காலாவின் கண்கள்!



இந்திய சினிமாவில் தமிழ் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு தனி மவுசும், மரியாதையும் உண்டு. அவ்வகையில் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகே எதிர்பார்த்த ‘காலா’வுக்கு ஒளிப்பதிவு செய்ததன் மூலம், அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார் முரளி.ஜி. ‘கபாலி’க்குப் பிறகு மீண்டும் ரஜினி - ரஞ்சித் காம்பினேஷனில் ‘காலா’வில் பணிபுரிந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“ரஜினியோடு அடுத்தடுத்து ரெண்டு படம். எப்படி ஃபீல் பண்றீங்க?”

“சத்தியமா எதிர்பார்க்கவே இல்லை. ‘கபாலி’யில் எங்க வேலை அவருக்கு கொடுத்த நம்பிக்கைதான், மீண்டும் ‘காலா’விலும் பணிபுரியக்கூடிய வாய்ப்பை கொடுத்திருக்கு. அந்த நம்பிக்கையை ஒரே ஒரு சதவிகிதம்கூட குறைக்கக்கூடாதுன்னு வெறியோடு வேலை பார்த்தோம்.

சமூகத்துக்கு அவசியமான கருத்துகள் போய்ச் சேரவேண்டிய மக்களுக்கு ரஜினி சார் மூலமா போயிருக்கு. இயக்குநர் ரஞ்சித்தும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து வேலை பார்த்திருக்கிறார். அடித்தட்டு மக்களின் உணர்வுகளையும், வாழ்வியலையும் இவ்வளவு துல்லியமாக படம் பிடிக்க முடிஞ்சது மகிழ்ச்சி.

ரஜினி சாருடன் முதலில் இணைஞ்ச ‘கபாலி’ படத்தைவிட இதில் சுதந்திரமா வேலை பார்த்தேன். தொழில்ரீதியாக ரஜினி சாருக்கும் எனக்கும் மிகப் பெரிய இடைவெளி உண்டு. அவர் மோஸ்ட் சீனியர் ஆக்டர். ஏராளமான படங்களில் நடித்து சூப்பர் ஸ்டார் என்று பட்டம் வாங்கியவர். அவரோட அனுபவத்தின் ஆண்டுகள்கூட எனக்கு வயசு இல்லை. அவரை எப்படி ஹேண்டில் பண்ணப் போகிறோம் என்ற கேள்வி படப்பிடிப்புக்கு முன் இருந்தது. முதல் நாள் படப்பிடிப்பிலேயே அந்த இடைவெளியை உடைத்துவிட்டார்.

எப்பவுமே முதல்பட நடிகர் போல்தான் படப்பிடிப்புக்கு வருவார். அறிமுக நடிகரின் ஆர்வத்தோடுதான் ஒவ்வொரு காட்சியையும் செய்வார். அவருடைய அர்ப்பணிப்பு, தொழில் பக்தி எங்களுக்கு எனர்ஜியைக் கொடுத்தது. நான் சொல்லும் இந்த செளகரியங்கள் எல்லாம் எங்களுக்கு முதல் படத்திலேயே கிடைத்துவிட்டது. ‘காலா’வில் இரண்டு மடங்காகக் கிடைத்தது. சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் அவரவர் வேலையை அவரவர் சுதந்திரமா செய்ய முடிஞ்சது.

ரஜினி சாரைப் பொறுத்தவரை எப்போதும் தன்னை இயக்குநரின் நடிகராக வெளிப்படுத்தக்கூடியவர். 150க்கும் மேற்பட்ட கேமராமேன்களிடம் வேலை பார்த்துள்ளார். என்னைப் பொறுத்தவரை அவருடைய டெடிகேஷன் வியப்பாக இருந்தது. நான் லைட்டிங் பண்ணும்வரை பொறுமையாக இருப்பார். இப்போதும் சினிமா மீதுள்ள பேஷன் குறையாமல் வேலை பார்க்கிறார். அவருடைய உழைப்பு அபரிமிதமானது. அவருடன் வேலை பார்த்த அனுபவம் சினிமாவுக்கு மட்டுமில்லாமல், வாழ்க்கைக்கே ஒரு பாடமாக இருந்தது. தொழிலாளர்கள், டெக்னீஷியன்களிடம் சூப்பர் ஸ்டார் என்ற இமேஜ் இல்லாமல் இறங்கி வந்து பேசுவார். ‘நீங்கள் நினைத்த மாதிரி எடுங்க’ன்னு திரும்பத் திரும்ப வலியுறுத்திக்கிட்டே இருந்தார்.”

