18.05.2009



நூற்றாண்டின் மிகப்பெரிய அவலம்!

இலங்கையில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின்போது நம் தொப்புள்கொடி உறவுகள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட அவலத்தை துணிச்சலாக சினிமாவாக்கி இருக்கிறார்கள்.தன்யா, சித்தியின் அரவணைப்பில் வளர்கிறார். படிப்பில் படுசுட்டி. தாயகத்தின் அவலநிலையைக் கருதி ஓர் இயக்கத்தில் இணைந்து போராளியாகி இருக்கிறார்.

இதய பலகீனம் கொண்ட அவரை களத்துக்கு போர் புரிய அனுப்பாமல், தங்களுடைய மீடியா துறையில் சேர்த்துக் கொள்கிறது இயக்கம். சக போராளி ஒருவரை காதலித்து மணந்து, ஒரு குழந்தைக்கும் தாயாகிறார். 18-05-2009 அன்று அவருக்கு என்ன ஆனது என்பதுதான் கல் மனதையும் கலங்கடிக்கும் கதை.

இலங்கையில் ஒரு போராளிக்கு நிகழ்ந்த உண்மைக் கதையை அப்படியே படமாக்கி இருக்கிறார்கள். தமிழ்ச்செல்வி கதாபாத்திரத்தில் தன்யா துணிச்சலாக நடித்திருக்கிறார். இந்நூற்றாண்டின் மிகப்பெரிய சோகத்துக்கு தன்னுடைய பின்னணி இசையின் மூலம் மேலும் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்துகிறார் இளையராஜா.

‘எத்தனை எத்தனை கொடுமைகள்’ பாட்டு கண்களைக் கசியவைக்கிறது.நடந்த கொடுமைகளை எதிர்காலத் தலைமுறைகளுக்கு சொல்லியாக வேண்டும் என்கிற கடமையை மேற்கொண்ட இயக்குநர் கு.கணேசன் பாராட்டுக்குரியவர்.