அன்று மம்முட்டியின் ரசிகர்.. இன்று அவரை வைத்தே படமெடுக்கிறார்!



தமிழில் பஞ்சு அருணாச்சலம் போன்றவர்கள் பாடல்கள் எழுதுவதோடு நின்று விடாமல் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு என்று சினிமாவில் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்த சகலகலா வல்லவர்கள். மலையாளத்தில் அதுபோல சி.எச்.அகமது. அவர் மம்முட்டியை வைத்து தயாரித்த ‘பேராசிரியர் சாணக்கியன்’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகளுக்காக சென்னை வந்திருந்தபோது சந்தித்தோம்.

“உங்களைப்பற்றி தமிழ் ரசிகர்களுக்கு ஓர் அறிமுகம் கொடுங்களேன்?”

“என்னோட சொந்த ஊரு கோழிக்கோட்டுக்கு பக்கத்தில் வடகரா. சின்ன வயசுலே இருந்து வெறித்தனமான சினிமா ரசிகன். குறிப்பாக மம்முட்டின்னா எனக்கு உசுரு. அந்த ரசிகப் பண்புதான் என்னை சினிமாவுக்குள் இழுத்து வந்தது.

கதை எழுதுவது, பாடல்கள் எழுதுவதுன்னு என் திறமையை வளர்த்துக்கிட்டேன். கேரளாவின் இளையராஜான்னு இசையமைப்பாளர் மோகன் சித்தாராவைச் சொல்லுவாங்க. அவரோட இசையில் நிறைய பாட்டு எழுதியிருக்கேன். அது நான் செஞ்ச புண்ணியம்.

மம்முட்டியோட ரசிகனாக அவரோட முதல் படமான ‘மேளா’வில் தொடங்கி சமீபத்திய ‘ஆபிரகாமின் சந்ததிகள்’ வரைக்கும் முப்பத்தஞ்சு வருஷமா வாழுறேன். அவர் நடிச்ச அத்தனை படத்தையும் வரிசையா சொல்லுவேன். நடுராத்திரியிலே என்னை எழுப்பி, ‘1985ல் மம்முட்டி எத்தனை படம் நடிச்சார்?’னு கேட்டீங்கன்னா படத்தோட பேரில் இருந்து ரிலீஸ் டேட் வரைக்கும் அப்படியே ஒப்பிப்பேன்.

நானே கதை எழுதி முதன்முதலாக ‘டூ நூரா வித் லவ்’ படத்தை மம்தா மோகன் தாஸை வெச்சி எடுத்தேன். மம்முட்டியோட ரசிகனாக இருந்து, அவரை வெச்சி படம் தயாரிக்கிற தயாரிப்பாளரா என்னை உயர்த்தியது ‘மாஸ்டர்பீஸ்’. எனக்கு மலையாளத்துலே தயாரிப்பாளரா நல்ல அங்கீகாரம் இந்தப் படத்துலேதான் கிடைச்சுது.”

“தமிழில் அந்தப் படம்தான் இப்போ ‘பேராசிரியர் சாணக்கியன்’ என்கிற பெயரில் வருதா?”

“எனக்கு தமிழிலும் படம் பண்ணணும்னு ஆசை. இங்கேயே கதை எழுதணும், படங்கள் தயாரிக்கணும்னு விரும்புறேன். டிரைலர் மாதிரி ‘மாஸ்டர்பீஸ்’ படத்தை ‘பேராசிரியர் சாணக்கியன்’ ஆக்கி ரிலீஸ் பண்றேன். இந்தப் படத்ைத அஜய் வாசுதேவ் இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குநர் ஜோஷியின் உதவியாளர். ‘புலிமுருகன்’ உதய்கிருஷ்ணா கதை எழுதியிருக்கிறார்.

இந்தப் படத்துக்கு ஸ்டன்ட் சிவா, கனல் கண்ணன், மாபியா சசி, உட்பட ஐந்து சண்டை இயக்குநர்கள் பணியாற்றி இருக்காங்க. ‘போக்கிரி’ வி.பிரபாகர் வசனம் எழுதியுள்ளார். அவருடைய வசனம் அதிகம் பேசப்படும். இந்தப் படம் வெளியான உடனேயே தமிழில் அடுத்த படத்தை ஆரம்பிக்க இருக்கேன். அந்தப் படத்தை வி.பிரபாகர்தான் இயக்கப் போகிறார். பிரபாகரே நல்ல கதாசிரியர்தான். பிரமாதமா வசனம் எழுதுவார். ஆனா, ‘நீங்க கதை எழுதுங்க சார்’னு எங்கிட்டே கேட்டது எனக்கே இன்ப அதிர்ச்சி.”

“பாடலாசிரியரா, கதை வசனகர்த்தாவா இருக்கறது சினிமாவில் ரிஸ்க் இல்லை. ஆனா, தயாரிப்பாளர் ஆயிட்டா...”“நிச்சயமாக ரிஸ்க்தான். நூறு படத்துலே பாட்டு எழுதி சம்பாதிச்சதை ஒரு படம் தயாரிச்சி மொத்தமாக இழக்குறதுக்கும் வாய்ப்பு இருக்கு.

ஒரு படத்துக்கு நல்ல நட்சத்திர நடிகர்கள், நல்ல கதை, நல்ல இசை, நல்ல பாடல்கள் எல்லாமே அமைஞ்சிருந்தாலும், ‘படம் சரியில்லை’ன்னு முதல் காட்சியில் ஒரு டாக் வந்துடிச்சின்னா, முடிஞ்சது கதை. சினிமாவைப் பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டுதான் ரிஸ்க் எடுக்கிறேன். என்னோட ‘ராயல் சினிமாஸ்’ நிறுவனம், மக்களுக்குப் பிடிக்கக்கூடிய படங்களைத்தான் தொடர்ந்து கொடுக்கும்.”

- சுரா