“ஒரு கேமராமேனா ‘காலா’வில் எந்தவிதமான சவாலை எதிர்கொண்டீங்க?”

“தாராவியை நம்பகத் தன்மையுடன் காட்ட வேண்டும். அதுதான் எங்களோட ஒரே குறிக்கோளா இருந்தது. இதுக்காக ஆர்ட் டைரக்டரும், நானும் ரொம்ப துல்லியமாக திட்டமிட்டு வேலை பார்த்தோம். குறிப்பா சொல்லணும்னா, கிளைமாக்ஸ் காட்சியை எடுத்தது சவால் என்பதைவிட நெருக்கடியா இருந்ததுனு சொல்லலாம். இப்படியொரு கிளைமேக்ஸை இதுவரை இந்திய சினிமாவில் பார்த்ததில்லைன்னு எல்லோரும் பாராட்டுறாங்க. எங்க டீமில் இருந்த எல்லாருடைய ஒத்துழைப்பால்தான் அது சாத்தியமானது.”

“ரஜினி என்கிற மாஸ் ஸ்டார் நடிக்கிற படத்தில் கேமராமேனுக்கு எந்தளவு ஸ்கோப் கிடைக்குது?”

“எனக்கு யதார்த்தமான கதைகளில் வேலை செய்யத்தான் பிடிக்கும். நான் வேலை செய்த படத்தில் ‘உங்க கேமரா ஒர்க் நல்லா இருந்தது’ என்று சொன்னால் வருத்தப்படுவேன். என் வேலையை யாரும் கண்டுபிடிக்கக் கூடாது. அதுதான் கேமராமேன் கதைக்கு தரும் நேர்மை. ரஜினி மாதிரியான பெரிய ஹீரோ படத்துக்கு எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

அதை குறைக்காமலும் இயக்குநரின் கதையை சிதைக்காமலும் பன்ணவேண்டும் என்று நினைப்பேன். ஒருவரை உயர்த்திக்காட்டுவதற்கு என் வேலை தனியாகத் தெரியக்கூடாது. இரு தரப்பையும் திருப்திப்படுத்த வேண்டும். அப்படிப் பார்க்கும்போது ‘காலா’வில் எனக்கான ஸ்பேஸ் அதிகம் இருந்தது.”
“ரஞ்சித்?”

“அவருடன் ‘மெட்ராஸ்’ படத்திலிருந்தே என்னோட கூட்டணி வலுவாக உள்ளது. சமூகரீதியான நேர்மையான பார்வை, யாருக்கும் அஞ்சாத வலிமையான கருத்துகள் கொண்டவர் என்பதால் அவருடன் என்னை ரொம்ப நெருக்கமா உணரமுடியுது. ஒரு டெக்னீஷியன் என்ற அடையாளம் மட்டுமில்லாமல் சினிமா மூலம் மக்களுக்கு என்ன சொல்ல முடியும் என்ற பார்வைதான் எங்களை சேர்த்துள்ளது. ரஞ்சித்திடம் நான் வியந்து பார்க்கும் விஷயம், பணம், புகழ் தாண்டி இந்த மீடியத்தில் சமூக சிக்கல்களுக்காக தன் குரலை ஒலிக்கவிடுகிறார்.

சமூகக் கருத்துகளை கடைசி ரசிகன்வரை கொண்டு போய் சேர்க்கிறார். அவர் நினைத்திருந்தால் வேற ரூட்ல படம் பண்ணலாம். ஆனால் ஒரு குடிமகனாக தன் மக்களுக்காக தன் குரல் ஒலிக்க வேண்டும் என்று நினைக்கிறார். பணம் மட்டும் நோக்கமாக இல்லாமல் படம் பண்ணுகிறார். அடித்தட்டு மக்களின் வலியை எல்லா தரப்புக்கும் உணர்த்துகிறார். இது ஒவ்வொரு கலைஞனுக்கும் இருக்கவேண்டிய உணர்வு. அது ரஞ்சித்திடம் இருக்கிறது.”

