DEADPOOL 2



காமெடி சூப்பர் ஹீரோ!

ஹாலிவுட்டையே தன்னுடைய அதகள காமெடிகளால் அலற அடித்துக் கொண்டிருக்கும் ‘டெட்பூல்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. காதில் முழம் முழமாக சுத்தப்படும் பூவைப்பற்றிக் கவலைப்படாமல் ஆக்‌ஷனையும், காமெடியையும் ரசிப்பீர்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு ‘டெட்பூல்’ பாருங்கள்.

வேட் வில்சன், அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப்படை ஒன்றில் பணிபுரியும் சோம்பேறி. கொடுக்கிற வேலை அனைத்தையுமே எடக்குமடக்கான செயல்களால் சொதப்பி விடுவான். ‘ஒரு மாதிரி’ பெண்ணான வனேசாவைக் கண்டதுமே காதலில் விழுகிறான். இவனுடைய தொல்லை பொறுக்காமல் ஒருவழியாக அவனுடைய காதலை ஏற்றுக் கொள்கிறாள்.

அந்த மகிழ்ச்சியை வேட் கொண்டாட முடியாத வகையில், அவனுக்கு கேன்சர் வந்துவிடுகிறது. தான் கேன்சரால் இறக்கப் போகிறோம் என்பதை காதலி தாங்கமாட்டாள் என்று நினைத்து அவளைவிட்டுப் பிரிகிறான்.கேன்சரைக் குணப்படுத்துகிறோம் என்று கூறி இவனை வைத்து வேறு சோதனைகளை சிலர் செய்கிறார்கள். அந்தச் சோதனையில் இவனுக்கு சில சக்திகள் பிறக்கின்றன.

கேன்சர் குணமாகிறது. எனினும் முகம் முழுக்க எரிந்தது மாதிரி தழும்புகளும் உருவாகின்றன. சராசரி மனிதனாக அதன் பிறகு வாழமுடியாத வேட் வில்சன், தன்னுடைய பெயரை ‘டெட்பூல்’ (மரணக் குளம்) என்று மாற்றிக் கொண்டு செய்யும் சாகசங்கள்தான் டெட்பூல் வரிசை திரைப்படங்கள்.

இரண்டாம் பாகத்தின் தொடக்கத்தில் அவனுடைய காதலி வனேசா, டெட்பூலைத் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறாள். அப்போது திடீரென டெட்பூலின் எதிரி ஒருவன் இவன் மீது தாக்குதல் தொடுக்க, அதில் எதிர்பாராவிதமாக வனேசா மரணமடைகிறாள். காதலியைப் பிரிந்த துக்கத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறான் டெட்பூல்.

ஆனால் -அவனுக்குள் இருக்கும் அமானுஷ்ய சக்தியால் அவன் உயிர் துறக்க முடியவில்லை. ‘எக்ஸ்-மென்’ என்கிற சூப்பர்ஹீரோ குழுவில் வலுக்கட்டாயமாக இவன் சேர்க்கப்பட்டு, அநீதிக்கு எதிராகப் போராட கட்டாயப்படுத்தப்படுகிறான். ‘ஃபயர் பீஸ்ட்’ என்கிற சிறுவன், அவனை அறியாமலேயே செய்யும் குழப்பங்களை அடக்க டெட்பூல், தன்னுடைய எக்ஸ்-மென் குழுவினருடன் இணைந்து களமிறங்குகிறான். இதனால் விளையும் காமெடி கபடிதான் ‘டெட்பூல்-2’.

தமிழில் மிகச்சிறப்பாக டப்பிங் செய்யப்பட்டிருப்பதால், தமிழகமெங்கும் ஆங்கிலம் அறியாத மக்களும்கூட பார்த்து ரசிக்க முடிகிறது. ‘டெட்பூல்’ என்கிற கதாபாத்திரத்தின் சிறப்பே பேசிப்பேசி பிளேடு போட்டு கழுத்தறுப்பான் என்பதுதான்.

அவன் போடும் மொக்கையும், சொதப்பல் சாகஸங்களும் குழந்தைகளைக் கவர்கின்றன. பெரியவர்களும் ‘டெட்பூல்’ பார்க்கும்போது குழந்தைகளாக மாறுகின்றனர். இரண்டு மணி நேர காமெடி ரோலர் கோஸ்டரில் பயணித்தது போன்ற உணர்வை இந்தப் படம் தருகிறது.