வஞ்சகர் உலகம்



கள்ளக்காதல் உலகம்!

‘ஜோக்கர்’ குரு சோமசுந்தரம், ‘வஞ்சகர் உலகம்’ மூலம் தாதாவாகி இருக்கிறார்.ஓர் இளம் பெண் கொலை செய்யப்படுகிறார். அது தொடர்பான போலீஸ் விசாரணை. போலீஸுக்கு உதவும் துப்பறியும் பத்திரிகையாளர். இடையில் போதை மருந்துக் கடத்தல் டானின் வாழ்க்கை. கள்ளக்காதல். ஓரினச்சேர்க்கை என்று கதைக்களம் கன்னாபின்னாவென்று அலைபாய்ந்திருக்கிறது.

இல்லத்தரசியான சாந்தினி எதிர்வீட்டுப் பையனோடு தகாத உறவை வைத்துக்கொள்கிறார். ஒருகட்டத்தில் சாந்தினி கொலை செய்யப்படுகிறார். கொலை விசாரணையில் இளைஞனோடு சேர்த்து போதை மருந்து கடத்தல்காரரான குருசோமசுந்தரத்தையும் போலீஸ் விசாரிக்கிறது. உண்மைக் குற்றவாளி யார், கொலைக்கான காரணம் என்ன என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராகச் சொல்லியுள்ளார்கள்.

கேங்ஸ்டர் வேடத்தில் நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். போதை மருந்துக்கு அடிமையான அவர் சைக்கோவாக நடித்து அநேக இடங்களில் லைக் வாங்குகிறார்.

கதையின் அடிநாதமே சாந்தினியின் கேரக்டர்தான். ஆனால் படுக்கையறைக் காட்சியைத் தவிர சொல்வதற்கு வேறொன்றும் சிறப்பாக இல்லை. கள்ளக் காதலனாக வரும் சிபு புவனசந்திரன் அதிரிபுதிரி நடிப்பில் பின்னியெடுக்கிறார். ஜர்னலிஸ்ட்டாக வரும் விசாகன், அனீஷா அம்ரோஸ் காம்போ பேக் கச்சிதம். அழகம்பெருமாள், ஜான்விஜய், ஜெயப்பிரகாஷ் என அனைவரும் தங்களது வேடத்திற்கு முடிந்தளவுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

சாம் சி.எஸ் இசையில் ‘தீயாய் நீ’ பாடல் மிரட்டல் ரகம். பின்னணி இசையிலும் கவனிக்க வைக்கிறார். ரோட்ரிகோ டெல்ரியோ ஹெரெரா மற்றும் சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.

சாந்தினியைக் கொலை செய்தது யாராக இருக்கும் என்ற கோணத்தில் படம் நகரும் போது, அந்த இடைவேளைக் காட்சி படத்தின் மீது சற்று ஆர்வத்தை ஏற்படுத்தினாலும், இரண்டாம் பாதி மிகப்பெரிய தொய்வை ஏற்படுத்துகிறது.

போலீஸ் என்கவுண்டரில் இருந்து தப்பிக்கும் குரு சோமசுந்தரம், போலீஸ் ஸ்டேனுஷுக்கு வந்து தனது நண்பரை மீட்பது, சிறைக்கைதியான ஜான்விஜய் போலீஸ்காரர்களைச் சுட்டுவிட்டு தப்பிப்பது போன்ற காட்சிகள் காதுல பூ.மொத்தத்தில், எதிர்பார்ப்போடு வரும் ரசிகர்களை வஞ்சித்த பாவத்துக்கு இயக்குநர் மனோஜ் பீதா அடுத்த படத்தில் பிராயச்சித்தம் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.