“மீண்டும் ரஜினியோடு படம் பண்ணுவதாக பேச்சு அடிபடுகிறதே?”

“எனக்கே தெரியலை. ஒரு படம் பண்றப்போ, அடுத்த படவாய்ப்பைப் பற்றியெல்லாம் யோசிக்க மாட்டேன். நான் கதை பிடிச்சிருந்தாதான் வேலை செய்ய ஒப்புக்கறேன். ‘காலா’ இப்போதுதான் ரிலீஸாகியுள்ளது. அடுத்த படத்தைப் பற்றி இன்னும் யோசிக்கக்கூட இல்லை.”
“ஒளிப்பதிவாளர் பார்க்க வேண்டியது விஷுவல் பியூட்டியா, டெக்னாலஜியா?”

“யதார்த்தமான கதைகள் தனக்கு வேண்டிய அழகை தானாகவே வடிவமைத்துக் கொள்ளும். அவ்வகையில் யதார்த்தமே அழகுதான். டெக்னாலஜியை வலுவாகக் காண்பிக்க வேண்டும், ரசிகர்களிடம் கெத்து காட்டவேண்டும் என்று நினைத்தால் அது தப்பான ரிசல்ட்டைக் கொடுத்துடும். அழகோ, டெக்னாலஜியோ அது கதையின் தேவையைப் பொறுத்து மட்டும்தான் இருக்க வேண்டும்.

யதார்த்தமான கதைக்கு ஒளிப்பதிவு யதார்த்தமாகத்தான் இருக்கவேண்டும். அதைத் தாண்டி பண்ணும்போது டிராமாவா இருக்கும். கேமரா கோணங்களை எளிமையான கோணங்களில் உணர்த்த வேண்டும். மற்றபடி விஷுவல் பியூட்டி காட்டப்போகிறேன் என்று நினைத்தால் குடிசை வீட்டில் ரவிவர்மாவின் ஒவியங்களை மாட்டி வைத்த மாதிரி இருக்கும். குடிசையில் கயிற்றில் துணியை கலைச்சிப் போட்டிருக்கிறதே அழகுதான்.”
“சினிமா டிஜிட்டலுக்கு மாறியது வரமா, சாபமா?”

“இதுபற்றி உலகளவிலேயே பெரிய பெரிய ஆட்களெல்லாம் விவாதிச்சிக்கிட்டு இருக்காங்க. என்னைப் பொறுத்தவரை கண்டிப்பா வரம்தான். சாபம் இல்லை. டிஜிட்டல் வளர்ச்சி சினிமாவை எளிமைப்படுத்துவதுடன் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்கிறது. ஒரே விஷயத்தை வைத்துக் கொண்டு குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டி மக்களை ஏமாற்ற முடியாது. இப்போது எல்லாரிடமும் செல்போன் வசதி வந்துவிட்டது.

செல்போன் வைத்திருப்பவர் நினைத்தால் படம் எடுக்க முடியும். ஒரே விஷயம் கலாபூர்வமாக எடுக்க வேண்டும். அதன் தாக்கமாக குறும்படங்கள் மூலம் புதிய முயற்சிகள் வருகிறது. பெரிய நிறுவனங்களிடமிருந்து சினிமா சாமானியன் கைக்கு வந்துள்ளது. அது டெக்னாலஜியால் சாத்தியமான விஷயம். வருங்காலங்களில் டிஜிட்டல் இன்னும் எளிமையாக மாறலாம். நாமும் அடுத்த லெவலுக்கு போகிறோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

 யார் வேண்டுமானாலும் சினிமாவுக்கு வரலாம் என்பது டெக்னாலஜியின் வெற்றி. டிஜிட்டலில் சின்ன பட்ஜெட்டில் கைக்கு அடக்கமாக படம் பண்ணலாம். பிலிம்  கேமரா இருந்தபோது பிராசஸ் அதிகம். இப்போது நாலைந்து டேக் எடுத்து எடிட் பண்ணி தேவையானதைப் பயன்படுத்தி சரியாகக் கொடுக்க முடிகிறது. கேமராவுக்கான செலவினங்கள் குறைந்துள்ளது. அந்த வகையில் டிஜிட்டல் வரவு வரமே.”

- சுரேஷ்ராஜா