ரஜினி,கமலுக்கே நான்தான் சீனியர்! கலாய்க்கிறார் கார்த்திக்



எண்பதுகளின், தொண்ணூறு களின் ஹேண்ட்ஸம் ஹீரோ கார்த்திக். அவரோடு ஹீரோயினாக நடிக்க அப்போது முன்னணி நடிகைகள் போட்டாபோட்டி போட்டார்கள். கார்த்திக் படமென்றாலே, தியேட்டர்களில் இளைஞர்கள் கூட்டம் அள்ளும். இப்போதுள்ள இளம் ஹீரோக்களும்கூட ‘மவுனராகம்’ கார்த்திக் மாதிரி ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்கிற விருப்பத்தோடு இருக்கிறவர்கள்தான்.

தனித்துவமான உடல்மொழி, ஹாலிவுட் நடிகர் மாதிரி வசன உச்சரிப்பு, அலட்டிக் கொள்ளாத நடிப்பு என்று கலக்கிக்கொண்டிருந்தவர் ஏனோ திடீரென அரசியலுக்கும் போனார். போன வேகத்திலேயே திரும்பியும் வந்திருக்கிறார். ‘சந்திரமவுலி’ மூலமாக அடுத்த இன்னிங்ஸை தொடங்கியிருப்பவருக்கு, இப்போது அவருடைய மகன் கவுதமே போட்டியாக வந்து நிற்கிறார். கவுதமோடு ‘சந்திரமவுலி’யில் ரேஸ் ஓடியவரை நிறுத்தி ஜாலியாக பேட்டியெடுத்தோம்.

“எப்படி இருக்கீங்க மிஸ்டர் சந்திரமவுலி?”

“ஏய் மேன். என்னைப் பார்த்தா வயசான சந்திரமவுலி மாதிரியா இருக்கு? ஐ ஆம் யங் ஆல்வேஸ். உடம்புக்குத்தான் மேன் வயசாவும், மனசுக்கு ஆவாது. நான் எப்பவுமே அதே ‘மவுன ராகம்’ கார்த்திக்தான்.”“முன்னாடி உங்களோட பிரபு, சத்யராஜுன்னு டபுள் ஹீரோ சப்ஜெக்டுலே நடிப்பாங்க. இப்போ உங்க மகனே உங்களோட நடிச்சிருக்காரே?”

“நானே எதிர்பார்க்கலை. கவுதம் வந்துதான் முதலில் கேட்டான். ‘டாடி, இந்த மாதிரி கதை. கதையை டைரக்டர் கிட்டே கேளுங்க. நீங்க நடிச்சா நல்லாருக்கும்னு ஃபீல் பண்ணுறாரு’ன்னான். ‘கதை புடிக்கலைன்னா நடிக்கமாட்டேன்’னுதான் ஆரம்பத்துலே பிகு பண்ணேன். ஆனா, எங்க டைரக்டர் திரு, கதையைச் சொல்லுறதுக்கு முன்னாடியே ‘மிஸ்டர் சந்திரமவுலி’ன்னு டைட்டிலைச் சொல்லி அசத்திட்டார்.

‘டைட்டிலே பிரமாதம், கதையைச் சொல்லுங்க’ன்னு கேட்டேன். கதை, டைட்டிலைவிட பிரமாதமாக இருந்துச்சி. டோண்ட் கேர் மைண்ட் செட் அப்பா கேரக்டருக்கு என்னைவிட வேற யாரு பொருத்தமாக இருப்பாங்க? அதுலேயும் என் பையனுக்கே அப்பாவா நடிக்கணும்னு கேட்டதுமே த்ரில்லா ஃபீல் பண்ணினேன்.”“கவுதம் என்ன சொல்றாரு?”

“எங்க குடும்பத்துலே மூணாம் தலைமுறை நடிகன். நான் ஹீரோவாகி நிறைய படங்களில் நடிச்சதைப் பார்க்க எங்கப்பாவுக்குத்தான் கொடுத்து வைக்கலை. அப்பா, எங்களையெல்லாம் அவரோட ஷூட்டிங்குக்குக்கூட அவ்வளவா கூப்பிட்டுக்கிட்டு போகமாட்டார். பாரதிராஜா சார் என்னை ஹீரோவாக்குறேன்னு சொன்னப்போ அப்பா அவ்வளவு சந்தோஷப்பட்டார்.

