நான்தான் ராஜா!



பிலிமாயாணம் 32

அப்போது எனக்கு பத்து வயது. எங்கள் வீட்டுக்கு எதிரில் ஒரு சிறிய ஓட்டல் இருந்தது. அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் ஓட்டல் பிசியாகி விடும். காரணம் வயல் வேலைக்கு செல்கிறவர்கள், மலைக்கு விறகு எடுக்கச் செல்கிறவர்கள், வெளியூர் பிரயாணத்துக்கு முதல் பஸ்சை பிடிக்கிறவர்கள் என அந்த ஊர் முழுக்கப் பரபரப்பாக இருக்கும். பல பணிகளை வைத்துக் கொண்டு வருகிறவர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக வந்து அந்தக் கடையில் ஒரு டீயைக் குடித்துவிட்டு அப்படியே தரையில் உட்கார்ந்து கொள்வார்கள்.

காரணம், அந்த டீக்கடையில்தான் அப்போது ரெக்கார்ட் பிளேயர் இருந்தது. கடைக்காரர் முஸ்லிம் என்பதால் முதலில் ஒன்றிரண்டு நாகூர் அனிபா பாடல்களைப் போட்டுவிட்டு, அடுத்து இந்திப் பட பாடல்களைப் போடுவார்.

மொழி புரியாவிட்டாலும் அதனை மிக ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். தமிழ்ப் பாடல்கள் இருக்கும்போது ஏன் அவர்கள் இந்திப் பாடல்களை ஆர்வமாகக் கேட்டார்கள் என்று அப்போது எனக்குப் புரியவில்லை, பிற்காலத்தில் நான் அறிந்து கொண்டேன்.

தமிழ் சினிமாவின் ராஜகுருவாக இருந்த பஞ்சு அருணசாலத்திடம் ஒரு நேர்காணலுக்காகச் சென்றிருந்தபோது அவர் இதுபற்றிக் கூறினார்.“தம்பி, நீங்க சொல்றது சரிதான். எழுபதுகளின் தொடக்கத்திலேருந்து இளையராஜா வருகிற வரைக்கும் தமிழ் சினிமா இசையில் ஒரு சின்ன தேக்கம் இருந்தது.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்தான் அப்போது டாப் மியூசிக் டைரக்டர். அவருடைய பாடல்களை மக்கள் ரசித்தார்கள். பாடல்கள் தேனினும் இனிப்பாக இருந்தது. ஆனாலும் அதனை கிராமத்து மக்கள், ஒரு திரைப்படப் பாடலாகத்தான் பார்த்தார்கள்.

கச்சேரியில் கேட்டார்கள். ஆனால் கிராமத்து மக்களுடைய வாழ்க்கைக்கு நெருக்கமாக இல்லாமல் இருந்தது. அவர்கள் காதுகளை குளிர்வித்த இசை அவர்களது மனதுக்கு நெருக்கமாகவில்லை. இந்த நேரத்தில்தான் அவர்கள் கவனம் அப்போது புதிதாக வந்த இந்திப் பாடல்கள் பக்கம் திரும்பியது.

மொழி புரியாவிட்டாலும் மனைதைப் பிசைகிற அந்த இசை, ராகம் அவர்களை ஏதோ செய்தது. அதனால்தான் அப்போது நம் மண்ணின் இசையைக் கொண்டு வரக்கூடிய ஒருவரைத் தேடினேன்.

என்னுடைய உதவியாளர் செல்வராஜ் ‘மருத்துவச்சி’ன்னு ஒரு வில்லேஜ் சப்ஜெக்ட் வச்சிருந்தார். ஒரு சாதாரண நர்ஸ் செத்ததுக்கு பல ஊர் மக்கள் திரண்டு வந்து அழுதாங்களாம். ஏன்னு விசாரிச்சுப் பார்த்ததுல, மக்களுக்காகவே சேவை செய்த அந்த நர்ஸ் ஒரு காதல் வயப்பட்டு அந்தக் காதல் கைகூடாததால் தற்கொலை செய்திருப்பாள்.

