மீண்டும் புரூஸ்லீ!



கொதிக்கும் கோடையில் அனல் பறக்கும் ஆக்‌ஷன் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் முளையூர் சோனை. இது ஆக்‌ஷன் அதகளம் என்பதை ‘புதிய புரூஸ்லீ’ என்கிற டைட்டிலே சொல்லும். ஹீரோ புரூஸ்கான். ஹீரோயின் ரஸியா. செளந்தர்யன் இசையமைக்கும் இந்தப் படத்தை வந்தவாசி அமான் தயாரிக்கிறார்.

‘‘புருஸ்லீயின் ரசிகனான எனக்கு அவரைப் போன்ற முகச் சாயல் உள்ள புரூஸ் ஷானைப் பார்த்தவுடன் பக்கா  ஆக்‌ஷன் படம் பண்ணத் தோன்றியது. உடனே ஷானைப் பற்றி தகவல் சேகரித்தேன். அவரும் என்னைப் போன்றே புரூஸ்லீ ரசிகர் என்றும், கராத்தேவில் இரண்டு ப்ளாக் பெல்ட்  வாங்கியவர் என்ற தகவலும் என்னை மேலும் உற்சாகமாக்கியது.

கிராமத்தில் வாழும் ஒரு இளைஞன் சில பிரச்சினையால் தன் குடும்பத்தை இழக்கிறான். நிம்மதி தேடி நகரத்தில் வசிக்கும் மாமாவைச் சந்திக்கிறான். தன்னைப் போலவே மாமாவும் சில பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் இளைஞன் மாமாவின் துயரத்தைத் தீர்த்து வைப்பதுதான் படத்தின் கதை.

இந்தக் கதையில் ஷான் நடித்திருந்தாலும் புரூஸ்லீயே நடித்த மாதிரி இருக்கும். ஏன்னா, ஒவ்வொரு காட்சியையும் புருஸ்லீயை மனதில் வைத்தே உருவாக்கினேன். ஷானும் புரூஸ்லீயின் நடை, உடை, பாவனை என அனைத்தையும் அசாத்தியமான உழைப்பால் கண் முன் கொண்டு வந்திருக்கிறார்.

புரூஸ்லீயின் சண்டைக் காட்சிகள் வித்தியாசமானவை. வீரமும் ஒழுக்கமும் கலந்த புரூஸ்லீ ஸ்டைல் சண்டைக்காட்சியை சண்டை இயக்குநர் த்ரில் சேகர் அச்சு அசலாக அமைத்துக் கொடுத்தார். ஷானுக்கு கராத்தே தெரியும் என்பதால் சண்டைக் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார்.

க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை பாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் ஜிதேந்திரா ஹூடாவை வைத்து படமாக்கியுள்ளோம்.வலுவான ஹீரோ கதாபாத்திரத்துக்கு இணையாக வலுவான வில்லன் இருந்தால்தான் கதையில் சுவாரஸ்யம் இருக்கும். அந்த வகையில் புரூஸ்லீயை எதிர்க்கும் வில்லனாக சுரேஷ் நரங் நடித்துள்ளார். இந்தப் படம் புரூஸ்லீ ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ஆக்‌ஷன் படப் பிரியர்களுக்கு மாபெரும் விருந்தாக இருக்கும்’’ என்கிறார் இயக்குநர் முளையூர் சோனை.

- எஸ்