அவரோட சேர்ந்து நடிக்கணும்னு நான் விரும்பினேன், நடக்கலை. அது நடக்குறதுக்குள்ளே போய்ச் சேர்ந்துட்டார். அவர்கூட நடிக்கலையேங்கிற ஃபீல் எனக்கு இன்னிக்கு வரைக்கும் இருக்கு. அந்த ஃபீல் என் மகனுக்கு முப்பது வருஷம் கழிச்சி வரக்கூடாதுன்னு விரும்பினேன். கவுதமுக்கு என்னோட சேர்ந்து நடிச்சதில் ரொம்ப சந்தோஷம். எனக்கு கிடைக்காத சந்தோஷம் அவனுக்கு கிடைச்சிருக்குன்னு, எனக்கும் ரொம்ப சந்தோஷம். ஒரு அப்பா மகனுக்கும், மகன் அப்பாவுக்கும் சந்தோஷத்தைத் தவிர வேறென்ன பெருசா கொடுத்துட முடியும்?”

“உங்க வாய்ஸ் ரொம்ப தனித்துவமானது. வேணும்னே இங்கிலீஷ் மாதிரி தமிழை பேசுறீங்களா? இப்போ யூ-ட்யூப்லே உங்களை எவ்ளோ பேர் மிமிக்ரி பண்றாங்க தெரியுமா?”

“ஃபேமஸ் ஆனவங்களைத்தான் சார் மிமிக்ரி பண்ணுவாங்க. நான் ஃபேமஸ் என்பதால் செய்யுறாங்க. உங்களுக்கே தெரியும். ஆரம்பத்துலே நான் திருத்தமாகத்தான் பேசிக்கிட்டிருந்தேன். ‘அக்னி நட்சத்திரம்’ படத்துலே அந்தக் கேரக்டருக்கான ஸ்டைலுக்காக ஒரு டயலாக் மாடுலேஷன் யூஸ் பண்ணினேன். அப்புறம் ‘அமரன்’ படத்துக்கு ‘வெத்தல போட்ட சோக்குலே’ பாட்டை டிஃபரன்டா பாடினேன்.

ஒருமாதிரி வாயிலே வெத்தலையை ஒதுக்கிட்டு பேசுற மாதிரி, அந்த வசன உச்சரிப்பு ரசிகர்கள் மத்தியிலே நல்ல வரவேற்பை பெற்றுச்சி. அதனாலே எல்லா டைரக்டர்களுமே, அந்த மாதிரி பேசுங்கன்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. சினிமாவுக்காக அப்படி டப்பிங் பேசிப் பேசி இப்போ ரியல் லைஃபிலும்கூட அப்படித்தான் பேசிக்கிட்டிருக்கேன். இதுவும் நல்லாதானே இருக்கு?”

“நீங்க எப்பவுமே ஷூட்டிங்குக்கு லேட்டாகத்தான் வருவீங்கன்னு இன்னிக்கும் இண்டஸ்ட்ரியில் பேசிக்கிட்டிருக்காங்களே?”

“ஆமாம் சார். எங்கிட்டேயே கூட ஒரு டைரக்டர் வந்து ‘அந்தக் காலத்து ஹீரோங்க மாதிரி ஷூட்டிங்குக்கு லேட்டா வரக்கூடாது’ன்னு சொன்னாரு. ‘யோவ், அந்த கம்ப்ளைண்டே என் மேலேதான்’னு சொன்னேன். எனக்கே கூட நான் அப்போவெல்லாம் ஷூட்டிங்குக்கு லேட்டா போனேனோன்னு ஒரு மயக்கம் வந்துடிச்சி. எந்தப் படத்தோட ஷூட்டிங் என்னாலே தாமதமாச்சின்னு யாராவது சொன்னாங்கன்னா தேவலை.

அப்படியெல்லாம் நான் பண்ணியிருந்தா 150 படம் நடிச்சிருக்க முடியுமான்னு கொஞ்சம் யோசிங்க. ஒருசில நாள் லேட் ஆகியிருக்கலாம். அது எல்லாருக்குமே சகஜம்தான். ‘கார்த்திக்காலே இந்தப் படம் டிராப் ஆச்சி, எனக்கு நஷ்டம்’னு என்னை வெச்சி படமெடுத்த எந்த தயாரிப்பாளராவது சொல்ல முடியுமா? நான் பெரிய கம்பெனி, சின்ன கம்பெனின்னு தரம் பிரிச்சி நடிச்சவனில்லை.

