிட்டு எழுத உட்கார்ந்தேன். இதை எழுதுறப்பவே நிறைய சிரமங்களை உணர்ந்தேன். வழக்கமா ஸ்கிரிப்ட் எழுதும்போது இன்டீரியர்/ எக்ஸ்டீரியர்.../ லொகேஷன்/ பகல் / இரவு இதெல்லாம் குறிப்பிட்டு எழுதுவோம்.

ஸ்பேஸ்ல இது எதுவும் வராது. up /down / left look / right look  இப்படி எதுவும் இல்லை. ஒருத்தரோட ரெஃபரன்ஸ்லதான் இன்னொருத்தருடைய பார்வை இருக்கும். கேமராவையும் தலைகீழாகக் கட்டி ஷூட் பண்ண வேண்டியிருக்கும். மேக்கிங் ஒவ்வொரு நாளும் புது அனுபவம். படம் பார்க்கும் போது அதை நீங்களும் ஃபீல் பண்ணுவீங்க.

‘டிக் டிக் டிக்’ ஜெயம் ரவி சாருக்கு மட்டுமில்ல, எங்க எல்லாருக்குமே இந்தப் படம் ரொம்ப ஸ்பெஷல். ஆசியாவிலேயே முதல் ஸ்பேஸ் தொடர்பான படம்னு பெருமையா சொல்லிக்கலாம். ஜெயம் ரவி நடிச்ச படங்களிலேயே அவர் ரோப்பில் அதிக நாட்கள் தொங்கினது கூட இந்தப் படத்துக்காகத்தான்னு அவரே சொன்னார். இதில் அவர் ஸ்பேஸ் காஸ்ட்யூம்ல இருக்கறதால ரோப்னால ஹெவி பெயின் இருக்காது.

ஆனா, ‘வனமகன்’ல அவர் வெறும் உடம்போடு காடுகள்ல அந்த வெயில்ல கயித்துல தொங்கியிருந்ததை நினைச்சா ஆச்சரியா இருக்கும். ‘டிக் டிக் டிக்’ விண்வெளி சப்ஜெக்ட். இது ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம். ஒரு மாஸ் ஹீரோவை வச்சு, சயின்ஸ் ஃபிக்‌ஷனை என்டர்டெயின்மென்ட் ஆக கொடுக்கறது சவாலான வேலை. ஆனாலும் ரொம்ப பிடிச்சு பண்ணியிருக்கோம். குழந்தைகள், ஃபேமிலி எல்லோருக்கும் பிடிக்கற மாதிரியான ஒரு படமா கொண்டு வரணும்னு நானும் ரவி சாரும் விரும்பினோம்.”

“கமல் படத்து டைட்டில் ஆச்சே?”

“கமல் சாரோட ‘டிக் டிக் டிக்’ல அவர் ஒரு போட்டோ ஜெர்னலிஸ்ட். அதனால  ஸ்டில் கேமராவோட க்ளிக் சத்தத்தை ‘டிக் டிக் டிக்’னு டைட்டில் வச்சிருந்தாங்க. இந்த ‘டிக் டிக் டிக்’ வேற. கடிகாரத்தில் இருந்து வரும் டிக் டிக் டிக் சத்தம். சீட்டு நுனியில உட்கார்ந்துட்டு கவனிக்கும் அளவுக்கு ஒரு த்ரில்லிங்கான ரேஸ் டைம் மொமன்ட் இருக்கும் இல்லையா? அப்படி ஒரு பரபர நொடிகள் புது அனுபவமா இருக்கும்.
ஜெயம் ரவி சாருக்கு ரொம்ப பொருத்தமான கதை.

 ‘மிருதன்’ டைம்லேயே இதோட ஒன்லைனை அவர்கிட்ட சொல்லிட்டேன். ரோப் ஹார்னஸ் போட்ட பிறகுதான் ரோப் போட்டுக்க முடியும். காலையில அவரை கயித்துல தொங்கவிட்டோம்னா.... ஒரு ஸ்டூல் போட்டு கூட அவரால உட்கார முடியாது. அப்படி ஒரு அசுர உழைப்பு தேவை. அவர் ரோப்ல இருந்து கீழே இறக்கினால் மறுபடியும் அந்த பொசிஷன் செட் ஆக ரெண்டு மணி நேரம் ஆகிடும்.

அதனாலதான் அவரை ரோப்ல இருந்து இறக்காமல் அந்தரத்திலேயே ரிலாக்ஸ் பண்ண வச்சிருக்கோம். படத்துல விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குதான் தெரிஞ்ச முகங்கள் இருக்காங்க. நிவேதா பெத்துராஜ்,  ‘சூதுகவ்வும்’ ரமேஷ், அர்ஜுன் தவிர புது ஆட்கள் கொஞ்சபேர் இருக்காங்க.”
“ஹீரோயின்?”

