நடனம் பற்றி நடனப் புயலோடு டிஸ்கஷன் செய்த லட்சுமி மேனன்!



நடிப்பைவிட படிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் தருபவர் லட்சுமி மேனன். கோடம்பாக்கத்தில் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் காலெடுத்து வைக்கிறார்.“எனக்கு பணமும், புகழும் முக்கியமில்லை. நல்ல கதாபாத்திரத்தில் நடித்த நடிகை என்கிற பெயரை வாங்குவதுதான் முக்கியம். எனவேதான், கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் வாரிப் போட்டுக் கொள்ளாமல் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்” என்கிறார் லட்சுமி மேனன்.

இப்போது பிரபுதேவாவுடன் அவர் நடிக்கும் ‘யங் மங் சங்’ படத்தில் செமத்தியான கதாபாத்திரமாம். கதையைக் கேட்டு இன்ஸ்பையர் ஆனதால்தான் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.புடவை, பாவாடை தாவணியென்று வில்லேஜ் கெட்டப்பிலேயே மங்களகரமாக நடித்து அலுத்துவிட்டது, இனி மாடர்ன் காஸ்ட்யூம்களில் நடிப்பேன் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு சொல்லியிருந்தார்.

அந்த கொள்கையை ‘யங் மங் சங்’குக்காக கொஞ்சம் தளர்த்தியிருக்கிறார். இந்தப் படத்திலும் புடவை, ரவிக்கை யென்று டிபிக்கல் தமிழ்ப்பெண் வேடம்தானாம்.பொதுவாகவே படப்பிடிப்பு இடைவேளைகளின்போது படத்தில் நடிப்பவர்களோடு ஜாலியாக பேசிப்பழகும் வழக்கம் லட்சுமி மேனனுக்கு இல்லை. ஏதாவது புத்தகத்தை எடுத்துக் கொண்டு கேரவனில் ஒதுங்கிவிடுவார்.

ஆனால் -‘யங் மங் சங்’ படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்தபோது ஓய்வு நேரத்தில் பிரபுதேவாவுடன் ஓயாத உரையாடலாம். ஒரு நடனக் கலைஞர் என்கிற முறையில் நடனம் குறித்து பிரபுதேவாவுடன் பேசிய பேச்சுகள் தனிப்பட்ட முறையில் பெரும் உந்துதலாக இருந்தது என்று சொல்கிறார். நடனத்தைத் தவிர வேறெதுவும் பேசவே இல்லை என்று தலையில் அடித்து சத்தியமும் செய்கிறார் லட்சுமி மேனன்.

- நெல்லை பாரதி