இதைத்தான் செல்வராஜ் ‘மருத்துவச்சி’ கதையாக வச்சிருந்தார். கிராமத்துக் காதல், ஒரு பெண்ணின் ேசவை, கிராம மக்களின் வெள்ளந்தி மனம், சின்னதா ஒரு வில்லன் எல்லாமே அந்தக் கதையில இருந்திச்சு. இதை ஒரு வில்லேஜ் மியூசிக்கல் படமாக பண்ணணும்னு முடிவு பண்ணிட்டு. அன்னிக்கு ஃபீல்டுல இருந்த எல்லா இசையமைப்பாளர்களையும் ஓரங்கட்டிட்டு நாட்டுப்புறப் பாட்டு பாடுறவங்க, அதுக்கு மியூசிக் போடுறவங்கன்னு தேட ஆரம்பிச்சேன்.

அந்த நேரத்துல செல்வராஜ்தான், ‘ஏண்ணே அங்கே இங்க தேடுறீங்க நம்ம கிட்ட ஒரு பையன் இருக்காரு. நம்ம கம்யூனிஸ்ட் கட்சிப் பாடகர் பாவலர் வரதராசனோட தம்பி, பேரு ராஜா, ஜி.கே.வெங்கடேஷ்கிட்டதான் ஒர்க் பண்ணிட்டிருக்காரு. அண்ணன்கிட்ட தொழில்கத்துக்கிட்டவரு, கிராமியப் பாட்டுகள் சும்மா கொட்டும். ஒரு தடவை கேட்டுப் பாருங்க’ன்னு சொன்னார். ‘சரி வரச்சொல்லுப்பா பார்க்கிறேன்’ என்றேன்.

மறுநாள் அந்தப் பையனை பாம்குரோவ் ஓட்டல்ல சந்திச்சேன். சும்மா ெவறும் கைய வீசிக்கிட்டு வந்தான். ‘ஏம்பா ராஜா வரலையா? நீ யாரு’ன்னேன். ‘நான்தான் ராஜா’ என்றான். கருத்த நிறமும், மெலிந்த தேகமுமாய் இருந்த அந்தப் பையனுக்குள் இசை இருக்கும்னு நான் நம்பல. ‘சரி. ஆர்மோனியப்பெட்டி எங்கே?’ன்னு கேட்டேன்.

‘இல்லீங்க. என்ன மாதிரி பாட்டு வேணும்னு சொல்லுங்க. நான் மெட்டு போட்டுக் காட்டுறேன்’ என்றான். கதை சூழல் சொன்னேன். அப்படியே சாப்பாட்டு டேபிள்ல கைகளால் தாளம் போட்டு ஒரு மெட்டு போட்டான். அதுதான் ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே...’ மெட்டு.
அந்த நொடியில் இருந்து அவனை ஒருமையில் அழைப்பதை நிறுத்தினேன்.

‘நீங்க தான் எங்க மருத்துவச்சியோட மியூசிக் டைரக்டர்’னு சொல்லி அனுப்பி வைத்தேன். அன்று ராஜா போட்ட மெட்டு இரவெல்லாம் என்னை என்னவோ செய்தது. அன்று இரவே செல்வராஜுக்கு போன் பண்ணி  ‘படத்தோட டைட்டிலை அன்னக்கிளின்னு மாத்திட்டேன்’ என்றேன்.”

பஞ்சு அருணாசலம் இதை சொன்ன போது அவரது முகத்தில் அத்தனை பெருமிதம். விஞ்ஞானி ஆர்க்கிமிடீஸ் ‘யுரேகா’ என்று கத்தியபடியே குளியலறையில் இருந்து ஓடிவந்தார் என்று சொல்வார்கள். ஒரு மகத்தான மேதையை தான் கண்டு கொண்ட நொடியை கடைசிவரை அப்படியே நினைவில் இருத்தி வைத்திருந்தார் பெரியவர் பஞ்சு அருணாசலம்.

அதற்குப் பிறகு இந்திப் பாடல்களில் கட்டுண்டு மயங்கிக் கிடந்தவர்கள் அன்னக்கிளியின் கீதம் கேட்டு விழித்தார்கள். இளையராஜாவின் கீத மழையில் பலர் பைத்தியமாகத் திரிந்தார்கள். எங்கள் ஊரில் ஒருவர் அவருக்குக் கோவிலும் கட்டினார். அதுபற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்...

(பிலிம் ஓட்டுவோம்)

பைம்பொழில் மீரான்