யானையை பானைக்குள்ளே அடைச்சிருக்கேன்!



“எங்க படத்தோட டிரைலரைப் பார்த்தீங்களா சார்? ‘காலா’ ஃபீவர்லே பார்த்திருக்க மாட்டீங்க. எனக்காக ஒருமுறை பாருங்க. ‘காலா’, ‘விஸ்வரூபம்-2’, ‘தமிழ்ப்படம் 2.0’, ‘சிங்கம்-2’ன்னு பெரிய படங்களோட டாக் இணையத்துலே பட்டையைக் கிளப்பிக்கிட்டிருந்த நேரத்திலும் சோஷியல் மீடியா ஆட்கள் எங்களுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கொடுத்திருக்காங்க.

‘என்னோடு நீ இருந்தால்’ படத்துக்கு சென்ஸாரும் ‘யூ’ சான்றிதழ் கொடுத்திருக்கு” என்று ‘நீட்’ தேர்வில் பாஸ் ஆன மாணவன் மாதிரி உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் அறிமுக இயக்குநர் மு.ரா.சத்யா. இயக்கம் மட்டுமின்றி ஹீரோவாகவும் இவரே களமிறங்கியிருக்கிறார்.

“உங்க லுக்குக்கு ஆக்‌ஷன் சப்ஜெக்ட்தான் அமர்க்களமா இருக்கும். ஆனா, படத்தோட டைட்டிலைப் பார்த்தா காதல் மாதிரியிருக்கே?”

“படத்துலே காதலும் இருக்கு; காதல் மட்டுமே இல்லை. எங்க படம் ஆக்சுவலா ஒரு ரொமாண்டிக் திரில்லர். படத்தோட ஹீரோ எதிர்கொள்கிற நெருக்கடியை எல்லோருமே ஏதோ ஒரு கட்டத்தில் எதிர்கொண்டுதான் இருப்போம். அந்த நெருக்கடியின் பாதிப்பு என்ன, அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதுதான் படத்தோட கரு. எல்லாத் தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வினை கமர்ஷியல் ஃபார்முலாவில் சொல்லியிருக்கேன்.”

“படத்துலே என்ன புதுமையை எதிர்பார்க்கலாம்?”

“பெரிய படங்களுக்கே இப்போ தியேட்டர் கிடைக்கிறதில்லை. கிடைச்சாலும் பெருசா ஓப்பனிங் இல்லை. சினிமாவோட நிலைமை கொஞ்சம் கவலைக்கிடமாகத்தான் இருக்கு. என்னோட படம் மற்றப் படங்களில் இருந்து கதைக்கரு அடிப்படையில்தான் வித்தியாசப்படுது. இந்தக் கதைக்கு பெரிய நடிகர்கள் தேவையில்லை. பண்ணினாலும் அதனால் பிரயோசனம் இல்லை.

‘மைனா’, ‘அருவி’ போன்ற படங்களின் திரைக்கதை புதுமையை நீங்க ‘என்னோடு நீ இருந்தால்’  படத்திலும் எதிர்பார்க்கலாம். அப்புறம் ரேடியோவில் பாட்டு கேட்கிறவங்க, ‘பழைய பாட்டு மாதிரி வராது சார்’ என்கிறார்கள். அந்த நோஸ்டால்ஜியாவை திருப்திப்படுத்தும் விதமா நம்ம படத்துலே பாட்டெல்லாம் அருமையா வந்திருக்கு.

இந்தப் படத்தோட புதுமை என்னன்னா, நான் சொல்லியிருக்கிற கருத்துதான். இது ஷங்கர் பாணியில் நூறு கோடி செலவு பண்ணி எடுக்க வேண்டிய சப்ஜெக்ட். யானையை பானைக்குள் அடைச்சமாதிரி மிகப்பெரிய மெசேஜை சின்ன பட்ஜெட் படத்தில் அடக்கியிருக்கேன்.”
“சினிமாவில் உங்க அனுபவம்?”

“ஓப்பனா சொல்லணும்னா நான் யாரிடமும் வேலை பார்க்காம நேரடியா டைரக்டர் ஆகியிருக்கேன். என்னை சினிமாத்துறைக்கு அழைத்து வந்தது மகேந்திரன் சார் இயக்கிய ‘உதிரிப்பூக்கள்’ படம்தான் என்று சொல்லலாம். அந்தப் படத்தோட பாதிப்பில்தான் சினிமாவுக்கே வந்தேன். அப்படத்தின் திரைக்கதை புத்தகத்தை திரும்பத் திரும்பப் படிச்சிதான் திரைக்கதை எழுதவே கத்துக்கிட்டேன். கே.பாக்யராஜ், சுஜாதா, பாலகுமாரன் போன்றோரின் சினிமா அனுபவங்களை எழுத்துகளில் படிச்சிதான் நான் அனுபவம் பெற்றேன்.

