நடிகரான உதவி இயக்குநர்!



இயக்குநர்கள் நடிகர்களாக மாறுவது கோடம்பாக்கத்தில் வழக்கம். அந்த வரிசையில் உதவி இயக்குநர் மணவை செந்தில் படம் இயக்குவதற்கு முன்பே நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’, ‘திறப்புவிழா’ உட்பட ஏராளமான படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்.

சமீபத்தில் வெளியான ‘இட்லி’ படத்தில் இவருடைய குணச்சித்திர நடிப்புக்கு பல தரப்புகளில் இருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.‘‘புதுக்கோட்டை மாவட்டம் மணப்பாறை சொந்த ஊர். படிக்கும்போதே வெறித்தனமாக சினிமா பார்ப்பேன். உதவி இயக்குநர்கள் சந்திக்கும் போராட்டங்களைக் கடந்துதான் என்னால் உதவி இயக்குநராக சேர முடிந்தது.

என் வாழ்க்கையில் சந்தித்த ஏமாற்றங்களை நெகடிவ்வாகக் கருதாமல், ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு பாசிட்டிவ் எனர்ஜியுடன் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தேன். அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்ற பழமொழிக்கு ஏற்ப ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் உதவி இயக்குநர் வேலை கிடைத்தது.

அந்தப் படத்தில் ஹிட்டான ‘கட்டிங்கு கட்டிங்கு’ பாடலில் அதரவா, சூரி, மொட்ட ராஜேந்திரன் ஆகியோருடன் நடித்தேன். சமீபத்தில் வெளியான ‘இட்லி’ படத்தில் கல்பனா, கோவைசரளா, சரண்யா  பொன்வண்ணன், மனோபாலா, சித்ராலட்சுமனன் என்று ஜாம்பவான்களுடன் நடித்தபோது நடிகருக்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள முடிந்தது.

கோவை சரளா அம்மாவுடன் சண்டை போடும் காட்சியில் நடிக்க ஆரம்பத்தில் தயங்கினேன். ஆனால் கோவை சரளா அம்மாவின் எளிமையான அப்ரோச்சால்தான் என்னால் இயல்பாக நடிக்க முடிந்தது. ‘இட்லி’ பட அனுபவம் என் சினிமா வாழ்வில் மறக்க முடியாத அனுபமாக இருக்கும்.  

சமூகக் கருத்துக்களோடு கமர்ஷியல் படம் இயக்குவதுதான் என் லட்சியம். தரமான படம் இயக்குவது மட்டுமல்லாமல் நிறைய படங்களில் நடித்து சிறந்த நடிகர் என்று பெயர் வாங்குவதே எனது லட்சியம். இயல்பாகவே எனக்கு காமெடி சென்ஸ் அதிகம். இப்போது சில படங்களில் கேரக்டர் ரோலில் நடிக்க கமிட்டாகியுள்ளேன்.

அந்தப் படங்களிலும் எனக்கு காமெடி கலந்த வேடம்தான் கொடுத்திருக்கிறார்கள். ரோபோ சங்கர், யோகி பாபு வரிசையில் காமெடியனாகவும் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்கிறார் மணவை செந்தில்.

- எஸ்