அண்ணனுக்கு ஜே!ஜே போடலாம்!

நண்பர்களுடன் ஜாலியாக பொழுதைக் கழிக்கும் தினேஷ் அரசியலில் குதிக்க நினைத்து சந்திக்கும் ஆபத்துகளை சீரியஸாக சொல்லாமல் சிரிக்கும்படியாக சொல்லும்படம்தான் இந்த ‘அண்ணனுக்கு ஜே’.வேலை வெட்டி இல்லாத தினேஷ் நண்பர்களுடன் சேர்ந்து சரக்கு அடித்து மட்டையாகிறார். நேரம் கிடைக்கும் போது காதலிக்கவும் செய்கிறார்.

அவருடைய அப்பா மயில்சாமி கள்ளுக்கடை நடத்துகிறார். கள்ளுக் கடை என்பதால் அந்தக் கடையில் கூட்டம் அள்ளுகிறது. அந்தக் கடையால் உள்ளூர் தாதா ஸ்டன்ட் தீனா நடத்தும் பார் வியாபாரம் படுத்துவிடுகிறது.

தன்னுடைய அரசியல் செல்வாக்கை வைத்து மயில்சாமியை சிக்கலில் மாட்டிவிடுகிறார் தீனா. தந்தையைக் காப்பாற்றுவதற்காக கிளம்பும் தினேஷ் எதிர்பாராதவிதமாக ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அது என்ன சிக்கல், சிக்கலில் இருந்து தினேஷால் வெளியே வர முடிந்ததா என்பதை கலகலப்பாகச் சொல்லியுள்ளார்கள்.

மட்ட சேகர் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் தினேஷ். மகிமாவிடம் வழிந்து சமாளிப்பது, பேனர் வைத்து விழி பிதுங்குவது என்று காட்சிக்குக் காட்சி தூள் கிளப்புகிறார். சில இடங்களில் ‘அட்டக்கத்தி’ சாயல் தெரிவதைத் தவிர்த்திருக்கலாம்.  மகிமா நம்பியார் ஃப்ரிட்ஜில் வைத்த ஜிலேபி மாதிரி ஜில்லுன்னு இருக்கிறார். காதலி பாத்திரத்துக்கு முடிந்தளவுக்கு நியாயம் செய்திருக்கிறார்.

பணத்துக்காக நல்லவர் போல் நடித்து வஞ்சகத்தினால் லாபம் சம்பாதிக்கும் அரசியல்வாதி கேரக்டரில் பட்டையைக் கிளப்பியுள்ளார் ராதாரவி. சிரிப்பு இல்லாத மயில்சாமியின் சீரியஸ் கேரக்டர் ஆச்சர்யத்தை வரவழைக்கிறது.  கெட்டப்பாலும் மிரட்டலான நடிப்பாலும் ஸ்டன்ட் தீனா கேரக்டருக்கு பெருமை சேர்க்கிறார்.

‘‘இதென்ன இஞ்சினியரிங் சீட்டா கேட்ட உடனே எல்லாருக்கும் கொடுக்கறதுக்கு. அரசியல்டா’’ போன்ற வசனங்கள் தொய்வாகப் போகும் படத்தைத் தூக்கி நிறுத்த உதவுகின்றன.அரோல் கரோலி இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன. மாய பாண்டியின் கலை இயக்கம் நன்று. விஷ்ணு ரங்கசாமியின் கேமரா கதையோடு பயணித்து கண்களைக் கைது செய்கிறது.

அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் உள்கட்சி விவகாரங்கள் அடிமட்டத் தொண்டர்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை எளிமையான திரைக்கதையில் காமெடி கலந்து சொன்ன விதத்தில் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் ராஜ்குமார்.எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்கு போகும் ஆடியன்ஸ் படம் பார்த்துவிட்டு அண்ணனுக்கு ஜே போடுவது நிச்சயம்!