இன்றே கடைசி!



பிலிமாயணம்

‘இன்றே கடைசி’ என்கிற வாக்கியத்தை இந்தத் தலைமுறையினர் எங்காவது பார்த்திருந்தாலோ, கேட்டிருந்தாலோ கொஞ்சம் அரிதுதான்.டூரிங் டாக்கீஸ் சினிமா காலத்தில் ‘இன்றே கடைசி’ மிகவும் பிரபலம். அப்போதெல்லாம் வாரத்துக்கு இரண்டு படங்கள் போடுவார்கள். ஒரு படத்தை எடுப்பதற்கு முன்பாக கடைசி நாள் ஏற்கனவே ஒட்டப்பட்ட போஸ்டர்களில் ‘இன்றே கடைசி’ என்று பிட்டு ஒட்டுவார்கள்.

இதைப் பார்த்தவுடனேயே, அந்தப் படத்தின் கடைசி நாள் காட்சிகளுக்குக் கூட்டம் குவியும். அது ஒரு பொற்காலம். இப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை அன்று ரிலீஸின் போதே வெளியாகும் 90 சதவிகிதப் படங்களுக்கு திங்கட்கிழமை ‘இன்றே கடைசி’தான்.

கிராமத்தில் பிறந்து சினிமா ரசிகனாக என் பயணத்தைத் தொடங்கி, சினிமாப் பத்திரிகையாளனாகத் தொடர்ந்து நான் பெற்ற அனுபவங்களை எவ்வித சமரசமும் இல்லாமல் வாசகர்களுக்கு கடந்த ஓராண்டாக இந்த ‘பிலிமாயணம்’ பகுதியில் பகிர்ந்திருப்பதாகக் கருதுகிறேன். ஒரு கிராமப்புற ரசிகனாகவே இவற்றை எழுதும்போது நான் வெளிப்பட்டேன். ஆங்காங்கே சில இடங்களில் பத்திரிகையாளன் வெளிப்பட்டிருக்கலாம்.

தமிழக மக்களையும், சினிமாவையும் பிரிக்கவே முடியாது. சினிமா, ஒவ்வொரு தமிழனின் ஜீன்களிலும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படும் செய்தி. சினிமாவில் நடிக்கவேண்டும் என்கிற ஆசையில்லாத மனிதர்கள் தமிழ் சமூகத்தில் அரிதானவர்கள். ஒரு சிலர் வெளிப்படுத்துகிறார்கள்; பலர் மனசுக்குள்ளேயே அந்த ஆசையை மூடி போட்டு மூடி வைத்துவிடுவார்கள்; சிலர் முயற்சிக்கிறார்கள்; வெகுசிலரே வெற்றி பெறுகிறார்கள். ஓரிருவர் சாதிக்கிறார்கள். தமிழர்களுக்கும் சினிமாவுக்குமான உறவை, உணர்வை முடிந்தவரை வெளிப்படுத்த இத்தொடரில் முயற்சித்திருக்கிறேன்.

இப்போதைய காலகட்டத்தில் சினிமா அருகிவரும் தொழில் என்கிறார்கள். எனக்கு அப்படித் தோன்றவில்லை. இப்போதைய வடிவத்திலேயே அது எதிர்காலத்தில் இருக்குமா என்று தெரியாது. இத்தொடர் வாசித்தவர்களுக்கு சினிமா கருப்பு வெள்ளை காலத்திலிருந்து எவ்வளவு வடிவ மாற்றம் பெற்றது என்று தெரியும். எதிர்காலத்திலும் சினிமா இருக்கும். ஆனால், இதே வடிவத்தில் இருக்குமா என்று தெரியாது.

இப்போது செல்போனில் கூட சினிமா பார்க்கிறார்கள். யார் கண்டது, எதிர்காலத்தில் நீங்கள் கண்களில் அணியக்கூடிய கண்ணாடிகளிலேயே கூட சினிமா பார்ப்பீர்கள். சினிமாவுக்கு அழிவில்லை. அதனுடைய வரலாற்றை ஒவ்வொரு தலைமுறையும் பதிவு செய்துகொண்டே இருக்கவேண்டிய கடமை இருக்கிறது. என்னுடைய கடமையை ‘பிலிமாயணத்’தில் முடிந்தவரை சிறப்பாகச் செய்திருப்பதாகவே நம்புகிறேன்.மீண்டும் வேறொரு பயணத்தில் சந்திப்போம் வாசகர்களே. அன்புடன் பைம்பொழில் மீரான்

பைம்பொழில் மீரான்