கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியை கூவி விற்ற சமந்தா!




அதிகாலைப் பனியில் பூத்த ரோஜா போல திருமணத்துக்குப் பிறகும் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார் சமந்தா. புகுந்த வீடான அக்கட தேசத்தில்  செட்டிலானவர், லாங் லீவ் எடுத்துக் கொண்டு பிறந்த வீட்டுக்கு வந்திருக்கிறார். ‘இரும்புத்திரை’ வெற்றிவிழா, ‘யூ-டர்ன்’ மற்றும் ‘சீமராஜா’  ரிலீஸென்று சென்னையைச் சுற்றிக்கொண்டிருக்கிறார். தி.நகரில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தவரைச் சந்தித்தோம்.

“எப்படி இருக்கீங்க?”

“சூப்பரா இருக்கேன். தெலுங்கு தேசத்தோட பெருமைக்குரிய குடும்பத்தின் மருமகள் ஆகிட்டேன். திருமணத்துக்குப் பிறகு நடித்த  ‘இரும்புத்திரை’, ‘நடிகையர் திலகம்’, ‘யூ-டர்ன்’, ‘சீமராஜா’ போன்ற படங்கள் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கு. தெலுங்கிலும்  ‘ரங்கஸ்தலம்’ பம்பர் ஹிட் அடிச்சிருக்கு. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.”

“உங்க கணவர் நாகசைதன்யா என்ன சொல்றாரு?”

“என் கணவர் பெண்களை மதிப்பவர். நான் நானாகவே வாழவேண்டும் என்று விரும்புவார். வீட்டில் இருக்கும்போது சினிமாவைப் பற்றியோ,  படப்பிடிப்பில் இருக்கும்போது வீட்டைப் பற்றியோ பேசாத காரணத்தால் திருமண வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை.  திருமணத்துக்கு முன்னால் கூட இவ்வளவு படங்கள், இவ்வளவு வேகமாக நடித்திருப்பேனா என்று தெரியவில்லை. இப்போது தமிழ்,  தெலுங்கு இரண்டிலும் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. தெலுங்கில் ஹிட் கொடுத்தது போல் தமிழில் கொடுக்க முடியவில்லையே  என்ற கவலை இருந்தது. அதைப் போக்கும்விதமாக சமீபத்திய படங்கள் அமைந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு நான் நடிப்பை விட்டுக்  கொடுத்து விடுவேன் என்று வீட்டில் உள்ளவர்களும் நினைத்தார்கள். இப்போது நான் படங்களில் தொடர்ந்து நடிக்க காரணமே என் கணவர்  கொடுக்கும் ஊக்கம்தான்.”

“யூ-டர்ன்?”

“கன்னடத்தில் வெளியான ‘யூ-டர்ன்’ படத்தின் டிரைலரே  என்னை மிகவும் டிஸ்டர்ப் பண்ணியது. டிரைலரைப் பார்த்த விநாடியே இந்தப்  படத்தை மிஸ் பண்ணக்கூடாது என்று நினைத்தேன். ஆரம்பத்தில் இந்தப் படத்தை நானே தயாரிக்க திட்டமிட்டேன். ஒரே சமயத்தில் நடிப்பு,  தயாரிப்பு என்று இறங்கினால் கவனம் சிதறும் என்பதால் என்னால் நடிக்க மட்டுமே முடிந்தது. பத்திரிகையாளர் வேடத்தில் நடித்தது புது  அனுபவம்.”

“சீமராஜா?”

“இந்தப் படமும் எனக்கு நல்ல பெயரைக் கொடுத்திருக்கிறது. சிலம்பம் சுற்றும் காட்சியை நிறையப் பேர் பாராட்டினார்கள். ஒரே நாளில்  நான் நடித்த இரண்டு படங்கள் வெளியாகி இருப்பது மகிழ்ச்சி. தெலுங்கில் என் கணவர் நடித்த படமும் அதே நாளில்தான் ரிலீஸ் ஆனது.”

“கணவன், மனைவி நடித்த படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகும்போது குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தாதா?”


“கணவன், மனைவி நடித்த படங்கள் மோதுவதால் என்ன நடக்குமோ? என்று பலர்  கவலைப்படுகிறார்கள். எங்களுக்குள் எந்த ஈகோவும்  கிடையாது. இரண்டு படங்களும் ஜெயிக்க வேண்டும் என்றுதான் விரும்புவோம்.  நடிகை என்பதைத் தாண்டி கணவரின் படம் ஜெயிக்க  வேண்டும் என்று விரும்புவேன். என்ன இருந்தாலும் நான் மனைவி; அந்த வகையில் புருஷனுக்குத்தான் முதலிடம்.”

“நிஜ வாழ்வில் ‘யூ - டர்ன்’ அடித்த சம்பவங்கள் இருக்கிறதா?”

“இரண்டு நிஜ யூ - டர்ன் சம்பவங்களால் என் வாழ்க்கை மாறியுள்ளது. படித்துக் கொண்டிருந்த நான் சினிமாவுக்கு வந்தது முதல் யூ -  டர்ன்; திடீரென எனக்கு திருமணம் நடந்தது இன்னொரு யூ - டர்ன்.”

“வெற்றி, தோல்வியை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?”