என்னை இப்போ சினிமாக்காரனாதான் உங்களுக்கு தெரியுது. அதுக்கு முன்னாடி எழுத்தாளரா வாசகர்களுக்கு தெரியும். ‘உணராத உண்மைகள்’, ‘மனதை புரட்டு மதுவை விரட்டு’, ‘இளைஞனே இடிந்துவிடாதே’ உள்ளிட்ட ஐந்தாறு புத்தகங்களை எழுதியிருக்கேன். இந்தப் புத்தகங்களை வாசித்த இளைஞர்களுக்கு நல்ல தன்னம்பிக்கை கிடைச்சிருக்கு. ஒரு படைப்புன்னா அதை நுகர்கிறவருக்கு ஏதோ ஒரு பயன் இருக்கணும் என்பதுதான் என் பாலிசி. என்னோட நூல்கள் செய்த வேலையை என்னோட படமும் செய்யும். ‘என்னோடு நீ இருந்தால்’ படத்தின் கதையைப் போலவே ஒருவரின் நிஜவாழ்க்கையில் நடந்தது. அவருடைய அனுபவங்களைக் கேட்டு, அவற்றையெல்லாம் காட்சியாக வைத்திருக்கிறேன்.”

“நீங்களே ஹீரோ ஆகணும்னு முடிவெடுத்தது கொஞ்சம் ரிஸ்க்தான் இல்லையா?”

“ஹீரோவாகணும் என்கிற திட்டமெல்லாம் எனக்கு கனவில்கூட வந்ததில்லை. இயக்குநராகணும் என்பதுதான் என்னோட லட்சியம். இந்தக் கதையைச் சொல்லி சில முன்னணி ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்டேன். கதை பிடிச்சிருந்தாலும் டேட் பிரச்சினை, ரேட் பிரச்சினையால் அவங்களால் நடிக்க முடியலை. ஒருத்தர் மட்டும் ஒப்புக் கொண்டார்.

ஆனா, திடீருன்னு படப்பிடிப்பு சமயத்தில் ஜகா வாங்கிட்டார். இதுக்கு அப்புறம் கூத்துப்பட்டறை மாதிரி இடங்களில் என்னோட ஹீரோவை வலைவீசி தேடிக்கிட்டிருந்தேன். ஷூட்டிங் போற தேதி வேற நெருங்கிட்டே இருந்தது. ரொம்ப டென்ஷனா இருந்ததைப் பார்த்த என்னோட சகாக்கள், ‘நீங்களே நடிச்சிடுங்க’ன்னு வற்புறுத்த ஆரம்பிச்சாங்க. வேறு வழியில்லாமதான் ஹீரோ ஆனேன். ஆக்சிடெண்ட்தான்னாலும் சின்சியராவே செஞ்சிருக்கேன். ரஷ் பார்த்த எல்லாருமே, முதல் படம் மாதிரியே இல்லை, பின்னியிருக்கீங்கன்னு பாராட்டினாங்க. சூழ்நிலைதான் என்னை ஹீரோவா ஆக்கிச்சின்னுகூட சொல்லலாம்.”

“ஒரே நேரத்தில் நடிப்பு, டைரக்‌ஷன்னு இறங்கினா கஷ்டம்தான்...”“உண்மை. படத்தோட தயாரிப்பாளரான என் மனைவி யசோதாதான் அந்த சிரமத்தை குறைச்சாங்க. படப்பிடிப்புக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் அவங்களே பார்த்துக்கிட்டதாலே, டைரக்டரா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக முடிஞ்சது. எனக்கு மெஸ் சாப்பாடு ஒத்துவராது. அவங்களே வீட்டுலே இருந்து சமைச்சி படப்பிடிப்புத் தளத்துக்கு கொண்டுவந்து கொடுத்து, மற்ற வேலைகளையும் மேற்பார்வை பார்த்து இந்தப் படத்தோட அஸ்திவாரமா இருந்திருக்காங்க. என் மனைவிதான் என்னோட பலமே.”
“புதுமுகங்களுக்கு தியேட்டரில் ஓப்பனிங் கிடைக்காதே?”

