யூத் நட்ராஜ்டைட்டில்ஸ் டாக் 53

‘இளமையில் கல்’ என்கிற ஔவைப் பாட்டியின் மொழிக்கு ஏற்ப நான் யூத்தாக இருந்தபோது கற்றதும் பெற்றதும் அதிகம். எனக்கு பூர்வீகம் பரமக்குடி. அம்மாவுக்கு காரைக்குடி. முதன் முதலாக குவா குவாவென்று என்னுடைய குரல் கேட்டது காரைக்குடியில்தான். இரண்டாம் வகுப்புக்குப் பிறகு நாங்கள் சென்னைக்கு வந்துவிட்டோம்.

சென்னைக்கு வந்தாலும் வருடத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ கோயில் திருவிழா மற்றும் சுபகாரியங்களில் கலந்துகொள்வதற்காக பரமக்குடிக்குப் போவோம். பொங்கல் சமயத்தில் தாத்தா, பாட்டியைப் பார்ப்பதற்காக கிராமத்துக்கு போகும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

அப்போது எங்கள் ஊர் பச்சைப் பசேல் என்று இருக்கும். ஊர்ல உள்ளவங்களை மாமா, அத்தை என்று உறவுமுறை சொல்லித்தான் அழைப்போம். பக்கத்துல பேக்கரி வைத்திருக்கும் ராவுத்தரை மாமா என்றுதான் அழைப்போம். அதேபோல் அவர்கள் நம்மை அழைக்கும் போது என்ன மாப்ளே என்றுதான் அழைப்பாங்க. இதில் ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இருக்காது.

சின்ன வயதில் வருடத்துக்கு ஒரு முறை என் அப்பா சினிமாவுக்கு அழைத்துச் செல்வார். அப்போது தியேட்டருக்கு போய் படம் பார்ப்பது அபூர்வமான விஷயம். சனிக்கிழமை சாயங்காலம் மூணு மணிக்கு சினிமாவுக்குப் போகலாம் என்று சொல்லிவிடுவார்.

மூணு மணி ஷோவுக்காக காலை ஒன்பது மணிக்கே பவுடர் பூசிக்கொண்டு ரெடியாகி எப்படா மூணு மணி ஆகப் போகுது என்ற கண்கள் கடிகாரத்தையே பார்த்து கொண்டிருக்கும். அப்போதெல்லாம் சினிமா பார்க்கப் போகிறோம் என்றாலே கொண்டாட்டம் தொற்றிக் கொள்ளும். இந்த நிகழ்வுகள்தான் நான் சினிமாவுக்கு வருவதற்கு விதையாக இருந்தது.

யூத் பீரிட்யல எல்லா பசங்களும் விளையாடுகிற மாதிரி கிரிக்கெட் விளையாடுவோம். சென்னை 28ல்தான் நாங்கள் வசித்தோம். லீவு நாளில் காலையில் கிரவுண்டுக்கு போனால் மாலையில்தான் வீட்டுக்கு திரும்புவோம்.இப்போது இருக்கும் யங் ஜெனரேஷன் வீட்டுக்குள்ளேயே முடங்கியவர்களாக கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்டு போனில் விளையாடுவது கவலையளிக்கிறது.

யூத் டைமில் காசுக்கும் பெரிய வேலையும் தேவையும் இருக்காது. பழைய சைக்கிள் டயர் இருந்தால் போதும். அதை வைத்து வண்டி ஓட்டுவோம். கில்லி, பம்பரம், வாலிபால், கபடி, கண்ணாமூச்சி ஆடுவோம். சிம்பிள் வாழ்க்கை. ஆனால் ரொம்ப சந்தோஷம்.

எங்க ஏரியாவுல ஒரு பாழடைந்த பங்களா இருக்கும். பகலில் அங்கு தான் ஓடிப் பிடித்து விளையாடுவோம். ஆனால் இரவில் அந்த பங்களாவுக்குள் யாரும் போகமாட்டார்கள். காரணம், அந்த பங்களாவில் பேய் இருப்பதாக சொல்வார்கள். இளம் கன்று பயமறியாது என்று சொல்வார்கள். ஆனால் அந்த விஷயத்தில் நாங்கள் எல்லை மீற வேண்டும் என்று பிளான் போடுவோம். இன்னிக்கு நாளைக்கு என்று பிளான் மாறுமே தவிர ஒரு நாள் கூட பங்களாவுக்குள் போனதில்லை. அவ்வளவு பயம்.

படிக்கும்போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. ஒரு தீபாவளி முடிந்ததும் மறுநாள் பள்ளிக்கூடத்துக்கு செல்லும்போது லக்ஷ்மி வெடியை டேபிளில் வைத்து மாணவர்களை பயமுறுத்த பிளான் போட்டேன். ஊதுவத்தி எரிந்து முடியும் இடத்தில் வெடியை வைத்துவிட்டேன். ஊதுவத்தி கரைந்து முடியும் போது வெடிச் சத்தம் கேட்கும்.