“வெற்றி, தோல்வியைக் குறித்து நான் அதிகமாகக் கவலைப்படமாட்டேன். நான் நடித்த படம் வெற்றி பெறும்போது, அந்த சந்தோஷத்தைக்  கொஞ்ச நேரம் அனுபவிப்பேன். நிரந்தரமாக தலைக்குக் கொண்டு போகமாட்டேன். அதே சமயம் தோல்வி அடையும் போது கவலைப்படவும்  மாட்டேன். வெற்றி, தோல்வியை ஒரே மாதிரியான மனநிலையில் அணுகு வேன். ஆரம்பக் காலங்களில்தான் படம் தோல்வி அடைந்தால்  துவண்டு போயிடுவேன்.”

“சமீபத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியை கூவிக் கூவி விற்றீர்களாமே?”

“ஒரு டிவி நிகழ்ச்சிக்காக நடந்த நிகழ்வு அது. என்னால் ஒரு குடும்பம் பிழைக்கும் எனும்போது என்னால் மறுக்கமுடியவில்லை. 5  தக்காளியை 1000 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கினார்கள்.”

“திருமணத்துக்குப் பிறகு உங்களுக்கு என்ன மாதிரி வேடங்கள் அமைகிறது?”


“சினிமாவில் பெண்களை வேறு மாதிரி பார்க்கிறார்கள். இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். வீட்டிலேயே  மூளையைக் கழற்றி வைத்துவிட்டுத்தான் வர வேண்டும் என நினைப்பார்கள்.  சில படங்களில்தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். எனக்கு ‘யூ - டர்ன்’ அதுபோன்ற படம்.முன்பைவிட இப்போது படங்களை கவனமாகத் தேர்வு செய்கிறேன். மெச்சூரிட்டியை வெளிப்படுத்தும்விதமாக  வித்தியாசமான வேடங்களில் நடிக்க விருப்பப்படுகிறேன்.

இரண்டு ஹிட் போதாது. சினிமாவில் தாக்குப் பிடிப்பது சாதாரணம் அல்ல; இப்போது ஜஸ்ட் பாஸ். அவ்வளவே.திருமணத்துக்குப் பிறகும்  ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா போன்றவர்கள் கலக்குகிறார்கள். அந்த வரிசையில் நானும் கலக்குவேன்.  ஏன்னா, திருமணமான நடிகை  என்ற இமேஜ்ஜை வலுவான கதாபாத்திரங்களால் மட்டுமே உடைக்க முடியும். என்னுடைய தி பெஸ்ட் கொடுக்கும்போது யாராலும்  என்னைப் புறக்கணிக்க முடியாது.”

“உங்கள் நடிப்புத் திறமை முழுமையாக வெளிப்பட்ட படம் எது?”

“தெலுங்கில் நடித்த ‘ரங்கஸ்தலம்’ படத்தைச் சொல்லலாம். ‘நடிகையர் திலகம்’ படத்தில் சாவித்திரி அம்மா கேரக்டரில் நடிக்க  முடியாததற்குக் காரணம் என்னால் அவர் கேரக்டருக்கு நியாயம் செய்யமுடியாது என்று தெரிந்தது. சாவித்திரி அம்மா நடிப்புத் திறமைக்கு  ஒரே ஷாட் போதும். தொடர்ந்து பயோகிராபி படங்கள் பண்ணுவீர்களா என்று கேட்கிறார்கள். எனக்கும் அந்த ஆசை இருக்கு. அதைவிட  பேன்டஸி படங்கள் பண்ணணும். இதுவரை நான் நடித்திராத வேடமாக இருக்கணும். ஆக்‌ஷனா இருந்தாலும் ஓக்கே.”

“ஸ்ரீரெட்டி?”


“தெலுங்கு சினிமா அல்லது தமிழ் சினிமாவில் மட்டும்தான் ‘காஸ்டிங் கவுச்’  இருக்கிறதா என்பதுதான் என்னுடைய கேள்வி. பெண்களுக்கு  எதிரான வன்கொடுமைகள் அனைத்துத் துறைகளிலும் உள்ளது.  சினிமாவில் மட்டுமில்ல, எல்லா துறைகளிலும் நல்லவர்களும்  இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். சினிமாவைப் பொறுத்தவரை வஞ்சகர்களைவிட நேர்மையானவர்கள் நிறைய பேர்  இருக்கிறார்கள்.”

“எமோஷனல் காட்சிகளுக்கு க்ளிசரின் யூஸ் பண்ணுவீர்களா?”


“க்ளிசரின் எப்போதும் யூஸ் பண்ணமாட்டேன். கெளதம் மேனன்  சார் படத்தில் சீன் ஆரம்பிக்கும் போது சிரிக்கணும். முடிக்கும்போது  அழணும். க்ளிசரின் போட்டால் 100 சதவீத நடிப்பைக் கொடுக்கமுடியாது என்பது என் கருத்து. அதுமட்டுமில்ல, கில்டி ஃபீல் இருக்கும்.  எந்தவொரு விஷயமும் பழகினால் சரியாகிவிடும். அதுபோல் க்ளிசரின் இல்லாமலேயே நடிக்கப் பழகிவிட்டேன்.”

 “அடுத்து?”


“விஜய் சேதுபதியுடன் ‘சூப்பர் டீலக்ஸ்’. என்னுடைய கேரக்டரை இப்போது சொன்னால் சுவாரஸ்யம் குறைந்துவிடும். சினிமாவை நான்  எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை படம் பார்க்கும்போது புரிந்துகொள்வீர்கள். பாக்ஸ் ஆபீஸ் பற்றி கவலைப்படாமல் இயக்குநர் தியாகராஜன்  குமாரராஜா கதையமைத்துள்ளார். விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்பட அனைவருமே பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்  கதைக்காகவும் இயக்குநருக்காகவும் நடித்துள்ளோம்.”

- சுரேஷ்ராஜா