சந்தனமரத் தோப்பில் சண்டைக்காட்சி!



பேய் சீசன், காமெடி சீசன் மத்தியில் கிராமத்து படங்கள் எடுக்கும் இயக்குநர்களின் எண்ணிகை மிகக் குறைவு. அந்த வரிசையில் ‘உளிரி’ படத்தில் மண்வாசனையோடு வந்திருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜெயகாந்தன். இவர் ‘விருதாசலம் பட்டு’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.படத்தின் ரிலீஸ் வேலையில் பரபரப்பாக இருந்த அவரிடம் பேசினோம்.

“உங்க ‘உளிரி’யோட டிரைலர், பாடல்கள் பார்த்தால் கமர்ஷியல் படம் மாதிரி தெரியுதே?”

“என்னுடைய முந்தைய படமான ‘விருதாசலம்பட்டு’ படத்தில் கமர்ஷியலோடு சேர்த்து சமுதாயத்துக்கான கருத்துக்களையும் சொல்லியிருப்பேன். திருநங்கையர்களை பெருமைப்படுத்திய படம் என்று பத்திரிகைகள் விமர்சனம் எழுதினார்கள். அந்த மாதிரியான படைப்பும் சமூகப் பொறுப்பும் இந்தப் படத்திலும் இருக்கிறது.

அந்த வகையில் இது கமர்ஷியல் கலந்த தரமான படைப்பாக இருக்கும். முதல் பாதி கலகலப்பாகவும் இரண்டாம் பாதியில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது போலவும் காட்சிகள் இருக்கும். கிளைமாக்ஸ் காட்சிகள் பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கும் வகையில் நெகிழ்ச்சியாக இருக்கும்.”

“தலைப்பு புதுசா இருக்கே?”

“உளிரி என்பது ஒரு மீன் வகை. வஞ்சரம், வவ்வால் போன்ற மீன் வகைகளை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் உளிரி என்ற மீன் வகையை நீங்கள் அரிதாகத்தான் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த வகை மீன் காவிரி ஆற்றுப் படுகையில் காணப்படும் அரிய வகை மீன். உருவத்தில் அயிரை மீன் சைஸில் சிறிதாக இருக்கும். என்ன சோகம் என்றால் இந்த மீன் இனம் அழிந்து பத்துப் பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டது.

இந்த மீன் ஏழை மக்களின் பசியைப் போக்கிய இறைவனின் கொடை என்றே சொல்லலாம். டெல்டா மாவட்டங்களில் வறட்சி சமயத்தில் எலியை உணவாக சமைத்து விவசாயிகள் உயிர் வாழ்ந்தார்கள் என்று செய்தித்தாளில் படித்திருப்பீர்கள். அதுபோல் இந்த மீனை பஞ்ச காலங்களில் சாப்பிட்டு உயிர் வாழ்ந்த மக்களும் இருக்கிறார்கள்.

இந்த மீன் இனத்தை காவிரி ஓடும் இடங்களில் பார்க்கலாம். ஆனால் இப்போதைய சூழலில் அந்த மீன் இனம் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை, காவிரி உற்பத்தியாகும் கர்நாடகாவிலும் இல்லை. அழிந்து போன அந்த மீன் இனம் போல் என்னுடைய நாயகனும் நாயகியும் ஒரு நல்ல விஷயத்துக்காக அழிந்து போகிறார்கள்.

ஒரு வாகனத்தில் பத்து பேர் செல்லும் போது ஒருவர் குறுக்கே வருகிறார் என்றால் அந்த ஒருவரை பலி கொடுத்தால்தான் பத்து உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலை உருவாகும். அதுபோல் ஊர் மக்களின் சந்தோஷத்துக்காக காதலர்கள் தங்கள் உயிரை எப்படி, என்ன காரணத்துக்காக மாய்த்துக்கொள்கிறார்கள் என்பதை அழுத்தமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறேன்.”

“யாரெல்லாம் நடிக்கிறார்கள்?”

“ஹீரோவாக சுரேஷ் நடிக்கிறார். பெங்களூரில் செட்டிலான தமிழர். கன்னடத்தில் ‘மல்லி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். தமிழில் ‘நேசம் நேசப்படுது’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போதும் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்துல ஆல் இன் ஆல் அழகுராஜா மாதிரி வர்றார். படிப்பு, வேலை, குடும்பம், காதல் என நடிப்பை வெளிப்படுத்த ஸ்கோப் உள்ள கேரக்டர்.

ஹீரோயின் ஷைனிக்கு துறு துறு கேரக்டர். துணிச்சலான பெண்ணாக அசரடிக்கும் நடிப்பைக் கொட்டியிருக்கிறார். இந்தப் படம்தான் அவருக்கு முதல் படம். ஆனால் என்னுடைய படம் வெளிவருவதற்கு முன் ‘வீரைய்யன்’, ‘இந்தியா பாகிஸ்தான்’ படங்களில் கமிட்டாகி அந்த படங்களும் ரிலீஸாகி விட்டன. எங்கள் படத்தின் புரொமோஷன் வேலைகளுக்குக்கூட வரமுடியாத அளவுக்கு பிஸியாகிவிட்டார்.

வில்லனாக யோகி பண்ணியிருக்கிறார். ஹீரோவின் அம்மாவாக கலைராணியும், ஹீரோவின் அப்பாவாக ‘பசங்க’ சிவக்குமாரும் வர்றாங்க. காமெடிக்கு புதுமுகம் ஏசுபாதம் இருக்கிறார். படத்துல அவருடைய காமெடி தனித்துவமாக இருக்கும். ரோபோ சங்கர், யோகி பாபு வரிசையில் நம்பிக்கை தரும் காமெடியனாக வருவார்.”

