பட்டையைக் கிளப்புகிறார்கள் பஞ்சாபிகள்!



தமிழ்ப் படங்களுக்கான ஓவர்சீஸ் கலெக்‌ஷன் ஈழத்தமிழர்களை நம்பியிருக்கிறது. போலவே இந்திப் படங்களுக்கு பஞ்சாபிகள். நாம் என்னதான் சர்தார்ஜி ஜோக்குகள் சொல்லி அவர்களை நக்கலடித்துக் கொண்டிருந்தாலும் உலகம் முழுக்க பரவலாக காலூன்றியிருக்கிறார்கள் சிங்குகள். குறிப்பாக ஐரோப்பாவில் இந்தியர்கள் என்றாலே பஞ்சாபிகள்தான் எனும் வகையில் வணிகத்தில் கோலோச்சுகிறார்கள்.

இதைப் புரிந்துகொண்ட இந்தித் தயாரிப்பாளர்கள் அவர்களைக் குறிவைத்து கதைகளை உருவாக்க அயல்நாடுகளில் இந்திப்படங்கள் சக்கைப்போடு போட்டு வசூலை வாரிக் குவித்தன. பஞ்சாபியர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஏதாவது ஒரு ‘சிங்’ கேரக்டர் ஒவ்வொரு படத்திலும் உருவாக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் கதையே பஞ்சாபில் நடப்பதைப்போல ‘சன் ஆஃப் சர்தார்’ மாதிரி படங்களும் வந்து நூறுகோடி வசூலை எட்டி சாதனை புரிந்தது. சற்று தாமதமாகவே முழித்துக்கொண்ட பஞ்சாபியர்கள், எதற்கு இந்திப் படங்களுக்கு நம் ஆட்கள் காசு அழவேண்டும்? நம் மொழியிலேயே நம்மாட்களுக்கு படங்கள் எடுக்கலாமே என்று கடந்த சில ஆண்டுகளாக வரிசையாக படமெடுத்துத் தள்ளுகிறார்கள்.

1936லேயே முதல் பஞ்சாபிப்படம் கொல்கத்தாவில் தயாரானது. ‘ஷீலா’ என்கிற பெயரில் தயாரான அப்படம் லாகூர் மாகாணத்தில் வெளியானது (அப்போது ஒன்றுபட்ட இந்தியா). அப்படம் வெற்றியடைய அடுத்தடுத்து நிறைய படங்கள் பஞ்சாபி மொழியில் உருவாக்கப்பட்டன. 1947ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது பஞ்சாபில் பாதி பாகிஸ்தானுக்குப் போனது.

அப்போது பஞ்சாபி சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள். அவர்கள் லாகூருக்கு இடம்பெயர்ந்து ‘லாலிவுட்’ எனப்படக்கூடிய பாகிஸ்தான் திரையுலகை உருவாக்கினார்கள். நம்மூர் பஞ்சாபில் திரைமுயற்சிகள் குறைந்து, ஒரு கட்டத்தில் இந்திப் படம் பார்த்து மனசைத் தேற்றிக் கொண்டார்கள்.

எப்போதாவது அத்தி பூத்தாற்போல பஞ்சாபி படங்கள் அரங்குக்கு வரும். தோராயமாக பார்க்கப்போனால் எழுபதுகளில் வருடத்துக்கு ஒன்பது படங்கள், எண்பதுகளில் எட்டு, தொண்ணூறுகளில் ஆறு, ஏழு என்று கழுதை தேய்ந்து கட்டெறும்பானது.இரண்டாயிரங்களில் இந்திப் படங்கள் வெளிநாடுகளில் வசூலை அள்ளும்போது பொங்கியெழுந்த பஞ்ச்வுட் என்கிற பஞ்சாபி சினிமா சீறிப்பாயத் தொடங்கியது.

2002ல் மன்மோகன்சிங் (பிரதமர் அல்ல, இவர் இயக்குனர்) இயக்கத்தில் பாடகர் ஹர்பஜன் மான் நடித்த ‘ஜீ ஆயேன் நூ’ இமாலய வெற்றியை அடைய பஞ்சாபிய சினிமா மீண்டும் ஆட்டைக்கு வந்தது. ஹர்பஜன் - மன்மோகன் காம்பினேஷன் அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களாக சுட்டுத் தள்ளினார்கள்.

2010ல் மட்டும் பதினாறு படங்கள் வெளியாயின. ஜிம்மி ஷெர்கீல் நடித்த ‘மெல் கராதே ரப்பா’ எல்லா சாதனைகளையும் உடைத்து பத்து கோடிக்கு மேல் வசூலித்தது. பஞ்சாபில் இவ்வளவு பெரிய பிசினஸ் செய்த முதல் படம் இதுதான்.

அதன் பிறகு பஞ்சாபி சினிமா, எவ்வித தடைக்கல்லும் இல்லாமல் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் ஐம்பது, அறுபது கோடி வசூலையெல்லாம் எட்டுமளவுக்கு உயர்ந்துவிட்டார்கள். கடந்த ஆண்டு மட்டுமே நாற்பது பஞ்சாபி படங்கள் வெளியாகியிருக்கின்றன. பஞ்சாபி படங்களை பாகிஸ்தானிலும் விரும்பிப் பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக என்.ஆர்.ஐ. பஞ்சாபிகளைக் கவரும் விதமான கதை, காட்சியமைப்பு என்பதுதான் சமீபகால பஞ்சாபி படங்களின் தன்மை. கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சாபி படங்களின் பட்ஜெட் அதிகரித்துக்கொண்டே போக, பாலிவுட்டுக்குப் போன பஞ்சாபிகள் தங்கள் தாய்மண்ணுக்கே திரும்ப வரத் தொடங்கினார்கள். ஜூஹி சாவலா எல்லாம் இப்போது பஞ்சாபி படங்களில் நடிக்கிறார்.

எதிர்காலத்தில் குஷ்பு, சிம்ரன் போன்றவர்கள் நடித்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மண்வாசனை கமழும் படங்களையும் உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். எது எப்படியாயினும் காதல் - காமெடி வகைகளில் படங்களை எடுப்பதுதான் அவர்களது ஃபர்ஸ்ட் சாய்ஸ்.