நண்பேன்டா சித்ரா லட்சுமணன்



டைட்டில்ஸ் டாக் 57

உலகத்தில் மேன்மையான உறவு எது என்றால் அது நட்புதான். உண்மையான நட்பு எதிர்பார்ப்புகள் இல்லாதது. நன்மை, தீமையைக் கருதி தொடர்வது நட்பு அல்ல. எவ்வித பிரதிபலனும் பார்க்காமல் பழகுவதற்கு பெயர்தான் நட்பு. என்னை நாலு பேருக்கு தெரிகிறது என்றால், அதற்குக் காரணம் என் நண்பர்கள்தான்.திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் கிராமம் ஒன்றிலிருந்து பள்ளிப் படிப்பை முடிச்சிட்டு சென்னைக்கு வந்தேன். தெள்ளூர் தர்மராஜ் என்ற நண்பர் என்னை பத்திரிகைத் துறைக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

ஓவியர் எல்.ஜி.ராஜ் என்ற நல்லுள்ளத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஓவியர் ராஜ் மீடியாவில் செல்வாக்கு படைத்தவர். என்மீது அவருக்கு அபரிமிதமான அன்பும் பாசமும் உண்டு. ஒரு கட்டத்தில் ஓவியர் ராஜ் நடத்திய பத்திரிகை நின்றுவிட்டது.நானும் ஊருக்குத் திரும்பிவிட்டேன். எங்கள் ஊரில் உள்ள பிரபல ஸ்பின்னிங் மில்லில் வேலைக்கு சூப்பர்வைசராக சேர்ந்துவிட்டேன். அந்த சமயத்திலும் எனக்கும் ஓவியர் ராஜுக்கும் கடிதத் தொடர்பு மட்டும் நீடித்தது.

வாரத்துக்கு இரண்டு கடிதங்களாவது அவரிடமிருந்து வரும். அந்த கடிதங்களில் நான் சென்னையில் இருக்க வேண்டியவன் என்றும், பல சாதனைகளைச் செய்ய வேண்டியவன் என்றும் நினைவு படுத்துவார்.

ஒரு முறை நான் தட்டிக்கழிக்காத மாதிரி ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், என் நண்பர் புதிதாக ஒரு பத்திரிகை துவங்குகிறார்; நீங்கள்தான் அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று அழைப்பு கொடுத்திருந்தார். அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு நான் மறுபடியும் சென்னை வந்தேன்.  ‘இந்தியன் மூவி ஸ்டார்’ என்ற தமிழ், ஆங்கிலப் பத்திரிகையில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தேன்.

ஒரு பத்திரிகை ஆசிரியருக்கான முழுப் பொறுப்பும் எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பற்றியும் தெரியாது. ஆனாலும் என்னை நம்பி அந்த பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். பொறுப்பு கைக்கு வந்ததும் பொறுப்புக்கு ஏற்ற மாதிரி என் தகுதிகளை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தேன். அந்த பத்திரிகை சில பல காரணங்களால் தொடர்ந்து வெளிவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது நான் சொந்தமாக ‘திரைக்கதிர்’ என்ற பத்திரிகையை துவங்கினேன்.

அதே பத்திரிகையில் வித்தியாசமான முயற்சியாக சினிமாவையும் நாவலையும் கலந்து வெளியிட்டேன். ஒரே டிக்கெட்ல இரண்டு கதை உள்ள படங்கள் வெளி வருகிற மாதிரியான முயற்சி. அந்த கான்செப்ட்டை முதன் முதலாக நான்தான் அறிமுகப்படுத்தினேன். வாசகர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது.

அந்தப் புத்தகத்தில் சுஜாதா, இயக்குநர் மகேந்திரன், புஷ்பா தங்கதுரை, சிவசங்கரி போன்ற பல பிரபலங்கள் எழுதினார்கள். சினிமாவையும் இலக்கியத்தையும் கலந்து அந்த பத்திரிகையை சக்ஸஸ்புல்லாக நடத்தினேன்.அதன் மூலம் இலக்கிய வட்டாரத்தில் ஏராளமான நட்பு கிடைத்தது. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்தவர் நண்பரும் ஓவியருமான ராஜ்.

சென்னைக்கு நான் முதன் முதலாக வரக் காரணமாக இருந்த தெள்ளூர் தர்மராஜ் மூலம் மாரா என்கிற மா.ராமச்சந்திரன் என்ற நண்பரின் பழக்கம் கிடைத்தது. அவர் எம்.ஜி.ஆர், சிவாஜி நடித்த படங்களுக்கு வசனம் எழுதியவர்.


 அவர் மூலம் இயக்குநர் ஜி.ராமகிருஷ்ணன் அறிமுகம் கிடைத்தது. அதிலிருந்து சினிமா மக்கள் தொடர்பாளராக வேலை பார்க்க ஆரம்பித்தேன். சினிமாத் துறையில் நான் பெயரும் புகழும் பெறக் காரணமாக இருந்தவர்கள் இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம். அவர்களை விட நான் வயதில் இளையவனாக இருந்தாலும் என்னிடம் நட்பு பாராட்டினார்கள்.

நான் சினிமா தொடர்பாளராக இருக்கும்போது பாரதிராஜா உதவி இயக்குநராக இருந்தார். நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதால் எங்களுக்குள் நெருக்கமான நட்பு இருந்தது.

அப்போது பாரதிராஜா சீரியஸாக வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். ‘16 வயதினிலே’ உள்பட அவருடைய கதைகள் திரைவடிவம் காண்பதற்கு முன் என்னிடம் சொல்லியிருக்கிறார். முதன் முதலாக அவருக்கு ‘16 வயதினிலே’ பட வாய்ப்பு கிடைத்தபோது கூட அந்தத் தகவலை என்னிடம் பகிர்ந்து கொண்டார். நான்தான் ‘16 வயதினிலே’ படத்துக்கு அழைப்பிதழ் பிரிண்ட் செய்து கொடுத்தேன்.அப்புறம் என்ன ஆச்சுன்னு அடுத்த வாரம் சொல்றேன்.

- சுரேஷ்ராஜா