“படத்துக்கு நீங்களே இசையமைக்க காரணம்?”

“எனக்கு இசை தெரியும் என்ற காரணத்தைத் தவிர வேறு எதுவும் காரணமில்லை. இசையமைப்பாளர் செளந்தர்யன் என்னுடைய உறவுக்காரார். அவரிடம் சில காலம் சினிமாவுக்கான இசையை கற்றுக்கொண்டேன்.

எனக்கு ரிதம் செக்‌ஷன் நல்லா தெரியும். எவ்வளவு சிக்கலான சிச்சுவேஷன் சொன்னாலும் நிமிஷத்துல ட்யூன் அமைத்துவிடுவேன். சமீபத்தில் நடந்த ஆடியோ நிகழ்ச்சியில் சினிமா ஜாம்பவான்கள் பாடல்களை சிலாகித்துப் பேசினது எங்கள் படத்துக்கு கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.

வெங்கட் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். ப்ரியன் சாரின் உதவியாளர். நான் இயக்கிய ‘விருதாசலம் பட்டு’ படத்துக்கும் அவர்தான் கேமரா. நகரத்தையும் கிராமத்தையும் இணைத்து அழகாகக் காண்பித்திருக்கிறார். மெட்ரோ மகேஷ் ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சிகளை கம்போஸ் பண்ணியிருக்கிறார்.

ஒரே ஒரு சண்டைக்காட்சி இருந்தாலும் அது பேசப்படும்விதமாக இருக்கும். சந்தனமரத் தோப்பில் அந்தக் காட்சியை எடுத்தோம். பிரபல ஹீரோவின் படப்பிடிப்புக்காக பர்மிஷன் கேட்டபோது மறுக்கப்பட்ட நிலையில் எங்களுக்கு அனுமதி கிடைத்தது. நான் அந்த ஊர்க்காரன் என்பதால் அனுமதி கொடுத்தார்கள்.”

 “படத்துல என்ன மெசேஜ் சொல்லப் போறீங்க?”

“சமுதாயத்தைப் புரட்டிப் போடுகிற மாதிரி எந்த மெசேஜும் இல்லை. நம் அன்றாட வாழ்க்கையில் சந்தித்த, சந்திக்கிற பிரச்சனைகளைத்தான் படம் பேசுகிறது. என்னிடம் சமுதாயத்துக்குத் தேவையான நிறைய கதைகள் இருக்கிறது. இந்தக் கதை தயாரிப்பாளரின் பட்ஜெட்டுக்குள் இருந்ததால் இந்தப் படத்தை எடுக்க முடிவு செய்தோம்.

என் மனைவி தன் சொந்த ஊரில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை என்னிடம் சொன்னார். அவர் சொன்ன சம்பவத்துக்கு நான் திரைவடிவம் கொடுத்துள்ளேன். படத்துல பாடல்கள் ஹைலைட்டாக இருக்கும். ஏன்னா, இயல்பாகவே எனக்கு இசை வசப்படும். மற்றபடி அதை சொல்லப் போறேன், இதை சொல்லப் போறேன் என்று ஆடியன்ஸை ஏமாற்ற விரும்பவில்லை. யதார்த்தமான கதைக்கு என்ன தேவையோ அதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறேன்.”

“உங்களைப்பற்றி சொல்லவேயில்லையே?”

“சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள அணைக்கரை. அப்பாவுக்கு அரசாங்கத்துல வேலை. நான் குழந்தையாக இருக்கும் போது உடல் நிலை சரி இல்லாத போது மருத்துவம் பார்த்த டாக்டர் எனக்கு வைத்த பெயர்தான் ஜெயகாந்தன். நான் அரசாங்க உத்தியோகம் பார்க்கணும்னு ஆசைப்பட்டார் என்னுடைய அப்பா.

படிக்கும் போதே எனக்கு கவிதை, இசையில் நாட்டம் அதிகம். பள்ளி நாட்களில் பல போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகள் வாங்கியுள்ளேன். அந்த நம்பிக்கையில் எப்படியாவது சினிமாவில் ஜெயிக்க முடியும் என்று சென்னைக்கு வந்தேன். எல்லோரும் சொல்கிற மாதிரி எனக்கும் சில மோசமான சம்பவங்கள் நடந்தது.

செலவுக்கு கொண்டு வந்த பணத்தை யூனியன்ல சேர்த்துவிடுகிறேன் என்று சொல்லி சிலர் ஸ்வாகா பண்ணினார்கள். ஒரு கட்டத்தில் கலா மாஸ்டரிடம் டான்ஸ் உதவியாளராக சேர வாய்ப்பு கிடைத்தது. ஏராளமான படங்களில் டான்ஸராக வந்திருக்கிறேன்.

ஆனால் என்னுடைய லட்சியம் டைரக்‌ட் பண்ணுவது. லட்சியத்தை அடைவதற்காக கிடைத்த துறையில் கவனம் செலுத்தி எனக்கான திறமைகளை வளர்த்துக் கொண்டேன். இந்தப் படத்தை என்னால் பிரம்மாண்டமாக எடுத்திருக்கமுடியும்.

ஆனால் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ் ஆகியோரை கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருப்பதால் சிக்கன செலவில் என் பல வருட அனுபவத்தாலும் தரமான படத்தை கொடுக்க முழுமையான மெனக்கெடலை போட்டிருக்கிறேன். தொடர்ந்து தயாரிப்பாளர்களைக் காப்பாத்துற மாதிரி கமர்ஷியல் படங்களை எடுத்து கமர்ஷியல் டைரக்டர் என்ற பெயரெடுப்பேன்.”

- சுரேஷ்ராஜா