கஞ்சா விற்கும் கேரக்டரில் நடிப்பதில் தப்பே இல்லை! ஆத்மிகா துணிச்சல்ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடித்த ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் ஆத்மிகா. ‘நரகாசுரன்’, ‘காட்டேரி’ உட்பட கைவசம் கணிசமான படங்களை வைத்துள்ளார்.‘‘நான் சினிமாவில் நடிக்கிறேன் என்று என்னுடைய முதல் பட டிரைலர் வரும் வரை வீட்ல உள்ளவங்களுக்கு தெரியாது.

டிரைலர் ரெடியான பிறகுதான் வீட்ல உள்ளவர்களிடம் காண்பித்தேன். செம திட்டு கிடைக்கப் போகுது என்று நினைத்தேன். ஆனால் அப்பா, அம்மா டிரைலரைப் பார்த்துவிட்டு நல்லாயிருக்குன்னு சொன்னபோது நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவேயில்லை’’ என்று பேசத் தொடங்கினார் ஆத்மிகா.

“உங்களைப்பற்றி சொல்லுங்களேன்.”“சொந்த ஊர் கோயமுத்தூர். ஸ்கூல் வரை அங்குதான் படித்தேன். சென்னையில் டிகிரி பண்ணினேன். அப்பா ரிட்டயர்டு அரசாங்க அலுவலர். அம்மா குடும்பத் தலைவி. சாதாரண குடும்பத்திலிருந்து வந்த நான் நடிகையாக மாறியது வீட்ல உள்ளவங்களுக்கு மட்டுமில்ல, எனக்கே கொஞ்சம் ஷாக்தான்.

ஆரம்பத்துல வீட்ல எதிர்ப்பு இருந்தது. கொஞ்சம் கொஞ்சமா வீட்டில் உள்ளவர்களை காம்ப்ரமைஸ் பண்ணிதான் சினிமாவுக்கு வந்தேன். என்னுடைய முதல் படமான ‘மீசைய முறுக்கு’ டிரைலர் அவர்களை இம்ப்ரஸ் பண்ணியது”“சினிமாவில் நடிக்கும் எண்ணம் எப்படி வந்தது?”

“டிகிரி முடித்ததும் சில காலம் மாடலிங் பண்ணினேன். அதன் பிறகு வாய்ப்பு தேடும்போது அதுவா அமைந்தது. ஒரு விபத்து மாதிரிதான் நடிக்க வந்தேன். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேன் என்றுதான் சொல்லலாம்.

ஏன்னா, நானெல்லாம் சினிமாவுக்கு வருவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. எனக்கு மியூசிக் ரொம்ப பிடிக்கும். இந்துஸ்தானி, கர்நாட்டிக் போன்ற இசையை முறைப்படி கற்றுக்கொண்டேன். ஒரு பாடகியாக வரவேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியமாக இருந்தது.”

“முதன் முதலா கேமரா முன்னாடி நின்றபோது பயம் இருந்ததா?”

“ராஜீவ் மேனன் சார் இயக்கிய ஒரு குறும்படத்தில் நடித்தபோது கேமரா கோணங்கள், ஒர்க்கிங் ஸ்டைல், யூனிட்ல உள்ளவர்களின் மனநிலை உள்பட பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த வகையில் குறும்பட அனுபவம் எனக்கு கேமரா முன் நிற்பதற்கான தைரியத்தைக் கொடுத்தது.”

“கேரக்டருக்காக உங்களை எப்படி தயார் செய்து கொள்வீர்கள்?”

“எனக்கு என்ன கேரக்டர் கொடுக்கிறார்களோ அந்த கேரக்டருக்கு ஏற்றமாதிரி முதலில் மூட் செட் பண்ணிப்பேன். அடுத்து அந்த கேரக்டரை எந்தளவுக்கு வித்தியாசமா பண்ண முடியுமோ அதற்கான முயற்சிகள் எடுப்பேன். படத்துக்கு படம் என் அளவில் என்ன வித்தியாசம் காண்பிக்க முடியுமோ அதை பண்ணுகிறேன்.

நடிப்பாக இருந்தாலும் சரி, காஸ்டியூமாக இருந்தாலும் சரி, முடிந்தளவுக்கு தி பெஸ்ட் கொடுக்க ட்ரை பண்ணுவேன். என்னுடைய முதல் படத்தில் காஸ்டியூம் ரொம்ப நல்லா இருந்ததாக சொன்னார்கள்.

அதில் என்னுடைய பங்களிப்பாக நானே சில விஷயங்களில் மெனக்கெடல் போட்டேன். முதல் இம்ப்ரஷன் பெஸ்ட்டா இருக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தேன். ரெஃபரன்ஸ்க்காக ஏராளமான இன்டர்நேஷனல் படங்கள் பார்ப்பேன். டயலாக்கை முன்னாடியே வாங்கி மனதில் பதிய வைத்துக் கொள்வேன்.”

“அடுத்து?”

“கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நரகாசூரன்’ ரிலீஸுக்கு ரெடி ஆகியிருக்கு. அடுத்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் ‘காட்டேரி’. ரத்தம் குடிக்காத காமெடி பேய்க்கதை. ‘யாமிருக்க பயமே’ டீகே இயக்குகிறார். ஹீரோ வைபவ். வரலட்சுமி சரத்குமார், ‘கப்பல்’ சோனம் பஜ்வா உட்பட நான்கு ஹீரோயின்கள். ஆனால் எல்லாருக்கும் அவரவருக்கான முக்கியத்துவம் இருக்கும்.”

