ஒரே மந்தையில் இருந்து பிரிந்த இரண்டு ஆடுகள்!



பிலிமாயணம் 30

“ஒரு நடிகரின் வெற்றிக்கொடிக்கு அடியில் ஆயிரம் நடிகர்களின் தோல்விகள் புதைக்கப்பட்டுள்ளது” என்பார்கள்.சூப்பர்ஸ்டார் ரஜினி ஒரு முறை சொன்னார். “என்னை விட ஸ்டைலான, அழகான, திறமையான எத்தனையோ ரஜினிகாந்துகள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறார்கள்.

நான் பாலச்சந்தரின் கண்பட்டதால் விமோசனம் பெற்றேன். அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.”திறமையைத் தாண்டியும் ஏதோ ஒன்று சினிமாவுக்கு தேவைப்படுகிறது. ஓர் இமாலய வெற்றிக்கும், ஒரு தோல்விக்கும் மிகச் சரியான உதாரணங்கள் ரஜினிகாந்தும், நளினிகாந்தும்.

தரமணி திரைப்படக் கல்லூரி தொடங்கப்படுவதற்கு முன்பு அண்ணா சாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் திரைப்பட பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. தென்னிந்திய மொழி கலைஞர்களுக்கு அவரவர் மொழியில் நடிப்பு கற்றுத் தரப்பட்டது. அந்த நேரத்தில் கன்னட மொழியில் பயிற்சி ெபற வந்தவர் சிவாஜிராவ்.

தமிழ் மொழியில் பயிற்சி பெற வந்தவர் ஜெயராம்ராஜு. சிவாஜிராவ் கன்னட சினிமாவில் புகழ் பெறுவார் என்றும், ஜெயராம் தமிழ் சினிமாவில் கலக்குவார் என்றும் இருவரும் பரஸ்பரம் நினைத்திருந்தார்கள். இருவருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவர்கள்தான்.

காலம் எல்லாவற்றையும் திருப்பிப் போட்டது. சிவாஜிராவ் மனதில் இருந்தது தமிழ் சினிமா. இங்கு எப்படியாவது ஜெயித்தே தீர வேண்டும் என்கிற வெறியில் இருந்தார். ஆனால் ெஜயராம்ராஜு நிலை வேறு. ராஜபாளையம் ராஜுக்கள் குடும்பத்திலிருந்து வந்தவர் அவர். கொஞ்சம் வசதியான குடும்பம். அதனால் அவர் சினிமாவில் நடிப்பதை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை. நடிப்பை விட்டுவிட்டு நல்ல வேலைக்குச் செல்லுமாறு வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். இதனால் இரட்டை மனநிலையில் தவித்தார் ஜெயராம் ராஜு.

படிக்கும்போதே இருவரும் வாய்ப்பு தேடி அலைந்தார்கள். பாலச்சந்தர் ஆபீசுக்கு ெசன்று அவரிடம் வாய்ப்பு கேட்டு சிவாஜிராவ் திரும்புவார். அடுத்த ஒரு மணி நேரத்தில் ஜெயராம்ராஜு செல்வார். “என்னப்பா இப்பதானே வந்துட்டு போனே” என்பார் கவிதாலயா மானேஜர். “சார், அது சிவாஜிராவ். நான் ஜெயராம்ராஜு” என்பார் இவர். இப்படி பல இடங்களில் நடக்கும்.

குடும்ப நெருக்குதல் அதிகமாகவே  படிப்பை பாதியில் விட்டுவிட்டு பெங்களூருக்கு மெடிக்கல் ரெப் வேலைக்குச் சென்று விட்டார் ஜெயராம் ராஜு. சிவாஜிராவுக்கு வாழ்க்கையே சினிமாவாக இருந்தது. ஆனால் ஜெயராம்ராஜுக்கு சினிமா வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தது. இருவருக்குமான வித்தியாசம் இந்த இடத்தில் ஆரம்பிக்கிறது.

ஜெயராம்ராஜு, பெங்களூருவில் வேலை பார்த்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தபோது. இங்கு சிவாஜிராவ் ரஜினிகாந்த்தாக மாறி இருந்தார். சென்னை நகர சுவர்களில் அவர் ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.அப்போது ரஜினி கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர்கள் அவர் சாயலில் இருக்கும் ஜெயராம்ராஜுவை தேடிப்பிடித்தார்கள். தமிழில் பிடித்தவர் கடையநல்லூர் காஜா, தெலுங்கில் பிடித்தவர் தாசரி நாராயணராவ். தாசரிதான் “தமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இருக்கட்டும், தெலுங்கிற்கு நீ நளினிகாந்த்” என்று பெயரை மாற்றினார்.

அதன் பிறகு தென்னிந்திய மொழிகளில் அறுபது படங்கள் வரை நடித்தார் நளினிகாந்த், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ‘முந்தானை முடிச்சு’, ‘ராசுக்குட்டி’ போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்தார்.தான் தவறவிட்டுவிட்டாலும் ரஜினி பிடித்திருக்கும் இடத்துக்கு எந்தக் காரணம் கொண்டும் போட்டியிடக்கூடாது என்பதுதான் நளினிகாந்த் எடுத்த முதல் முடிவு. ஆரம்பத்தில் ஒருசில படங்களில் ரஜினி போன்று நடித்தாலும் பின்னர் முற்றிலுமாக அவர் மாதிரி நடிப்பதைத் தவிர்த்து விட்டார்.

அதனால் வில்லன், குணச்சித்திர நடிகராக தன்னை தக்கவைத்துக் கொண்டார். தகுதி, திறமை, ஸ்டைல் எல்லாவற்றிலும் ரஜினிகாந்த் போன்று இருந்தாலும். அவரிடம் இருந்த உறுதி, தன்னம்பிக்கை, உழைப்பு, ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி நளினிகாந்திடம் சற்றே மிஸ் ஆனதால் பெரியதாக மிளிரமுடியவில்லை. தனக்கென ஒரு சிறிய இடத்தைப் பெற்றுக் கொண்டு திருப்தி அடைந்துவிட்டார். தன்னம்பிக்கையும் உழைப்பின் மீது ஈடுபாடும் இருந்ததால் ரஜினி, யாரும் தொட முடியாத உயரத்துக்குச் சென்றார்.

(பிலிம் ஓட்டுவோம்)

பைம்பொழில்