ஆனால் திட்டம் நிறைவேறும் சமயத்தில் வாத்தியார் கிளாஸ் ரூமுக்கு வந்துவிட்டார். மாணவர்களுக்கு பதில் ஆசிரியர் பயந்துவிட்டார். வெடிச் சத்தத்தில் சித்தம் கலங்கிப்போன ஆசிரியர் எப்படியோ என்னைக் கண்டுபிடித்து, ‘‘நீ தான் பண்ணி இருப்ப’’ என்று வெளுத்து வாங்கினார். விஷயம் கேள்விப்பட்ட அப்பாவும் தன் பங்கிற்கு பின்னியெடுத்தார்.

நான் உயரம் என்பதால் ஸ்கூலில் நான்தான் கடைசி பெஞ்ச் கார்த்தி. ஆனால் எனக்குப் பிடிச்ச பாடமான வரலாறு, புவியியல் கிளாஸ் நடக்கும்போது முன் இருக்கைக்கு வந்துவிடுவேன். கணக்கு வரும் போது தன்னிச்சையாக கடைசி பெஞ்சுக்கு வந்துவிடுவேன். பெஞ்ச் மாறினாலும் படிப்பு மீது கவனம் சிதறவில்லை.

ஒரு கட்டத்தில் மந்தைவெளியிலிருந்து பெசன்ட் நகருக்கு மாறினோம். அங்கிருந்த அரசு பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தேன். எனக்கு ஆங்கிலம் தெரிகிறது என்றால் அதற்குக் காரணம் என்னுடைய இங்கிலீஷ் டீச்சர் சீனிவாசன் சார்.

மறக்க முடியாத டீச்சர். ஏன்னா, சில சமயம் கிளாஸ் ரூமில் எங்கள் முகத்தில் இருக்கும் பரவசத்தைப் பார்த்துவிட்டு ‘‘என்னடா ரஜினி படம் பார்த்தீங்களா’’ என்று கேட்பார். ‘‘படம் சூப்பரா இருக்காமே’’ என்று பேச்சை ஆரம்பித்ததும் பசங்க மீதி சீன்ஸை புட்டுப் புட்டு வைப்பாங்க.

உடனே அவர் ‘‘நீங்கள் சொன்ன விஷயங்களை அப்படியே இங்கிலீஷில் எழுதிக் கொடுங்க. நான் கரெக்ட் பண்றேன்’’ என்று சொல்லி எங்கள் இங்கிலீஷ் நாலெஜ்ஜை வளர்த்துவிட்டார். அரசு பள்ளியில் படித்தாலும் ஆங்கிலம் எங்களால் பேச முடிந்தது என்றால்  சீனிவாசன் சார்தான் காரணம்.

அதேபோல் எங்களுக்கு மேல் படிப்புக்கு ஆலோசனை கொடுத்த பாலசுப்ரமணியம் சாரும் மறக்க முடியாதவர். இப்போதும் என்னுடன் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படித்த நண்பர்கள் தொடர்புல இருக்கிறார்கள். எங்கள் நட்பு அன்று போல் தொடர்கிறது.

வாழ்க்கையில் எவைகளைக் கற்பதாக இருந்தாலும் இளமையில்தான் கற்றுக்கொள்ள முடியும். முதுமையில் வாழ்க்கையை எப்படி வாழப் போகிறோம் என்ற போராட்டம் வந்துவிடும்.

ஒவ்வொரு மனிதனும் சந்தோஷமாக இருக்கும் பருவம் பதின்மூன்று வயதிலிருந்து இருபத்தைந்து வயது வரைக்குள்தான். அதன்பிறகு குடும்ப சுமைகள் வந்துவிடும். அதில் சில சுகமான சுமைகளும் உண்டு. சோகமான சுமைகளும் உண்டு. கடவுள் கருணையால் என் வாழ்க்கையில் எல்லாமே சுகமான சுமைகள்.

இளமைப் பருவம் இனிமையான பருவம். அந்த வகையில் என் வாழ்க்கையில் எல்லாமே இனிமையான விஷயங்கள்தான் நடந்துள்ளது. என்னுடன் படித்த நண்பர்கள் பல்வேறு துறையில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். ஆனால் அவசரம் ஆபத்து என்று அழைத்தால் என் இளமைக் கால நண்பர்கள் முதல் ஆளாக வந்து நிற்கிறார்கள். என் வாழ்க்கையில் நான் பணம் சம்பாதித்து இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால் நல்ல மனங்களைச் சம்பாதித்துள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை வயது என்பது ஜஸ்ட் நம்பர் மட்டுமே. ஆனால் மனது இளமையாக இருந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கையில் துணிவு முக்கியம். அந்தத் துணிவை இளமைதான் தரும். யூத் ஆல்வேஸ் யூத்.

 தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)