அதகளப்படுத்துகிறது அஸ்கா புஸ்கா!



‘நாக்க மூக்க’ மாதிரி அதிரிபுதிரியாக வரும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே தனி மவுசு இருப்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் ‘முந்தல்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘அஸ்கா புஸ்கா’ பாடல் சோஷியல் மீடியாவில் செம வைரல். இந்தப் பாடலை மறைந்த பாடலாசிரியர் அண்ணாமலை எழுதியுள்ளார். கே.ஜெய்கிருஷ் இசையமைத்துள்ளார். புதுமுகம் அப்பு கிருஷ்ணா இதன் நாயகன். பிரபல ஸ்டண்ட் இயக்குநர் ஜெயந்த் இந்தப் படத்தை
இயக்கியுள்ளார்.

‘‘எனக்குத் தெரிந்த கலை ஸ்டண்ட். அதன் அடிப்படையில் இந்தப் படத்தை அதிரடியான அட்வென்சர் காட்சிகள் நிறைந்த ஆக்‌ஷன் படமாக உருவாக்கியிருக்கிறேன்.சித்த வைத்தியத்தின் முக்கியத்துவத்தையும், நம் நாட்டு உணவுப் பழக்கம் எத்தகைய மருத்துவ குணங்களைக் கொண்டது என்பதையும் ஏராளமான ஆய்வுகள் செய்து இந்த ஸ்கிப்ரிட்டை ரெடி பண்ணியிருக்கிறேன்.

சயின்ஸ் பிக்‌ஷன் படம் மாதிரி இல்லாமல் கமர்ஷியல் அம்சங்கள் அனைத்தையும் கலந்து சொல்லியிருக்கிறேன். ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் சாகசக் காட்சிகள் ஆக்‌ஷன் பிரியர்களுக்கு செம விருந்தாக இருக்கும். நீருக்கு அடியில் இடம் பெறும் காட்சிகளில் உயிரை பணயம் வைத்து எடுத்துள்ளேன். அடிப்படையில் ஸ்டண்ட் கலைஞர் என்பதால் பலபேர் தயங்கக்கூடிய காட்சிகளையும் துணிச்சலாக படமாக்கியுள்ளேன்.

‘அஸ்கா புஸ்கா’ பாடல் எல்லா தரப்பு ஆடியன்ஸும் ஆட்டம் போடும் வகையில் கலக்கலான குத்துப்பாடலாக வந்திருக்கு.
தர்மபுத்திரன் எழுதியுள்ள மீனவர்களின் வாழ்க்கையை சொல்லும்

‘‘கண்ணீர தான் துடைக்க தண்ணீரில் போறோம்,
காற்றையும் அலையையும் போராடி வாரோம்,
மீனவர் வாழ்க்கை எல்லாம் மீளாத சோகம்,
கண் இருந்தும் இருட்டு வாழ்க்கை வாழ்கிறோம் ஒவ்வொரு நாளும்,
கரைக்கு வந்தா பிள்ளைக்கு அப்பா,
இல்லனா கடலுக்கே உப்பா”

என்ற பாடல் கண்ணீரை வரவழைக்கும் நெகிழ்ச்சியான பாடலாக இருக்கும். தமிழ் சினிமாவில் மீனவர்கள் பற்றிய பாடல்கள் அரிதாகத்தான் வந்துள்ளன. அப்படி ஒரு படத்தில் மீனவர்களைப் பற்றி பாடல் வந்தால் அந்தப் பாடலும், படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில், ‘முந்தல்’ படத்தின் பாடல்களும், படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும்’’ என்கிறார் இயக்குநர் ஜெயந்த்.

- ராஜா