காளி



காலத்தில் பின்நோக்கி பயணிக்கும் காளி!

அமெரிக்காவில் புகழ்பெற்ற மருத்துவர் விஜய் ஆண்டனி. அடிக்கடி இவருக்கு ஒரு வித்தியாசமான கனவு வருகிறது. அந்தக் கனவில் பாம்பு, மாடு, குழந்தையென்று அவருக்கு சம்பந்தமேயில்லாத காட்சிகள் வருகின்றன. இந்நிலையில் பெற்றோர் என்று தான் கருதிக் கொண்டவர்கள் தன்னை வளர்த்தவர்கள்தானே தவிர, பெற்றவர்கள் அல்ல என்கிற உண்மையை அறிகிறார்.

தன்னைப் பெற்றவர்களைத் தேடி கிராமத்துக்கு வருகிறார். அந்த கிராமத்தில் இருப்பவர்களின் ரத்த மாதிரியை எடுத்து அவர்களது டிஎன்ஏவோடு தன்னுடைய டிஎன்ஏவை ஒப்பிட்டுப் பார்த்து தன் பிறப்பு ரகசியத்தைத் தெரிந்துக்கொள்ள முயற்சிக்கிறார். தன்னைப் பற்றிய உண்மைகளை விஜய் ஆண்டனி தெரிந்துகொள்ள முடிந்ததா என்பதே மீதிக்கதை.

ஏற்றுக்கொண்ட வேடத்துக்காக தன்னை முழுமையாக மாற்றிக்கொள்வதே விஜய் ஆண்டனி பாணி. அது ‘காளி’யிலும் தொடர்கிறது. நான்கு கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களுக்கு நடிப்பு விருந்து போடுகிறார். மனிதாபிமானமிக்க டாக்டர், கல்லூரி மாணவர், கொள்ளைக்காரன், பாதிரியார் என்று அவர் ஏற்ற வேடங்கள் அத்தனைக்கும் நியாயம் சேர்க்கிறார். மதுபானக்கடை சண்டைக் காட்சியில் அனல் கிளப்புகிறார்.

யோகிபாபு வழக்கம்போல சிரிப்பு வெடி. சுட்டித்தனமான பெண் பாத்திரத்தில் வரும் அஞ்சலி, விஜய் ஆண்டனிக்கு மருந்து தடவும் காட்சியில் ரசிகர்களைக் கிறங்க வைக்கிறார். தாழ்த்தப்பட்ட பெண் கதாபாத்திரத்தில் முத்திரை பதிக்கிறார் சுனைனா.

ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகிய மற்ற இரண்டு ஹீரோயின்களும் சிறப்பான நடிப்பிலும், களையான அழகிலும் கவர்கிறார்கள். நாசர், ஜெயப்பிரகாஷ், மதுசூதன் ராவ், வேல.ராமமூர்த்தி, ஆர்.கே.சுரேஷ் என்று அனுபவ நடிகர்களின் பங்களிப்பும் ‘காளி’யின் பலம்.

1980, 2018 என்று இருவேறு காலக்கட்ட திரைக்கதைக்கு ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவும், விஜய் ஆண்டனியின் இசையும் நம்பகத்தன்மையை ஏற்படுத்துகின்றன. மதன் கார்க்கியின் ‘மனுஷா வா’ பாட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை கீதமாக ஒலிக்கிறது.

“உடனே ஓக்கே சொல்லுற பொண்ணு விட்டுட்டு போயிடுவா, சுத்தவிட்டு ஓக்கே சொல்லுற பொண்ணுதான் கூட இருப்பா” போன்ற வசனங்கள் அபாரம்.மிகவும் குழப்பமான ஒரு கதையை தெளிவான நீரோட்டம் போல சொல்லியிருப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் பெண் இயக்குநர் கிருத்திகா உதயநிதி.