ரஜினி - கமல்...யாருக்கு ஓட்டு?பார்வதி நாயர் படபடப்பு!



எல்லோரும் கமர்ஷியல் ஹீரோயினாக வெளிப்பட முயற்சித்துக் கொண்டிருக்கையில், வில்லி, கேரக்டர் ரோல், சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்கள் என்று வில்லங்கமான ரூட்டில் பார்வதி நாயரின் கிராஃப் வேற லெவலுக்கு போய்க் கொண்டிருக்கிறது. ‘நிமிர்’ படத்தில் அவருடைய வித்தியாசமான பாத்திரத்துக்காக வாழ்த்து மழையில் நனைந்துகொண்டிருந்தவருக்கு ‘ஹாய்’ சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தோம்.

“ஏன் இந்த வித்தியாச வெறி?”

“எதுவுமே நான் பிளான் பண்ணலை. அதுவா அமையுது. நல்ல கதை, நல்ல கேரக்டர்னா கண்ணை மூடிக்கிட்டு ஓக்கே சொல்லிடுவேன். ஆனால், இன்னமும் எனக்கான கேரக்டர்கள் அமையலைன்னுதான் நினைக்கிறேன். நான் மாடர்ன் பொண்ணு. ஆனால் இப்போ வரைக்கும் மாடர்ன் அல்லது கொஞ்சம் பக்கத்து வீட்டு சிட்டி பொண்ணு ரோல் கிடைக்கலை. அதுக்காகத்தான் காத்திருக்கேன்.”

“என்ன மாற்றம் சினிமாத் துறையில் வரணும்னு நினைக்கிறீங்க?”

“சினிமா ஆரோக்கியமான பாதையை நோக்கித்தான் போகுது. ஆனால் ஒரு நடிகரோ நடிகையோ ஒரு கேரக்டர் நடிச்சு ஹிட் ஆகிட்டா அதே மாதிரியான கேரக்டர்களே தொடர்ந்து வருது . நடிகர்கள் வித்தியாசமான ரோலுக்கு தான் ஆசைப்படுவாங்க. ஹீரோவுக்கு ஃப்ரெண்ட்னா கடைசி வரைக்கும் ஹீரோ ஃப்ரெண்ட் தானா. இதுல மாற்றம் வரணும். எனக்கு வித்தியாசமான கேரக்டர்கள், முக்கியமா சிட்டி பொண்ணா, மாடர்னா ஒரு படம் பண்ணணும்.”

“நெக்ஸ்ட்?”

“மோகன்லால் சார் கூட நடிச்சிட்டு இருக்கேன். த்ரில்லர் படம். ஷூட்டிங் இப்போதான் ஆரம்பிச்சிருக்கு. ஆக்சுவலா, இனிமே தான் மோகன்லால் சாரை சந்திக்கப் போறேன். இதுக்கு முன்னாடி ஒரு நிகழ்ச்சியில சந்திச்சிருக்கேன். ஆனால் பெரிசா பேச வாய்ப்புக் கிடைக்கலை. அந்தப் படத்துக்காக வெயிட்டிங்.”

“பிரபல தெலுங்கு இயக்குநர் அதிவி இயக்கத்துல ஒரு படம் நடிக்கிறீங்களே?”

“இவ்வளவு நாளா கிராமத்துப் பொண்ணு, அல்லது நெகட்டிவ் ரோல்தான் செய்திருக்கேன். ஆனால் அதிவி இயக்கத்துல அந்தப் படம் என்னுடைய ட்ரீம் படம். மெடிக்கல் படிக்கிற பொண்ணா நடிக்கிறேன். நான் இவ்வளவு நாள் எதிர்பார்த்த ட்ரீம் ரோல் அந்தப் படத்துல எனக்கு கிடைச்சிருக்கு. ரொமாண்டிக் படம்தான்.”

“தென்னிந்தியாவுல ஹீரோயின் சார்ந்த படங்கள் ரொம்பக் குறைவா இருக்கே? என்ன பிரச்னைனு நினைக்கிறீங்க?”

“இங்கே மார்க்கெட் ஹீரோ சார்ந்துதான் இருக்கு. அதுதான் காரணம். கதையும் சரி, வசூலும் சரி பெரும்பாலும் ஹீரோக்களுக்குத்தான். அதே மாதிரி பாலிவுட்டில் பெண் இயக்குநர்கள் அதிகம். அதனாலதான் ஒரு பெண்ணுக்கான கதையும். கதைக்களமும் அங்க அதிகமா உருவாகுது. ஆடியன்ஸ் ரொம்ப தெளிவா இருக்காங்க.

கதை நல்லா இருந்தா ஹீரோ, ஹீரோயினெல்லாம் அவங்களுக்குத் தேவையே இல்லை. நிறைய பெண் இயக்குநர்கள் வரணும். பெண் சார்ந்த இயல்பான விஷயங்களைப் பேசணும். ஆனால் இங்கே  மக்கள் ஏத்துக்க மாட்டாங்களோ, நல்லாருக்காதோனு இப்படியெல்லாம் யோசிக்கிறாங்க. அது மாறணும். சமீபமா ‘அறம்’, ‘அருவி’ மாதிரி படங்களாலே தமிழில் மாற ஆரம்பிச்சிருக்குன்னு நெனைக்கிறேன்.”

“நடிகர்கள் நாடாள வரலாமா?”

“நல்ல விஷயம்தானே? ஏற்கனவே சினிமா மூலமா அவங்களுக்கும் மக்களுக்கும் இடையில நிச்சயமா ஒரு பாண்டிங் இருக்கும். அவங்களுக்கு மக்களோட பல்ஸ் தெரியும். மக்களுக்கு என்ன வேணும் என்கிறதுலயும் அவங்களுக்கு ஓரளவு  ஐடியா இருக்கும். வரவேற்கலாம்.”
“நீங்க அரசியலுக்கு வருவீங்களா?”

“ஆஹாங்... அதெல்லாம் இல்லை. நல்ல கேரக்டர்கள் நடிச்சு சினிமாவுல நல்ல நடிகைன்னு பெயர் வாங்கணும். அவ்வளவுதான். ஹேய், என்ன சர்ச்சையாக்கப் பார்க்குறீங்களா... அதெல்லாம் நடக்காது.”

“ரஜினி, கமல் யாருக்கு பார்வதி ஓட்டு?”

“ஏதோ பெரிய பிளான் போட்டு வந்திருக்கீங்க போல.நான் சிக்கமாட்டேன். எனக்கு ரெண்டு பேரையும் நடிகர்களா ரொம்பப் பிடிக்கும். மாஸ் ஹீரோக்கள். அரசியல்ல இப்போதானே வந்திருக்காங்க. யார் நல்ல கொள்கைகள், யார் மக்களுக்காக அதிகமான நல்ல திட்டங்களை யோசிக்கிறாங்களோ அவங்க யாரா இருந்தாலும் என்னுடைய சப்போர்ட் கொடுப்பேன்.”

“பார்வதிக்கு எந்த மாதிரியான பசங்களைப் பிடிக்கும்?”

“முக்கியமா  நல்ல கேரக்டர் இருக்கணும், தனித்தன்மையா தெரியணும், கொஞ்சமாவது உதவுகிற  மனப்பான்மை இருக்கணும். அப்படியான ஒரு பையனைத்தான் நான் தேர்வு செய்வேன்.  உடனே கல்யாணம் எப்போன்னு கேட்டுடாதீங்க. முதல்ல நடிப்பு. அதை சரியா செய்யணும்!”கண்சிமிட்டிய கண்மணிக்கு வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்!

- ஷாலினி நியூட்டன்