“உங்க ரோல்மாடல் யார்?”

“நிறையபேர் இருக்கிறார்கள். எல்லாரிடமும் ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கும். அப்படி பார்த்தால் இப்போது இருக்கும் அனைவரும் எனக்கு ரோல்மாடல்.”“தமிழ்ப் பெண்களுக்கு சினிமாவில் வரவேற்பு எப்படி உள்ளது?”

“உண்மையைச் சொல்வதாக இருந்தால், ஆரோக்கியமாக இல்லை. நம் திறமையை நிரூபிக்கும்வரை கொஞ்சம் கஷ்டம்தான். பெரிய ஹீரோயின் என்றால் அவர்களுக்கான வரவேற்பு பலமா இருக்கு. ஆனால் வளரும் நடிகைகளுக்கு அப்படி இல்லை. அதுக்காக மரியாதை இல்லை என்று சொல்லமாட்டேன். படத்துக்கு படம் ட்ரீட்மென்ட் வித்தியாசப்படுகிறது.

அந்த வகையில் நாம் என்ன மாதிரி படம் பண்ணுகிறோம் என்பது முக்கியம்.வளர்ந்த நடிகைகள் பிசினஸ் க்ளாஸ் என்றால் வளர்ந்து வரும் நடிகைகள் எகனாமிக் க்ளாஸ். சில சமயம் அதுக்காகவே பெரிய ஆளாக வரவேண்டும் என்று தோன்றும்.

வளரும் நடிகைகள் எவ்வளவு கடினமாக நடித்தாலும் நடிக்கவே வரவில்லை என்று சொல்வார்கள். பெரிய நடிகைகள் விஷயத்தில் கொஞ்சம் சிரித்தால் போதும், லேசாக கண் அசைத்தால் போதும், புகழ்ந்து தள்ளுவார்கள். சின்ன நடிகைகள் எவ்வளவு முயற்சி எடுத்தாலும் அங்கீகாரம் என்பது மிகக் குறைவு.

ஹீரோ சிக்ஸ் பேக் பண்ணினால் பெரிதா மெனக்கெடல் எடுக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆனால் அதே அளவுக்கு ஹீரோயின்களும் மெனக்கெடல் போடுகிறார்கள். அது வெளியே தெரிவதில்லை.

இங்கு தமிழ் பேசும் பெண்களுக்கு வாய்ப்பு குறைவுதான். அதை குறையாகச் சொல்லவில்லை. தமிழ்ப் பெண் என்பதற்காக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஹீரோயினுக்கான தகுதி நம்மூர் பெண்களிடம் இருக்கிறது.”

“நடிக்க விரும்பும் ரோல்?”

“எந்த கேரக்டரில் நடித்தாலும் அந்த கேரக்டர் மக்களுக்கு பிடிக்கணும். அவர்கள் மனதில் இடம் பிடிக்கணும். கேர்ள் நெக்ஸ்ட் டோராக இருந்தாலும், வாரியர் ரோல் மாதிரி இருந்தாலும் மக்களுக்கு பிடிக்கணும். எனக்குப் பிடித்த காரணத்தால் ஏதோ ஒரு கேரக்டரில் நடித்து மக்களுக்குப் பிடிக்காமல் போனால் டோட்டல் வேஸ்ட். அப்புறம், இந்த ரோலில்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்கமாட்டேன்.”

“சமீபத்தில் ரசித்த படம்?”

“நயன்தாரா நடிச்ச ‘கோலமாவு கோகிலா’. எல்லோரும் அந்தப் படத்தை குறை சொல்லாமல் ஒரு பொழுதுபோக்கு படமா பார்த்தார்கள். பொழுதுபோக்கிற்காக எப்படி படம் கொடுத்தாலும் ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்கிறார்கள். மக்கள் கவலை மறந்து சிரிக்கிறார்கள் என்றால் கஞ்சா விற்கும் கேரக்டரில் நடிப்பதில் தப்பே இல்லை.”

“நடிகைக்கான தகுதியாக நீங்கள் கருதுவது?”

“அழகு மட்டும் ஒருவரை நடிகையாக மாற்றிவிடாது. அவர்களுடைய ஆளுமை, திறமை, நடிப்பாற்றல் எல்லாம் அதில் அடங்கி இருக்கிறது.”
“உங்கள் அழகு ரகசியம்?”

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். வெல்த்தை விட ஹெல்த்துக்கு முக்கியத்துவம் தருகிறேன். சுத்தம் என்பதைத் தாண்டி சத்துள்ள உணவு சாப்பிடுவேன்.

முக்கியமா வீட்டு சாப்பாட்டுக்கு முன்னுரிமை கொடுப்பேன். அதற்கு இணை எதுவும் இல்லை. அம்மா கையில் தயாரிக்கப்பட்ட தயிர் சாதமே அமிர்தம் போல் இருக்கும். தினமும் கொஞ்ச நேரம் யோகா பண்ணுவேன்.”

“பிடித்த தத்துவம்?”

“கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பது பழமொழி. ஆனால், நம்பிக்கையோடு உங்கள் கடமையைச் செய்யும்போது பலனை எதிர்பாருங்கள்.”

- சுரேஷ்ராஜா