என்னை வெச்சி படமெடுத்த எல்லா தயாரிப்பாளரையும் முதலாளியாகத்தான் பார்த்தேன். சில தயாரிப்பாளர்கள் ஃபைனான்ஸ் பிரச்சினையால் படத்தை டிராப் பண்ணிடுவாங்க. அதுக்கும் பழி என் தலையிலேதான் விழும். இப்போகூட ‘மிஸ்டர் சந்திரமவுலி’ வந்திருக்கு. ‘கார்த்திக், ஷூட்டிங்குக்கு லேட்டா வந்தாரா?’ன்னு டைரக்டர் திருவையோ, தயாரிப்பாளர் தனஞ்செயனையோ போய் கேளுங்க. வம்பு பேசறவங்க பேசிக்கிட்டேதான் இருப்பாங்க. அவங்களாலேயும், அவங்க பேச்சாலும் யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லை.”

“உங்க மகன் நடிச்ச முந்தைய படமான ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ பார்த்தீங்களா?”

“படம் நல்லா ஓடிச்சே? நானும் அந்தப் படத்தை பார்க்க ஆவலாகத்தான் இருந்தேன். படம் ரிலீஸான அப்புறம், சிலபேர் போன் பண்ணி, ‘உங்க பையன் இப்படி நடிக்கலாமா?’ன்னு கேட்டாங்க. ‘இனிமே நடிக்க மாட்டான்’னு சொல்லி சமாளிச்சேன். அதென்ன ரொம்ப மோசமான படமா?”
“நீங்க நடிச்ச பழைய படங்களில் எந்தப் படத்தை ரீமேக் பண்ணி உங்க மகனை நடிக்க வைக்கலாம்”

“ம்... ‘மவுன ராகம்’, ‘அக்னி நட்சத்திரம்’ தவிர வேறெந்தப் படம் வேணும்னாலும் அப்படிப் பண்ணலாம். அது ரெண்டும் ஒரு மேஜிக். திரும்ப என்னாலேயே கூட அந்த மேஜிக்கை செய்ய முடியுமாங்கிறது சந்தேகம்தான்.”“நீங்க கிசுகிசு மன்னனா வலம் வந்தவர். உங்க பையனைப் பத்தி அதுமாதிரி எதுவும் கிளம்ப மாட்டேங்குதே?”

“அவன் ரொம்ப நல்ல பையன். அவனைப்பத்தி அப்படி எதுவும் வராது.”“இருந்தாலும் உங்க கெத்துக்கு உங்க பையனைப் பத்தி ஒரு கிசுகிசு இல்லைன்னாகூட எப்படி?”

“பிரதர், பேட்டி எடுக்கிறீங்களா? இல்லேன்னா என்னை வெச்சி காமெடி கீமெடி பண்ணுறீங்களா?”
“குஷ்பூ மேடம் பற்றி என்ன நினைக்கிறீங்க?”

“1996லேயும் இதே கேள்விதான் கேட்டீங்க. 2018லுமா? ஓக்கே. அவங்க ரொம்ப போல்ட். எத்தனை எதிர்ப்பு வந்தாலும், அவங்களோட கருத்துலே உறுதியா இருக்காங்க. இதுமாதிரி இரும்புப் பெண்மணிகள்தான் அரசியலுக்கு வரணும்.”
“குஷ்பூ, இப்பவும் உங்களுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்தானே?”

“ஒய் நாட்? எப்பவுமே பெஸ்ட் ஃப்ரெண்ட்தான். அப்புறம் மேன், ரம்பா பத்தியும் கேட்கலாமே?”

“உங்க வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்குறப்போ திருப்தியா இருக்கா?”“வாழ்க்கை திருப்திதான். ஆனா, சினிமா கேரியரை முழுத்திருப்தின்னு சொல்ல மாட்டேன்.

நான் நடிக்க விரும்பின சில கேரக்டர்கள் எனக்கு இன்னிக்கு வரைக்கும் அமையலை. அதுமாதிரி சில கேரக்டர்களுக்கு நானே தனித்தனியா கதை எழுதி வெச்சிருக்கேன். அந்தப் படங்களை நானே இயக்கி நடிக்கிற திட்டமிருக்கு. நீங்க பணம் போடறீங்களா, ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணலாம்.”

“ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்திருக்காங்க...”“யெஸ். ஐ ஆம் வெரி ஹேப்பி. அவங்களுக்கு அரசியலில் நான்தான் சீனியர். என்னை மாதிரி பார்ட் டைம் பாலிடிக்ஸ் பண்ணலாமே.... முழு நேரத்தையும் அரசியலில் செலவிட்டா மக்களுக்கு நல்லது பண்ணமுடியும்.”

- மீரான்