எவ்வளவு நாள்தான் கெட்டவனாவே நடிக்கிறது?



பதுங்கிப் பாய்கிறார் வேல ராமமூர்த்தி!

பிரம்மாண்ட இயக்குநர்களுக்கு இணையாக இப்போது அறிமுக இயக்குநர்களின் படங்கள் அதிக வரவேற்பைப் பெறுகிற காலகட்டம் இது. சமீபத்தில் வெளிவந்த ‘அருவி’, ‘அறம்’ போன்ற நல்ல படங்கள் அறிமுக இயக்குநர்களிடமிருந்துதான் வந்துள்ளன.

அப்படி ஒரு அறிமுக இயக்குநரான எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டியின் இயக்கத்தில் நான் ஸ்டாப் காமெடி சரவெடியாக உருவாகியுள்ளது ‘பதுங்கி பாயணும் தல’. சமீபத்தில் ஆடியோ வெளியீட்டை தடபுடலாக நடத்திய சந்தோஷத்தில் இருந்த இயக்குநர் எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டியிடம் பேசினோம்.“தலைப்பே சும்மா பாயுது.....

என்ன மாதிரியான கதை?”

“காமெடிதான் படத்தோட அடிநாதம். இது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ மாதிரி கலகலப்பான ஸ்கிப்ரிட். அப்பா, அம்மா இல்லாத ஹீரோவை வளர்த்து ஆளாக்குகிறார் வேல.ராமமூர்த்தி.

அதற்கு பிரதிபலனாக, தன் வாழ்க்கையை தியாகம் செய்த வேல.ராமமூர்த்தியின் அரசியல் ஆசையை நிறைவேற்ற தன் நண்பர்களுடன் சேர்ந்து முயற்சி செய்கிறார் நாயகன். அந்த முயற்சிதான் படம். அதை பிரேம் டூ பிரேம் காமெடியாக சொல்லியிருக்கிறேன். அந்த வகையில் படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது.”

“ஹீரோ?”

“இந்தக் கதையை முதலில் விஜய் சேதுபதியை மனதில் வைத்துதான் எழுதினேன். ஆனால் இப்போது விஜய் சேதுபதியின் மார்க்கெட் நிலவரத்துக்கு பட்ஜெட் ஒத்துவராததால் வேரு ஒரு ஹீரோவை ட்ரை பண்ணலாம் என்று என்னுடைய முடிவை மாற்றிக்கொண்டேன். அப்போது என் நட்பு வட்டாரத்தின் மூலம் ‘பர்மா’ மைக்கேலின் அறிமுகம் கிடைத்தது.

விஜய் சேதுபதி இந்தக் கதைக்கு நெய் மாதிரி என்றால் மைக்கேல் வெண்ணெய் மாதிரி. ஏன்னா, இது மதுரையில் நடக்கிற கதை. விஜய் சேதுபதி முகத்தில் சுலபமாக மண் வாசனையைக் கொண்டு வரமுடியும். ஆனால் மைக்கேல் அப்படி இல்லை. அவர் முகத்தில் எப்போதும் சிட்டி பையனுடைய லுக்ஒட்டிக் கொண்டிருக்கும்.

மைக்கேலின் நாடி, நரம்பு என சகல இடங்களிலும் சினிமா ரத்தம் ஓடுவதால் என்னால் அவரை எளிதாக இந்த்க கதைக்குள் கொண்டு வர முடியும் என்று நம்பினேன். ஒரு மாதம் பயிற்சி வகுப்பு வைத்தேன். அதில் ஆர்வமாகக் கலந்துகொண்டார். நடை, பேச்சு, உடல் மொழினு எல்லாவற்றிலும் முந்தைய படத்திலிருந்து தன்னை மாற்றிக் கொண்டு நடித்திருக்கிறார்.”

“வேல ராமமூர்த்திக்கு என்ன கேரக்டர்?”

“படத்தோட முதுகெலும்பே வேல.ராமமூர்த்தி சாருடைய கேரக்டர்தான். ‘மதயானைக்கூட்டம்’ படத்துல வீரத்தேவனா, ‘சேதுபதி’யில வாத்தியாரா, ‘கிடாரி’யில கொம்பையா பாண்டியனா பார்த்த வேல.ராம மூர்த்தியை இந்தப் படத்தில் வேற மாதிரி பார்ப்பீங்க.சுப்பையா பாண்டியன் என்ற கேரக்டர்ல வர்றார்.

படத்துல அவருடைய கேரக்டர் தனித்துவமாகத் தெரியவேண்டும் என்பதற்காக பெரியளவில் காமெடி சீன்ஸ் யோசிச்சி வைத்திருக்கிறேன். அவரிடம் கதையை சொல்லும் போது இதில் உங்களுக்கு காமெடி வேடம் என்றதும் முதலில் தயங்கினார். அதுக்குக் காரணம் குறுகிய காலத்தில் சினிமாவில் அவருக்குன்னு ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். அந்த இமேஜை விட்டுட்டு எப்படி இதில் நடிக்கிறதுனு யோசிச்சார்.

ஆனால் படத்தில் காமெடிக்குன்னு பலர் இருந்தாலும் எல்லோரும் இவரோட கேரக்டருக்கு அடங்கி நடக்கிற மாதிரி இருக்கும் என்பதால் சம்மதித்தார். அவரை முன்னிறுத்தித்தான் படத்தின் காமெடி காட்சிகள் இருக்கும்.சமீபத்தில் அவர் நடித்த காட்சிகளைப் பார்த்துவிட்டு ரொம்பவே திருப்தி அடைந்தவராக, ‘இதுவரை நான் காமெடி வேடங்களில் நடித்ததில்லை. நானும் எவ்வளவு நாள்தான் கெட்டவனாவே நடிக்கிறது. இந்தப் படத்தில் முதல் முறையா என்னை காமெடி கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறீர்கள். கண்டிப்பா இந்தப் படம் மக்களை திருப்திப்படுத்தும்’ என்று பாராட்டினார்.”

