ராஜகுமாரன் முதல் ராஜமவுலி வரை!



ஓர் இயக்குநரின் திரைப்பயணம்

சமீபத்தில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வந்த ஏஞ்சல்’ என்கிற தெலுங்கு டப்பிங் படம், தொழில்நுட்ப ரீதியாக ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. பொங்கல் ரிலீஸ் பெரிய படங்களின் ஆதிக்கத்தையும் தாண்டி, பல ஊர்களிலும் இரண்டாம் வாரத்தை எட்டிய இந்தப் படத்தை இயக்கிய பழனி, தமிழர்.

‘பாகுபலி’ படத்தில் ராஜமவுலியின் உதவி இயக்குநராக இருந்ததால் தன்னுடைய பெயரையே சினிமாவுக்காக ‘பாகுபலி’ பழனி என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஹைதராபாத்திலிருந்து படத்தின் பிரமோஷன் வேலைகளுக்காக சென்னைக்கு வந்திருந்தவரை ஏர்போர்ட்டிலேயே மடக்கினோம்.

“உங்க ரிஷிமூலம், நதிமூலம் பற்றி செப்புங்களேன்?”

“சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்தூர். அப்பா கருமலை, அம்மா பழனி அம்மாள், அண்ணன் வெங்கடாஜலம், அண்ணி நித்யா. படிக்கும் போது எனக்கு முத்துராமன் மகன் கார்த்திக்தான் இன்ஸ்பிரேஷன். அந்த சமயத்தில் என் மனதில், ஒரு நடிகரின் மகன்தான் சினிமாவுக்கு வர முடியுமா, நம்மைப் போன்ற சாமன்ய மக்கள் வர முடியாதா என்ற கேள்வி  எழுந்தது.

அந்தக் கேள்வி அடிக்கடி மனதுக்குள் ஒலிக்கவே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவு அதிகமானது. வழக்கமாக சென்னைக்கு சினிமா வாய்ப்புத் தேடி வருபவர்கள் போல் வெறும் எழுபத்தைந்து ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு மஞ்சப்பையுடன் வந்தேன்.

ஆனால் சென்னையில் சினிமா வாய்ப்பு எளிதாகக் கிடைக்காது என்பதை வந்த சில நாளில் புரிந்து கொண்டேன். அயூப்கான் என்ற நண்பர் மூலம் ஒரு லிங்க் கிடைத்தது. இயக்குநர் ராஜகுமாரன் சாரிடம் உதவியாளராக வேலை பார்த்தேன். ஒரு கட்டத்தில் டோலிவுட்டில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கவே ஜாகையை ஹைதராபாத்துக்கு மாற்றிக்கொண்டேன்.

உஷா கிரண் மூவிஸ் படங்களில் வேலை கிடைத்தது. நாகார்ஜுனா, ரவிதேஜா போன்ற பிரபல ஹீரோக்களின் ஏராளமான படங்களில் வேலை செய்தேன்.  அப்போது ராஜமவுலி சாரிடமிருந்து அழைப்பு வந்தது.

‘பாகுபலி’யில் முதன்மை உதவியாளராக வேலை செய்யும் வாய்ப்பு கொடுத்தார். பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ் என்று ஆல் ஆர்ட்டிஸ்டுக்கு தமிழ், தெலுங்கில் நான் டயலாக் சொல்லிக் கொடுத்தேன். ‘பாகுபலி’ என்ற ஒரே படம் என் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய அர்த்தத்தைக் கொடுத்தது. நல்ல குரு கிடைக்க கடந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். எனக்கு ராஜமவுலி சார் குருவாகக் கிடைத்தார்.”

“முதல் வாய்ப்பு?”

“தயாரிப்பாளர் கிருஷ்ணா ரெட்டி பேனரில் படம் பண்ணுவது குதிரைக் கொம்பு என்று ஹைதராபாத்தில் சொல்வார்கள். ஏன்னா, கதை, இயக்குநரின் திறமையை துல்லியமாக எடை போடக்கூடியவர். நான் சொன்ன ஃபேன்டஸி கதை அவருக்குப் பிடித்திருந்தது. கண்டிப்பாக நாம் சேர்ந்து படம் பண்ணுவோம் என்றார். அதே மாதிரி கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தார்.”

“தமிழரான நீங்கள் முதல் படத்தை தமிழில்தானே பண்ணியிருக்கணும்?”
“எப்போதும் நான் மொழியை பிரித்துப் பார்க்கமாட்டேன். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சரிசமமாக வேலை பார்த்ததால் இரண்டு மொழிகளையும் தாய்மொழியாக நினைக்கிறேன். தமிழில் எனக்கு எப்படி வரவேற்பு இருந்ததோ அதேபோல் தெலுங்கிலும் வரவேற்பு இருந்தது. என் முதல் படத்தை தெலுங்கில் இயக்கியபோது அந்நியமாகத் தெரியலை.”

“அடுத்து?”

