இப்போ எல்லாமே டைரக்ட் மீனிங்தான்! செம போதை ஆகலாமா?



‘பாணா காத்தாடி’ ரிலீஸ் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. ஹீரோ அதர்வாவுக்கு மட்டுமின்றி இயக்குநர் பத்ரி வேங்கடேஷுக்கும் அதுதான் அறிமுகப் படம். இத்தனை ஆண்டுகளில் அதர்வா, பத்து படங்களுக்கு மேல் செய்துவிட்டார்.

ஆனால் -இயக்குநருக்கு அடுத்தபட வாய்ப்பு இப்போதுதான் அமைந்திருக்கிறது. அதுவும் தன்னுடைய முதல்பட ஹீரோவான அதர்வாவை வைத்தே அடுத்த படமும் இயக்குகிறார். அதுதான் ‘செம போத ஆகாதே’.

“படத்தோட தலைப்புலே மட்டுமல்ல, கதை, திரைக்கதையிலும் கிறங்கடிக்கிற சமாச்சாரங்கள் ஏகத்துக்கும் இருக்கு. ஆனா, யாரும் முகம் சுழிக்கிற மாதிரியான விஷயங்கள் எதுவும் இருக்காது” என்று நம்பிக்கையோடு பேச ஆரம்பித்த பத்ரி வெங்கடேஷ், முதல் படத்துக்கும் அடுத்த படத்துக்கும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி என்று விளக்க ஆரம்பித்தார்.

“நானும், அதர்வாவும் இணைஞ்சி கொடுத்த ‘பாணா காத்தாடி’ ஓக்கேங்கிற அளவுக்கு ஓடிச்சு. அதுக்குப் பிறகு திரும்பவும் அதர்வாவை வச்சி இன்னொரு படம் தொடங்க இருந்தேன். எல்லா ஏற்பாடுகளும் முடிஞ்சிருச்சி. அந்தப் படத்தை கதைப்படி முழுக்க வெளிநாடுகள்ல ஷூட்டிங் நடத்தியாகணும். அதுல ஒரு சிக்கல் வந்து படம் தொடங்க முடியல.

அப்போதான் ஏகப்பட்ட டிவி ஷோ டைரக்ட் பண்ற வாய்ப்புகள். ஸோ, அந்தப் பக்கம் போக வேண்டியதாயிடுச்சி. தொடர்ந்து பல ஷோக்களை இயக்கினேன். மும்பை போயிட்டு அங்கேயும் இதுலதான் பிசியா இருந்தேன். இடையில நேரம் கிடைச்சப்போ அதர்வாகிட்ட இந்தப் படக் கதையை சொன்னேன். அவருக்குப் பிடிச்சிருந்தது. நேரம் காலம் அமைய படத்தை எடுத்தும் முடிச்சிட்டோம்.”

“தலைப்பு ஒரு மாதிரி இருக்கே?”

“நல்ல விஷயத்தைத்தானே சொல்லுது? ‘செம போத ஆகாதே’ன்னு தலைப்பு வச்சதுக்குக் காரணம், ஓவரா போதை ஆயிடக்கூடாது; அப்படி ஆயிட்டோம்னா தப்பு பண்ணிடக் கூடாதுங்கிற ஒன்லைன்தான் ஸ்டோரி. அதை முழுக்க ஷேப் பண்ணி பக்கா யூத் என்டர்டெயின்மென்ட்டா திரைக்கதையைக் கொடுத்திருக்கேன். குடிக்கவே கூடாது.

அப்படி ஒருவேளை குடிச்சா, அதுவும் ஓவரா குடிச்சிட்டா, குறைஞ்சது ரெண்டு மணி நேரம் நாம நாமளா இருக்கமாட்டோம். அந்த சமயத்துல சின்னதா பண்ற ஒரு தப்பு எப்படி ஹீரோவோட வாழ்க்கையைப் புரட்டிப் போடுதுங்கிற கதை.”“யூத் ஆடியன்ஸ், போதை, தப்பு தண்டான்னு நீங்க சொல்றத பார்த்தா அந்த மாதிரி சமாச்சாரங்கள் நிறைஞ்சிருக்கும் போலிருக்கே?”

“கண்டிப்பா இருக்கும். ஆனா எல்லாமே இலைமறை காயாகத்தான் இருக்கும். நான் தனியா போயிட்டு படம் பார்த்தாலும் முகம் சுழிச்சிடக்கூடாதுன்னு பார்ப்பேன். அதுதானே சரி. அதனால படத்துல அந்த மாதிரி விஷயங்களும் இருக்கு.

ஆனா எதுவுமே அபத்தமா இருக்காது. இப்போ டபுள் மீனிங் பற்றியும் கேட்கிறாங்க. இன்னிக்கு ஏதுங்க டபுள் மீனிங்? எல்லாமே சிங்கிள் மீனிங்தான். டைரக்டா எல்லாமே பேசுறாங்க!”
“இப்போ எல்லா படத்துலேயும் ரெண்டு ஹீரோயின் இருந்தே ஆகணும்னு மோடி ஏதாவது சட்டம் போட்டுட்டாரா என்ன?”

“ஹா.... ஹா... ஆடியன்ஸ் எதிர்பார்க்கிறாங்களே! நம்ம படத்துலே மிஷ்டி சக்ரவர்த்தி, மெயின் ஹீரோயின். அவங்கதான் அதர்வாவுக்கு ஜோடி. பெங்காலி பொண்ணு. பாலிவுட் ஷோமேன் சுபாஷ் கய் சார் அறிமுகம். இந்தப் படம் மூலமா தமிழுக்கு வர்றாங்க. ரொம்பவே துள்ளலான ஒரு கேரக்டர். அவங்க அழகு மட்டுமில்ல, துறு துறு நடிப்பும் இளைஞர்களைக் கவரும்.

இன்னொரு பொண்ணு, அனைகா சோட்டி. தெலுங்குல பிசியா நடிச்சிட்டு இருக்கிறாங்க. செக்ஸ் ஒர்க்கரா நடிச்சிருக்காங்க. படத்துல இவங்களோட ரோல் ரொம்பவே பவர்ஃபுல்லா இருக்கும். மிஷ்டியை விட இவங்களோட காட்சிகள்தான் அதிகமாக இருக்கும்.

கருணாகரன், ஜான் விஜய், மனோபாலா, தேவதர்ஷினி, சேத்தன் நடிச்சிருக்காங்க. வில்லனா அர்ஜய் நடிச்சிருக்கார். இவர் ‘தெறி’, ‘பண்டிகை’, ‘எமன்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ன்னு நிறைய படங்கள் நடிச்சிருக்கார். இப்போ இதுலதான் மெயின் வில்லனா வர்றார்.”

‘டெக்னீஷியன் டீம் எப்படி?”

‘நான் கேட்ட மாதிரி நல்ல ஒரு டீமைக் கொடுத்த அதர்வாவுக்கு நன்றி சொல்லணும். பாடல்கள்லேயும் சரி, பின்னணி இசைலேயும் சரி, யுவன் ஷங்கர் ராஜா தி பெஸ்ட் கொடுத்திருக்கார். பீட்சா, ஆம்பள, எனக்குள் ஒருவன் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணின கோபி அமர்நாத், இதுல கேமரா. பிரவிண் எடிட்டிங். என்னோட ரைட்டர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், வசனங்களை எழுதியிருக்கார். திலீப் சுப்பராயன் ஸ்டன்ட். இன்னும் பட்டியல் நீளுது.”

- ஜியா