அமெரிக்கா டூ கோடம்பாக்கம்!



கொட்டாம்பட்டியிலிருந்தும், கோட்டை மேட்டிலிருந்தும்தான் கோடம்பாக்கத்துக்கு சினிமா ஆசையால் ரயில் ஏறுவார்கள் என்று யார் சொன்னது. அமெரிக்காவிலிருந்து ஒருவர் கோடம்பாக்கத்துக்கு ஃபிளைட் பிடித்திருக்கிறார். அவர் பெயர் ஆரோக்கியசாமி கிளமெண்ட்.

‘‘சென்னைதான் நான் பிறந்த மண். லயோலாவில் கல்லூரிப் படிப்பை முடித்தேன். எல்லாரையும் போல் எனக்கும் சின்ன வயதிலிருந்து சினிமா மீது மோகம் அதிகமாக இருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் படங்களை மிஸ் பண்ணாமல் பார்ப்பேன். ஒரு கட்டத்தில் ரசிகனாக மட்டுமில்லாமல் சினிமாவில் நடிகனாக கால்பதிக்க வேண்டும் என்று விரும்பினேன்.

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் தரமணி பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து படிக்க முயற்சி செய்தேன். சில காரணங்களால் அது முடியாமல் போனது. இருந்தாலும் சினிமாவில் சேர வேண்டும் என்ற முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்தேன்.

அப்போது எனக்கு ஆபத்பாந்தவனாக இருந்தவர் லிவிங்ஸ்டன். நானும் அவரும் ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள். அவருடைய உதவியால் ஏராளமான படப்பிடிப்புகளுக்குச் சென்றுள்ளேன். அதன் மூலம் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் அறிமுகம் கிடைத்தது. விஜய் நடித்த ‘குஷி’ படத்தில் சிறு வேடம் கிடைத்தது.

தொடர்ந்து ‘ஹேராம்’, ‘ஃப்ரெண்ட்ஸ்’, ‘தீனா’, ‘இனிது இனிது காதல் இனிது’, ‘மனதை திருடி விட்டாய்’ போன்ற படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்தேன். ‘விருமாண்டி’ படத்தில் கமல்ஹாசனின் நண்பராக நடித்துள்ளேன். நடிகராக சினிமா அனுபவம் கிடைத்ததால் ஒரு கட்டத்தில் உதவி இயக்குராகி டைரக்‌ஷன் பண்ண முடிவு செய்தேன்.

அந்த சமயத்தில் எனது மனைவிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததால் அவருடன் அமெரிக்கா செல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். அமெரிக்கா சென்றாலும் சினிமா மீது எனக்கிருந்த ஆர்வத்தால் அங்கேயே பல குறும்படங்களை இயக்கினேன். அதற்கு பலதரப்புகளிலிருந்து பாராட்டு கிடைத்தது. அதன் பிறகு ஒரு திரைப்படம் எடுப்பதற்கான தகுதி எனக்குள் இருக்கு என்ற திருப்தி வந்த பிறகே படம் இயக்கும் முயற்சியில் இறங்கினேன்.

சினிமாவுக்காக ஒரு வருடம் அமெரிக்காவில் இருக்கும் எனது குடும்பத்தைப் பிரிந்து, சென்னைக்கு தற்காலிமாக ஷிப்ட் ஆனேன். அப்படி சென்னை வந்து நான் இயக்கி நடித்துள்ள படம்தான் ‘முடிவில்லா புன்னகை’. எனது சொத்தை விற்று சொந்தமாக இந்தப் படத்தை தயாரித்துள்ளேன். இந்தப்படத்தின் மூலம் எனது சினிமா கனவை நிறைவேற்றிக் கொண்டாலும், இந்தப் படத்தை வெளியிட்டு நல்ல நடிகனாகவும், இயக்குநராகவும் நிரூபிக்க ஆர்வமாக உள்ளேன்’’ என்கிறார் ஆரோக்கியசாமி கிளமெண்ட்.

- சுரா