“தமிழில் கார்த்தி. தெலுங்கில் பிரபாஸ். இரு மொழிகளுக்குப் பொருந்துகிற மாதிரி கதை ரெடியா இருக்கு. இதில் பிரபாஸை பர்சனலா தெரியும். என் குடும்பத்துக்கு அடுத்து அவர் என் முன்னேற்றத்தை விரும்புகிறவர்.

 ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தில் நான் வேலை செய்யாததால் என் மீது அவருக்கு இப்போதும் செல்லக் கோபம் இருக்கிறது. ஆனாலும் எனக்கு வாய்ப்பு கிடைத்ததை கேள்விப்பட்டதும் வாழ்த்தி அனுப்பினார். சத்யராஜ் சாரும் அவரே போன் பண்ணி வாழ்த்தினார்.” 

“உங்கள் குரு ராஜமவுலி என்ன சொன்னார்?”

“சாருக்கு படம் ரொம்பவே பிடித்திருந்தது. கிராபிக்ஸ் காட்சிகளை சிலாகித்துப் பேசினார்.” “தமிழில் வேலை செய்வதற்கும், தெலுங்கில் பணியாற்றுவதற்கும்  என்ன வித்தியாசம்?”

“பெரிதாக வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழில் யதார்த்தமான கதைகள் வருகிறது. தெலுங்கில் கமர்ஷியல் கதைகளை மட்டுமே கையில் எடுப்பார்கள். அங்கு யதார்த்தம் செட்டாகாது.

டெக்னீஷியனைப் பொறுத்தவரை இங்கிருப்பவர்கள்தான் அங்கு வேலை செய்கிறார்கள். அடுத்து, செலவுக்கு அஞ்சமாட்டார்கள். ரசிகர்கள் எண்ணிக்கை இங்கு குறைவு. தெலுங்கில் தியேட்டருக்கு போய் படம் பார்க்கும் வழக்கம் இருக்கு. சுருக்கமாக சொல்வதாக இருந்தால் தமிழில் சரஸ்வதி இருக்கு. தெலுங்கில் லக்ஷ்மி இருக்கு.”

“எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் கற்றது?”

“பர்ஃபக்‌ஷன் அதிகமாக எதிர்பார்ப்பார். தொழிலுக்கு நியாயமாக இருப்பார். கதைக்கு தொய்வு ஏற்படாமல் திரைக்கதை பண்ணுவார். டயலாக் ஷார்ப்பாக இருக்கும். எல்லாருக்கும் தெரிந்த மாதிரி கிராபிக்ஸில் கில்லாடி. அவரிடம் வேலை செய்த காரணத்தால்தான் ‘விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல்’ படத்தில் சொர்க்கலோகத்தை கிராபிக்ஸில் அழகாகக் கொண்டு வரமுடிந்தது. கடினமான உழைப்பாளி. செட்ல கடைசி ஆளாக கிளம்பி முதல் ஆளாக வருவார். எளிமையாக இருப்பார்.”

“டைரக்‌ஷனில் யாருடைய ஸ்டைல் பிடிக்கும்?”

“மணிவண்ணன் சாருடைய ஸ்டைல் பிடிக்கும். அவர் எல்லா வகை கதைகளையும் எடுப்பார். அதேபோல்தான் என் முதல் படத்தில் காதல், விவசாயம், ஃபேன்டஸி என எல்லா விஷயங்களையும் சொல்லியிருப்பேன்.”“உங்கள் மனைவி நீங்கள் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக விரதம் இருந்தாங்களாமே?”

“எல்லா அப்பாக்களையும் போல் என் அப்பாவும் நான் படித்து முடித்து வேலைக்குப் போகவேண்டும் என்று ஆசைப்பட்டார். சினிமாவுக்கு போறேன் என்று சொன்னபோது ‘பாட்ஷா’ வில் ரஜினியை கட்டிப் போட்டு அடித்த மாதிரி என்னை தென்னை மரத்தில் கட்டி வைத்து அடித்தார். அண்ணாவும் அம்மாவும்தான் என் மீது நம்பிக்கை வைத்து அப்பாவிடம் சிபாரிசு பண்ணினார்கள்.

உதவி இயக்குநராக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டேன். உதவி இயக்குநரான என்னால் ஹைதராபாத்தில் குடும்பம் நடத்துமளவுக்கு பொருளாதாரம் இல்லாததால் மனைவியை  சொந்த ஊரில் விட்டுவிட்டு நான் மட்டும் இயக்குநராவதற்கு தீவிர முயற்சி எடுத்தேன்.

என் மனைவி ராஜேஸ்வரியும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், நீங்கள் இயக்குநரான பிறகுதான் ஹைதராபாத்துக்கு வருவேன் என்று என்னை உற்சாகத்துடன் அனுப்பி வைத்தார். இதற்கிடையே அவரும் இரண்டு டிகிரி வாங்கிவிட்டார். காலம் கனிந்து இப்போது நானும் என் மனைவியும் ஹைதராபாத்தில் குடியேறி இருக்கிறோம்.”

- சுரேஷ்ராஜா