“நிவேதா பெத்துராஜ். அவங்க இந்தப் படத்துல கமிட் ஆகுறதுக்கு முன்னாடி தமிழ்ல ஒரு படம்தான் பண்ணியிருந்தாங்க. இந்தக் கதையில ஹீரோயினுக்கும் ரோப் சீகுவென்ஸ் இருக்கறதால துணிச்சலான பொண்ணா தேடினோம். நிவேதா தாய்லாந்துல மார்ஷியல் ஆர்ட்ஸ் முடிச்சிருக்காங்கனு தெரிஞ்சதும், பிசிக்கலா அவங்க இந்தக் கேரக்டருக்கு ஃபிட் ஆவாங்கன்னு தோணுச்சு. உடனே கமிட் பண்ணினோம். அவங்களும் ரோப்ல நிறைய கஷ்டப்பட்டிருக்காங்க. அவங்க சொந்த ஊர் மதுரைங்கறதால தமிழ் நல்லா பேசுறாங்க. உச்சரிப்பும் பர்ஃபெக்ட். டயலாக்ஸை முதல்நாளே மனப்பாடம் பண்ணிட்டு வந்து பிச்சு உதறினாங்க.”

“இந்தியாவில் இதுக்கு முன்னாடி ஸ்பேஸ் படம் வந்ததில்லையா?”

“இந்தியாவில் மட்டுமில்லை, ஆசியாவிலேயே வந்ததில்லை. இதோட விஷுவல் உங்களுக்கு நிச்சயம் பிரமிப்பா இருக்கும். இந்த ஜெனரேஷன் வீடியோ கேம் குழந்தைகளுக்கு இது ஒரு பர்ஃபெக்ட் ஃபிலிம். அவங்க பெரிய அளவில் ‘டிக் டிக் டிக்’கை கொண்டாடுவாங்க. வழக்கமா கிராஃபிக்ஸ் அதிகம் தேவைப்படக்கூடிய படங்களுக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு சூப்பர்வைசர் மேற்பார்வையில் ஒர்க் நடக்கும். ஆனா, இதோட தொழில்நுட்பம், கிராஃபிக்ஸ் முழுக்க முழுக்க நம்ம ஆட்களே. தத்ரூபமா கிராஃபிக்ஸை பண்ணியிருக்காங்க. ‘மிருதன்’ல உள்ள டெக்னீஷியன்கள் அப்படியே இதிலும் ஒர்க் பண்ணியிருக்காங்க. ஜபக் சார் தயாரிச்சிருக்கார்.”

“டெக்னீஷியன்ஸ்?”

“இதுல ஆர்ட் டைரக்டர் எஸ்.எஸ்.மூர்த்தியோட ஒர்க் பெரியளவில் பேசப்படும். ஸ்பேஸ் தொடர்பா நாலு பிரமாண்ட செட்கள் அமைச்சிருக்கோம். ஒரிஜினல் ஸ்பேஸ் ஷட்டிலோட கலர்ஸ்ல இருந்து ஒவ்வொண்ணையும் நுணுக்கமா அப்படியே கொண்டு வந்திருக்கார் அவர். இமானோட மியூசிக் நல்லா வந்திருக்கு. மூணு பாடல்கள்.

எல்லாமே மான்டேஜ் ஸாங்ஸ்தான். இதில் அப்பாவைப் பத்தி வரும் பாட்டு செம ஹிட் ஆகும். ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ்னாலதான் ஐம்பது நாளில் இவ்வளவு ஸ்பீடா படத்தை முடிக்க முடிஞ்சிருக்கு. எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம், ஜெயம் ரவியோட பையன் ஆரவ் நடிச்சிருக்கார்.”

“ஜூனியர் ரவி ஆரவ் நடிச்சிருக்காரா?”

“டபுள் சூப்பர்பா பண்ணியிருக்காரு. நான் குழந்தை நட்சத்திரங்களோடு நிறைய ஒர்க் பண்ணியிருக்கேன். அவங்களோட ஒர்க் பண்றது சில நேரங்கள்ல கடுப்பா இருக்கும். இனிமே குழந்தைகள் கேரக்டர் சிந்திக்கவே கூடாதுன்னு இருந்தேன். ஆனா, இந்த எண்ணத்தை ரவி சாரோட பையன் ஆரவ் மாத்திட்டார். ஸ்பாட்டுல ஒரு தடவை சொன்னாலே புரிஞ்சுட்டு ரெடியாகிடுறார்.

அவருக்கு ஆறு வயசுதான் இருக்கும். படத்துலேயும் ரவி சாரோட பையனா நடிச்சிருக்கார்.  முதல் நாள் ஷூட்டிங் வந்ததில் இருந்தே ஆரவ் பயங்கர புரொஃபஷனல். ஷாட் இல்லைனாலும் ஸ்பாட்ல இருந்து கவனிக்கறார். டபுள் கால்ஷீட் ஷூட் அப்போ, தூங்காமல் கூட நடிச்சுக் குடுத்தார். நைட் ஷூட் முடிச்சுட்டு மறுநாள் ஸ்கூலுக்கு போயிட்டார்.

ஆரவ், ‘டிக் டிக் டிக்’ல நடிக்கறார்னதும் நிறைய  ஆஃபர்ஸ் அவரைத் தேடி வந்தது. ரவி சார்கிட்ட சொன்னதும் சிரிச்சுட்டார். ‘இந்தப் படத்தோட அவனோட ஆக்ட்டிங் போதும். இனி காலேஜ் முடிச்சதும் அவன் என்ன விரும்புறானோ அதை பண்ணட்டும்’னு சொல்லிட்டார்.”

- மை.பாரதிராஜா