அப்பாவை தேடும் மகன்!



60 வயது மாநிறம்

ஆனந்த் நாக் நடித்து, கன்னடத்தில் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட ‘கோதி பன்னா சாதாரண மைகட்டு’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்.  தந்தையைத் தொலைத்துவிட்டு பதற்றமும் பரிதவிப்புமாகத் தேடி அலையும் மகனின் மன உணர்வுகளை அழகாக எடுத்துச் சொல்லும் படம்.
ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர் பிரகாஷ்ராஜுக்கு அல்சைமர் என்கிற மறதி நோய். மனைவியை புற்றுநோய்க்குப் பறிகொடுத்து தவிக்கும் அவருக்கு ஒரே மகன் விக்ரம்பிரபு மட்டுமே ஆறுதலாக இருகிறார்.

இந்த நிலையில் விக்ரம்பிரபு, பிரமோஷன் பெற்று வேலை விஷயமாக அப்பாவைப் பிரிந்து மும்பைக்குச் செல்ல நேர்கிறது. அப்பாவை  ஒரு கேர் சென்டரில்  விட்டுவிட்டு பணிக்குச்  செல்கிறார். மும்பையிலிருக்கும் விக்ரம் பிரபுவுக்கு அமெரிக்கா போகக்கூடிய ஆஃபர் ரெடி. அதற்கு முன்பாக அப்பாவைப் பார்த்துவிட்டுச் செல்ல சென்னைக்கு வருகிறார்.

அப்பாவை வெளியே அழைத்துச் சென்று வந்து கேர் சென்டர் வாசலில் விட்டுவிட்டு, அவசர வேலையாகக் கிளம்பிவிடுகிறார். திரும்பிவந்து பார்க்கும்போது அப்பாவைக் காணவில்லை. பார்க்கும் அனைவரையும்  மகனது பெயரைச் சொல்லி அழைத்துக்கொண்டிருக்கும் பிரகாஷ்ராஜ், கொலைத்திட்டத்தில் இருக்கும் சமுத்திரக்கனியிடம் மாட்டிக்கொள்கிறார். பிறகு என்ன ஆகிறது என்பதை விளக்குகிறது திரைக்கதை.

வெள்ளை கறுப்பு நாய்க் கதை,  மனைவியுடனான காதல் கதை வசனத்தையும் கடந்து கண்களாலேயே பேசுகிறார்  பிரகாஷ்ராஜ். தொலைந்துபோய் தனித்துத் திரியும்  அத்தனை  காட்சிகளிலும் அனுபவ முத்திரையை அழகாகப் பதிக்கிறார்.

முழுநீள சென்டிமென்ட் படத்தில் முழு ஈடுபாட்டோடு நடித்திருக்கிறார்  விக்ரம்பிரபு. தயக்கமில்லாமல் பிரகாஷ்ராஜ் காம்பினேஷன் காட்சிகளில் பளிச்சிடுகிறார். அப்பாவைக் காணாத ஆத்திரத்தில் காப்பக மருத்துவர் இந்துஜாவைத் திட்டுவது, ஒரு வீட்டில் சின்னக்குழந்தையைப்போல படுத்துக்கிடக்கும் அப்பாவைக் கண்டுபிடித்தவுடன் நெகிழ்வது என நடிப்பில் மெருகு காட்டுகிறார்.

‘மேயாத மான்’ இந்துஜா டாக்டர் ரோலுக்கு சரியான  பொருத்தம். கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் சமுத்திரக்கனி.  இறுதியில் அவரிடம் வெளிப்படும் மனிதாபிமானம் சிலிர்க்க வைக்கிறது. குமரவேல், சரத் ஆகியோர் கொஞ்சம் சிரிப்பு மூட்டுகிறார்கள். ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள்.

இளையராஜாவின் இசை, விவேக் ஆனந்தனின் கேமரா, டி.எஸ்.ஜெய்யின் எடிட்டிங் போன்றவை படத்தின் தரத்துக்கு தரம் சேர்க்கின்றன. வசனகர்த்தா விஜய்யின் வசனங்களில் அவ்வளவு கூர்மை. தரமான படங்களையே தருவேன் என்று சபதம் எடுத்திருக்கும் இயக்குநர் ராதாமோகன், தானெடுத்த சபதத்துக்கு மிகவும் நேர்மையாகவே வாழ்கிறார்.