தமிழுக்கு வருகிறார் உயர்ந்த மனிதன் அமிதாப்!இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் எஸ்.ஜே.சூர்யா. கடந்த ஆண்டு ‘ஸ்பைடர்’, ‘மெர்சல்’ என வில்லத்தனத்திலும் மிரட்டிய எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பில் ‘இறவாக்காலம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் அடுத்த படத்தில் ஹீரோவாகக் கமிட்டாகியுள்ளார்.  படத்தின் பெயர் ‘உயர்ந்த மனிதன்’. இந்தப் படத்தின் மூலம் இந்தியத் திரை உலகின் பிதாமகன், அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழுக்கு முதன்முறையாக வருகிறார்.

திருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன்ஸ் படநிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமென்ட்ஸ் பிக்சர்ஸ்  இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை தமிழ்வாணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா நடித்த ‘கள்வனின் காதலி’ படத்தை இயக்கியவர்.அமிதாப்போடு இணைந்து நடிக்கும் பரவசத்தில் இருந்த எஸ்.ஜே.சூர்யாவிடம்  கேட்டோம்.

‘‘ஒரு துணை இயக்குனராக திரை உலகில் கால் பதிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் சார் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து  நடிப்பது தான் எனக்கு கிடைத்த மிகப் பெரிய வரம். நான் இந்தியில் நடிகனாக அறிமுகம் ஆகிறேன். நான் முக்கியமாக நன்றி சொல்ல  வேண்டியது இயக்குனர் தமிழ்வாணன் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் ஆகியோருக்குத்தான்.

இயக்குநர் கொண்டு வந்த கதைதான் அமிதாப் சார் வரைக்கும் இந்தப் படத்தைக் கொண்டு சென்றிருக்கிறது. இரண்டு  வருடங்களுக்கு மேலாக இந்தப் படத்துக்கான வேலைகள் நடந்து வருகிறது. திரைக்கதை மட்டும் ஒரு வருடம் எழுதப்பட்டது.  ஸ்கிரிப்டை அமிதாப் பச்சன் சாரிடம் கொண்டு சென்று கொடுத்தோம்.

ஸ்கிப்ரிட் படித்து முடித்த பிறகு அவரை இறுதியாக ஒரு முறை சந்தித்தோம். கதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, சில சந்தேகங்கள் இருக்கின்றன, அவற்றை விளக்க வேண்டும் என்றார். அதைக் கேட்ட பிறகு கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்றார். நாங்கள் சொன்ன விளக்கம் அவருக்கு திருப்தியைக் கொடுத்தது.

நான் ஏதோ சாதனை செய்து விட்டது போலப் பேசுவதாக நினைக்க வேண்டாம். இந்தப் படத்தை ஒருங்கிணைத்ததே எனக்கு ஒரு பெரிய சாதனை தான். அமிதாப் பச்சன் சாரின் 2019 காலண்டர் காட்டும்போது நானே வியந்து போனேன், ஐந்து நாட்கள் கூட எங்கள் படத்துக்கு அதிகமாக ஒதுக்கமுடியாது என்ற நிலையில் மிகவும் பிஸியாக இருந்தார். 2019ல் மட்டும் ஆறு  படங்கள், கேம் ஷோ,  விளம்பரங்கள் என இந்த வயதிலும் அவ்வளவு பிஸியாக இருக்கிறார்.

சாதனை படைக்க நினைக்கும் அனைவருக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். இந்தப் படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு நடிகர் திலகம் சிவாஜி சார் அவர்களின் ‘உயர்ந்த மனிதன்’. இந்தத் தலைப்பை ஏவிஎம்மிடமிருந்து வாங்கியிருக்கிறோம்.

இந்தப் படத்துக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தவர்களில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். நான் ்கஷ்டத்தில் இருக்கும்போது இயக்குனர் சொன்ன வார்த்தைகளே எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. இந்தப் படம் இந்தியா முழுக்க மட்டுமின்றி சீனா வரை போகும். கதை அப்படி அமைந்திருக்கிறது’’ என்கிறார் எஸ் ஜே சூர்யா.

அவரைத் தொடர்ந்து இயக்குனர் தமிழ்வாணன் பேசினார்.‘‘எனது கனவு நிறைவேறியது. இறைவனிடம் இதை விட நான் வேறு என்ன கேட்டுப் பெற்று  விட முடியும். உலகெங்கும் புகழ் பெற்று , இந்தியத் திரை உலகின் முடி சூடா மன்னனாக திகழும் அமிதாப் சாருடன் பணிபுரிவது மிகப் பெரிய பாக்கியம்.  தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் என் இயக்கத்தில்தான் என்பதே எனக்கு மிகப் பெரிய பெருமை.

இந்தக் கதையை எழுதி முடித்தபோதே எஸ்.ஜே.சூர்யா சாரிடம் சொன்னேன். இந்தப் படத்தை ஆசைப்பட்டது மட்டும்தான் நான். படத்துக்கு இவ்வளவு ஹைப் கிடைக்கக் காரணமாக இருந்தது எஸ்.ஜே.சூர்யா சாரும், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் சாரும் தான். அமிதாப், எஸ்.ஜே.சூர்யா என டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இது. தமிழ், இந்தி என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. படத்துக்கான தலைப்பை ரஜினி சார் அறிவித்ததோடு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இந்தப் படம் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இருக்கும்.’’

- எஸ்