“படத்துல வேற யாரெல்லாம் இருக்காங்க?”

“நாயகி நைனிகா. திறமையான நடிகை. நான் நடத்திய பயிற்சி வகுப்பில் மைக்கேல் கலந்துக்கிட்ட அளவுக்கு நைனிகாவால் கலந்துக்க முடியலை. நானும் எப்படி அவங்களால் கேரக்டரில் சிறப்பாக நடிக்க முடியும் என்று பயந்தேன். ஆனால் எந்தக் குறையும் வைக்கவில்லை.
சிங்கம்புலி, தீபன், ராகுல் தாத்தா, ஹாலோ கந்தசாமி ஆகியோர் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். ஆர்.என்.ஆர்.மனோகர், எம்.எஸ்.பாஸ்கர் காமெடி கலந்த வில்லன் ரோல் பண்ணியிருக்கிறார்கள்.”

“படத்துல வேற என்ன ஸ்பெஷல்?”

“வழக்கமாக ஒரு கமர்ஷியல் படத்தில் நாலு பாட்டு, நாலு சண்டை, நாலு காமெடி டிராக், இரண்டு சென்டிமென்ட் சீன் என்று டெம்ப்லேட் பாணியில் ஸ்கிரிப்ட் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் கதையோடு கலந்துதான் காமெடி இருக்கும். அதுதான் இந்தப் படத்தின் ஹைலைட்.
அதுமட்டுமில்ல, படத்தோட ஷூட்டிங் எங்க நடந்ததோ அங்கேயே படக்குழுவை ஒரு வீடு எடுத்து தங்க வைத்தோம். அந்த ஊர் மக்கள் எப்படி பேசுறாங்க, பழகுறாங்கனு எல்லாத்தையும் குறிப்பு எடுத்து அப்படியே படத்துல கொண்டு வந்துள்ளேன்.

பொதுவா நடிகர், நடிகைகள் ஓட்டல் அறையில் தங்குவார்கள். ஆனால் இந்த அனுபவம் அவர்களுக்கு ரொம்ப வித்தியாசமா இருந்தது. அந்த வகையில் படத்துல வர்ற எல்லாருமே அன்றாடம் நாம் பார்த்து பழகின மனிதர்கள் மாதிரி இருப்பார்கள். அதுதான் இந்தப் படத்தோட பலம்.”

“இசை?”

“வல்லவன் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். நான் எழுதிய ‘மாமனா மச்சானா மானங்கெட்ட டேஷுக்கு’ என்ற பாடலை அந்தோணிதாஸ் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் இன்னொரு ‘சொடக்கு மேல சொடக்கு போடு’ மாதிரி செம ரகளையா வந்திருக்கு. விஜய் சேதுபதி வெளியிட்ட இந்தப் பாடல் இதுவரை ஃபேஸ்புக்கில் பத்து லட்சம் பார்வையாளர்களைத் தாண்டியுள்ளது. காமெடி படம் என்பதைத் தாண்டி பின்னணி இசைக்கும் அதிகம் உழைத்திருக்கிறார் வல்லவன்.

என்னுடைய ஒளிப்பதிவாளர் ரோவின் பாஸ்கர் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். இந்தப் படத்தின் மொத்த ஷெட்யூல் ஐம்பத்தி மூன்று நாட்கள். ஆனால் நாற்பத்தைந்து நாட்களில் முடித்துவிட்டேன். அதுக்குக் காரணம் என்னுடைய ஒளிப்பதிவாளர் ரோவின் பாஸ்கரின் மின்னல் வேக உழைப்பு. என்ன மேஜிக் பண்ணுவாரோ தெரியலை... எவ்வளவு வேகமாக எடுத்தாலும் விஷுவல்ஸ்ல அள்ளுவார்.”

“உங்களைப்பற்றி சொல்லவே இல்லையே?”

“இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், சீமான் ஆகியோரிடம் அசோசியேட் இயக்குநராக வேலை பார்த்துள்ளேன். அவர்களிடமிருந்து வெளியே வந்தபிறகு தனியாக படம் பண்ணலாம் என்று ஸ்கிரிப்ட் ரெடி பண்ண ஆரம்பித்தேன். த்ரில்லர், காமெடி என பல ஜானர்களில் கதை ரெடி பண்ணிவைத்தேன். தயாரிப்பாளர் ஆமினா ஹுசைன் மேடத்திடம் இரண்டு கதைகளையும் சொன்னேன். அவர் காமெடி கதையை டிக் பண்ணினார்.

காப்பி ரெடி ஆனதும் தயாரிப்பாளர் ஆமினா மேடத்துக்கு போட்டுக் காண்பித்தேன். படத்தைப் பார்த்துட்டு இதே டீமை வச்சு அடுத்தபடமும் பண்ணுங்க என்று தங்க செயினை பரிசாகக் கொடுத்தாங்க. தயாரிப்பாளர் கொடுத்த அந்த அங்கீகாரம் என் கடமையை சரியாக செய்திருக்கிறேன் என்ற திருப்தியைக் கொடுத்திருக்கு.’’

- சுரேஷ்ராஜா