“ஹீரோ, ஹீரோயின்தான் புதுமுகங்கள். ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, ரோகிணி, அஜய்ரத்னம், வையாபுரி, பிளாக் பாண்டி, அழகு, மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், நெல்லைசிவா என்று அனுபவ நட்சத்திரங்கள் ஸ்க்ரீன் முழுக்க தெரிவாங்க. முதல் படம் செய்யுற டைரக்டர்னு நினைக்காமே, இவங்க அத்தனை பேருமே கொடுத்த ஒத்துழைப்புதான் குறித்த காலத்தில் படத்தை முடித்து ரிலீஸ் வரைக்கும் வர்றதுக்குக் காரணம். அதிலும் ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி சாரிடம் எத்தனை டேக் கேட்டாலும், முகம் சுளிக்காம திரும்பத் திரும்ப செஞ்சு கொடுப்பார்.

என்னோட வொர்க்கிங் ஸ்டைல் செம ஸ்பீடா இருக்கிறதா அஜய்ரத்னம் சொன்னார். ரொம்ப தெளிவா குழப்பமில்லாமே படமெடுக்கிறீங்கன்னு ரோகிணி மேடம் சொன்னாங்க. நாயகி மானசா, இசையமைப்பாளர் கே.கே, ஒளிப்பதிவாளர் நாக சரவணன், எடிட்டர் ராஜ்கீர்த்தி ஆகியோர் இந்தப் படத்துக்கு பெரிய பலம். இவர்களுடைய உழைப்பு பேசப்படும். எங்களோட உழைப்புக்கான மரியாதையை ரசிகர்கள் கொடுப்பாங்கன்னு எதிர்பார்க்கிறேன்.”

“இந்தப் படம் எடுத்த அனுபவம் மகிழ்வைத் தந்ததா?”

“அப்படின்னு சொல்ல முடியாது. படம் எடுத்தது மகிழ்ச்சிதான். அதை ரிலீஸ் பண்றதுக்குள்ளே தாவூ தீருது. முன்னாடியெல்லாம் வாரத்துக்கு பத்து படம் ரிலீஸ் ஆகும். இப்போ ரெண்டு, மூணு ரிலீஸ் ஆனாலே அதிகம். ஆனா, அப்போ எல்லாப் படத்துக்கும் அந்தந்த படத்தோட தரத்துக்கு ஏற்ப தியேட்டர் கிடைச்சிக்கிட்டுதான் இருந்தது.

இப்போ, சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது குதிரைக்கொம்பு ஆயிடிச்சி. புதுமுகம் என்பதால் படத்தைத் திரையிட ஆர்வம் காட்டலைன்னா, இந்தத் துறைக்குத் திறமையாளர்கள் வருவது குறைஞ்சிடும். பழைய ஆட்களே எவ்வளவு நாளைக்குத்தான் இண்டஸ்ட்ரியை தொடர்ந்து நடத்திக்கிட்டிருக்க முடியும்?

முன்னாடியெல்லாம் படம் தயாரிக்க கிராமங்களிலிருந்து ஆர்வமா முன்வருவாங்க. இப்போ அதுமாதிரி ஆட்கள் குறைஞ்சுட்டாங்க. படத்தயாரிப்பு குறைஞ்சுட்டதாலே தொழில்நுட்பப் பணியாளர்கள் நிறைய பேர் வேற வேற வேலைகளுக்கு போயிட்டாங்க. நீடிக்கிறவங்களுக்கும் போதுமான வருமானம் கிடைக்கிறதில்லை. பெரிய போராட்டத்துக்கு அப்புறம்தான் இந்தப் படத்தை ரிலீஸ் பண்றேன். மகிழ்ச்சியா இருக்கேன்னு சொல்ல முடியாது. ஆனா, ரிலீஸ் பண்ண முடியுது என்பதால் நிம்மதியா இருக்கேன்.”

“முன்னணி நடிகர்களை இயக்கும் எண்ணம் இருக்கா?”

“அடுத்த திட்டம் அதுதான். நான் ஒரு திறமையான இயக்குநர் என்பதை ஒரு முழுநீளப் படம் எடுத்து நிரூபிச்சிருக்கேன். இந்தப் படம் வெளியான பிறகு நான் தொடர்பு  கொள்ளக்கூடிய நடிகர்கள், என்னிடம் எந்தவித சந்தேகமும் இல்லாம கதை கேட்பாங்க. அதுக்கான அடித்தளத்தை சொந்த செலவிலேயே அமைக்க வேண்டியதாயிடிச்சி...”

- சுரேஷ்ராஜா